நூல் அரங்கம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார் திருக்கோயில்கள்- ஒரு பண்பாட்டு ஆய்வு

4th Jan 2021 12:06 PM

ADVERTISEMENT

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார் திருக்கோயில்கள்- ஒரு பண்பாட்டு ஆய்வு - பி.ஆர்.நரசிம்ஹன்; பக்.384; ரூ. 350; விஷ்ணு பதிப்பகம், 10 - சி, கிழக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை -625009.
 தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கோயில்கள் ஏராளமாக உண்டு என்றாலும் கூட, தமிழரின் முதல் நிலத்து முதல் கடவுளாக ஏற்று வணங்கப்படும் முருகனுக்குரிய தனிச்சிறப்பு மிக்க கோயில்கள் ஆறு.
 "ஆறுபடை வீடு' என்று அழைக்கப்படும் இவற்றில் மூன்றாவது படைவீடான பழனி எனப்படும் திருவாவினன்குடி தண்டாயுதபாணி சுவாமி கோயில், புராண அடிப்படையில் அக்கோயிலோடு தொடர்புடைய வேறு மூன்று கோயில்கள் ஆகியவை குறித்த அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு இந்நூலாக உருவாகியிருக்கிறது.
 இந்த நான்கு திருக்கோயில்களின் தோற்றம், வளர்ச்சி, புராணங்கள், விழா மரபுகள், சமுதாயப் பணிகள், நிர்வாக முறைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் தனது ஆய்வுக்கு அடிப்படையாக கல்வெட்டுகள், செப்பு பட்டய செய்திகளைக் கொண்டிருப்பதால், தரவுகள் ஐயத்திற்கு இடமின்றி அமைந்துள்ளன.
 பல்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் பழனி எவ்வாறு சிறப்புற்று விளங்கியது என்பதை இந்நூல் வழியே நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.
 முருக வழிபாடு தோன்றியவிதம், வளர்ந்த முறை, புராணங்களிலும், இதிகாசங்களிலும் , காப்பியங்களிலும் , இலக்கியங்களிலும், வரலாறுகளிலும் முருகன் குறித்து சுட்டப்படும் இடங்கள், முருகன் என்னும் பெயர் குறித்த ஆய்வு இவையெல்லாம் ஆசிரியரின் புலமையையும் உழைப்பையும் புலப்படுத்துகின்றன.
 பழனி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்கள் மட்டுமல்லாது, அன்றாட வழிபாட்டு முறைகள் குறித்தும் விரிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
 நூலின் இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்களும், புகைப்படங்களும் நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு வலு சேர்க்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT