நூல் அரங்கம்

இந்திய பாரம்பரியத்தில் சுவை

25th Jan 2021 10:26 AM

ADVERTISEMENT

இந்திய பாரம்பரியத்தில் சுவை- லட்சுமி ராமசுவாமி; பக்.266; ரூ.500; ஸ்ரீமுத்ராலயா, ஜி-1, என்எஸ் குடியிருப்பு, 19/4, கிழக்கு எல்லையம்மன் கோயில் தெரு, கோட்டூர், சென்னை- 600 085.
 சாத்தனார் எழுதிய சங்க கால நூலான கூத்த நூல், நாட்டியத்தின் உட்கூறாக அமைந்த "சுவை' பற்றி விரிவாக விளக்குகிறது. இந்நூலுக்கு கவிஞர் ச.து.சு.யோகியார் சிறப்பான விளக்கவுரை எழுதியுள்ளார். அவரின் விளக்கவுரையோடு வடமொழியில் "ரஸம்' குறித்து எழுதப்பட்ட பல நூல்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
 தொல்காப்பியத்தில், சுவை எனப்படும் மெய்ப்பாடு எட்டு வகை என்று குறிப்பிட்டிருந்தாலும் பின்னர் வந்த இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்கள் துணைப்பட்டியலில் ஒன்பதாவது சுவையையும் குறிப்பிட்டிருப்பதைச் சிறப்பாக ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.
 சுவை என்பது இத்தனை வகைதான் என்று உறுதியாக கூற இயலாதபடி பல நூல்களும் பல மாறுபட்ட கருத்துகளையே முன்வைக்கின்றன. ஆனாலும் " நவரசம்' என்பதே பெருவழக்காக உள்ளது.
 தொல்காப்பியம் நகை என்பதை முதலில் வைக்கிறது. உவகை என்பது இறுதியில். வடமொழி நாட்டிய சாஸ்திரம் சிருங்காரத்தை முதலிலும் அற்புதத்தை இறுதியிலும் வைக்கிறது. தமிழில் சிருங்காரம் என்பது தனிரசமாக இல்லாமல் உவகை என்பதில் சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறே வீரம் என்பதும் பெருமிதத்தின் ஒரு கூறாக உள்ளது. தண்டியலங்காரம் வீரத்தை முதலில் வைக்கிறது. இவ்வாறு தமிழுக்கும் வடமொழிக்கும் சுவையின் வகைகளிலும் தன்மைகளிலும் பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன. அவற்றைச் சிறப்பாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT