நூல் அரங்கம்

புனிதம் தேடும் புதினம்

4th Jan 2021 12:08 PM

ADVERTISEMENT

புனிதம் தேடும் புதினம் - கௌதமன் நீல்ராஜ்; பக்.110; ரூ.70; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113; )044-2254 2992.
 தமிழில் வட்டாரக் கதைகள், பெண்ணியக் கதைகள், தலித்தியக் கதைகள், முற்போக்குக் கதைகள் என்று பல வகைகளில் கதைகள் வெளிவந்திருந்தாலும், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் கதைகள் மிகவும் குறைவு. இந்தக் குறும்புதினம் அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது.
 கிராமத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்த ஒருவன், தன் பதின்ம வயதில் பெண்ணாக மாற்றமடைவது, அதனால் தன் வீட்டைவிட்டு வெளியேறி திருநங்கைகள் குழுவில் இணைந்து விடுவது, பின்னர் அரசுப் பணியில் சேர்வது, காதல் வயப்படுவது, அதை வெளிப்படுத்துவதில் உள்ள இடர்ப்பாடு, முடிவில் பெற்றோரைச் சந்திப்பது, மகளாக மாறிவிட்ட தங்கள் மகனை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வது - இவைதான் இக்கதையின் உள்ளடக்கம்.
 கதை மாந்தர்களின் பெயர்கள், ஊர்களின் பெயர், நதியின் பெயர் என்று எல்லாமே (பெரும்பாலும்) தூய தமிழில் இருப்பது மட்டுமல்ல, பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலும், ஆசிரியர் கூற்றாகக் கூறப்படும் செய்திகளும் கூட தூய தமிழிலேயே இருக்கின்றன (சில இடங்களில் கவிதை வேறு). இது ஒரு புதுமைதான் என்றாலும் வாசிப்புச் சுவையை அது குறைத்துவிடுவதை மறுப்பதற்கில்லை. கதை நிகழும் காலகட்டத்தில் நரியை வேட்டையாடுகிறார்கள், விருந்தினருக்கு கிழங்கும் நீரும் தருகிறார்கள், துணங்கைக் கூத்து நடக்கிறது, அரசுப் பணி வாய்ப்பு கிட்டுகிறது - இவற்றால் கதை நிகழும் காலத்தை வரையறுக்க இயலாமல் போகிறது.
 திருநங்கையைப் பெற்றோர் ஏற்றுக்கொண்ட முடிவு சுபமானது; அவருடைய காதலையும் ஆசிரியர் கை கூட வைத்திருந்தால் முடிவு இரட்டிப்பு சுபமாக இருந்திருக்கும். திருநங்கையர் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவு செய்த வகையில் இது தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT