நூல் அரங்கம்

வண்ணநிலவன் சிறுகதைகள்

18th Jan 2021 08:31 AM

ADVERTISEMENT

வண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம் - "மேலும்' சிவசு;  பக்.240; ரூ.240; மேலும்  வெளியீட்டகம், 9, ரயில்வே ஸ்டேஷன்ரோடு, பாளையங்கோட்டை-627002.  

ஆண்களும் பெண்களும் அவரவர்களுடைய பலங்களோடும், பலவீனங்களோடும் வலம் வரும் வண்ண நிலவனின் 15 சிறுகதைகளின் வாசிப்பனுபவ தொகுப்பு இந்த நூல். வாழ்ந்து சரிகிற குடும்பம், புலம் பெயர்கிற சூழலில், குடும்பத்தை நிர்வகிக்கும் புருஷனுடன் வாழாத சித்தி எடுக்கும் துணிச்சலான, அதிர்ச்சியான  முடிவுதான்  "எஸ்தர்'   சிறுகதை. 

பூர்வீக பூமியை விட்டுப் பிரிவது லேசுப்பட்ட காரியமா? கனகச்சிதத்துடன் வரையப்பட்ட பெண்ணோவியமாக எஸ்தரைப் படைத்துள்ளார் வண்ணநிலவன் என்றால் அது மிகையல்ல.

வாழ்ந்து  கெட்டவன், தினசரி வாழ்க்கையில்  சந்திக்கிற தருணங்களைச் சித்திரிப்பது "அவர்கள்'   சிறுகதை.  அக்காவுக்கு திருமணமாகவில்லை. தம்பிக்கு வேலை கிடைக்காத வேதனை.  அக்காவும் தம்பியும் மனத்துயரங்களை சொற்களால்,  விம்மி எழும் விசும்பல்களால் ஒருவருக்கொருவர் தங்கள் மனத்தொய்வை சரி செய்ய  முயலும் உணர்ச்சி பிரவாகம் "கரையும் உருவங்கள்'. 

ADVERTISEMENT

சாதி, மத உணர்வுகளால் உறவுகள் அழிக்கப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது "அழைப்பு' சிறுகதை. 

நல்ல சிறுகதைகள் வாசகனைத் தன்னோடு பயணிக்கச் செய்யும். தொகுப்பிலுள்ள  அனைத்துக் கதைகளுமே அந்த ரகம். வாசிப்பனுபவத்தை ஒவ்வொரு சிறுகதை முடிவிலும் சுவாரசியத்துடன் சேர்த்திருப்பது சிறப்பு. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT