நூல் அரங்கம்

ஈரம்

4th Jan 2021 12:09 PM

ADVERTISEMENT

ஈரம் - பூபதி பெரியசாமி; பக்.136; ரூ.120; கவி ஓவியா பதிப்பகம், டிஎஃப்2, வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/ 7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
 இத்தொகுப்பில் அனைத்துக் கதைகளிலும் உள்ள நிகழ்வுகள், தீமைகளை எப்படிக் களைவது என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளன.
 கோயிலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையை பெரிய பாதையாக மாற்ற அந்தப் பகுதியில் உள்ள நிலங்களை கோயில் நிர்வாகம்கையகப்படுத்துகிறது. இதனால் கீரைத் தோட்டம் வைத்திருக்கும் தாயம்மா பாதிக்கப்படுகிறார். இது தொடர்பான ஊர் பஞ்சாயத்து கூடும்போது ஒரு பெண் தன் மேல் சாமி வந்தது போல நடித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதைத் தடுக்கிறாள். இவை "மனிதம் சாகவில்லை' என்ற கதையில் வரும் நிகழ்வுகள். தீராத நோய் வாய்ப்பட்ட தன் மகள் ஆண்டாளைக் கருணைக் கொலை செய்யும்படி கூறும் தோழியின் பேச்சைக் கேட்டு குழம்புகிறாள் மஞ்சுளா. அவளுடைய மகன் முகிலன் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியை, விபத்துக்குள்ளாகி படுத்த படுக்கையாகக் கிடக்கும் தன் கணவனின் புகைப்படங்களைக் காட்டி மஞ்சுளாவின் மனதை மாற்றுகிறார் "ஈரம்' சிறுகதையில்.
 வேலைக்குப் போகும் மூத்த மருமகள் ரம்யா, வீட்டுப் பொறுப்புகள் எதையும் கவனிக்காமல் தனிக்குடித்தனம் போக நினைக்க, புதிதாக வந்த இளைய மருமகள் கயல் அவளுக்கு நேர் எதிராக செய்த வேலையை விட்டுவிட்டு வீட்டுப் பொறுப்புகளில் மூழ்கியிருப்பதைச் சொல்லும் "தாயாய் அவள்' சிறுகதை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மேன்மையை உணர்த்துவதற்காக நகரத்துப் பிள்ளைகளைக் கிராமத்துக்கு அழைத்துச் செல்லும் தாத்தாவின் பண்பைச் சித்திரிக்கும் "கோடைப் பயணம்' சிறுகதை, உள்ளூர் பெரிய மனிதர்களின் ஈகோ பிரச்னை காரணமாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் கோயிலைப் பராமரிக்க, அந்த ஊர் காவல்துறை ஆய்வாளர் சிவனும், துணைமாவட்ட ஆட்சியர் காதரும் சேர்ந்து மேற்கொள்ளும் நாடகத்தைச் சொல்லும் "பயணம்' சிறுகதை என இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் மக்கள் மனதில் நல்ல சிந்தனைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT