வால்மீகி அறம் - ராமாயணக் கதைகளும் நீதிகளும் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.432; ரூ.395; ப்ரெய்ன் பேங்க், சென்னை - 17; )044- 2432 8238.
""வால்மீகி அடிப்படையில் கவிஞர் அல்ல, ஞானியர்களைச் சந்தித்ததால் பெற்ற ஞானத்தின் அடிப்படையில் ராமாயணத்தை எழுதினார். அதுவும் நாரதர் கூற, அந்தக் கதையை எழுதியதாகவும், ஆரம்பத்தில் ராமசரிதம், சீதை மகாத்மியம், பௌலஸ்தியரின் வதம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார். ஆனால், இறுதியில் ராமாயணம் என்பதே நிலைத்துவிட்டது'' என்கிறார் நல்லிகுப்புசாமி செட்டியார்.
அதுமட்டுமின்றி வால்மீகியும், ராமரும் சம காலத்தவர் என்கிறார். முதலில் ராமாயணத்தில் ஆறு காண்டங்கள் மட்டுமே இருந்தன. பிற்பகுதியில் வரும் உத்தரகாண்டம் பிற் சேர்க்கை என்றும் வால்மீகி ஒரு கதாபாத்திரமாக வருவதும், ஆய்வுக்குரியது என ஆய்வாளர்கள் கூறுவதாக - "வால்மீகி ஓர் அறிமுகம்' பகுதியில் விவரிக்கிறார்.
"வால்மீகி அறம்' - என்ற இந்த நூலில் 60 கதைகள் உள்ளன. அனைத்தும் ராமாயணத்தில் வருபவையே. ஆனால் இந்த கதைகளைச் சொல்லும் விதம் மாறுபட்டது.
ஓரிரு வரிகளில் முன்னுரை - கதை - கதையில் சொல்லப்பட்ட அறம் - பொருத்தமான திருக்குறள் - அதன் பொருள் என வகைப்படுத்தி எழுதி இருக்கிறார்.
எந்த கதாபாத்திரத்தையும் சிறுமைப்படுத்தவில்லை. கதைப்போக்கில் வருவதை வாசகர்கள் புரிந்து கொள்ளும் தொனியில் சொல்லியிருக்கிறார். ராவணன், மந்தரை பாத்திரங்களும் கூட அப்படித்தான்.
மந்தரைக்கு அவர் கொடுத்த தலைப்பு : கதை - வசனம்- இயக்கம்: மந்தரை என்பதாகும். அடுத்தடுத்து மூன்று கதைகளில் மந்தரை பேசப்படுகிறார். வரம் கேட்பதோ - கொடுப்பதோ உடனடியாகச் செய்துவிட வேண்டும்; காலதாமதம் கூடாது என்று அந்த மூன்று கதைகளின் அறமாக வெளிப்படுத்துகிறார்.
பிற்சேர்க்கையில் ராமர் காலத்து 56 தேசங்கள், ராமருக்கு முந்தைய 67 அரசர்களின் பெயர்கள், ராமருக்குப் பின் வந்த 50 அரசர்களின் பெயர்கள் எனப் பட்டியலிட்டிருப்பது - சிறப்பான அம்சமாகும்.
நிறைவுரையாக சீதை வனவாசம்- லவ குசர்களின் பிறப்பு, ராமர் - லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோரது பிள்ளைகள் ஆள்வதற்காக ராஜ்யங்களை ஒதுக்கீடு செய்வது போன்றவையுடன் இந்நூல் முடிகிறது.
அனைவருக்கும் தெரிந்த கதை என்றாலும் வால்மீகியின் ராமாயணத்தை உள்வாங்கி கதைகளைப் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.