அரூபவித்து - எஸ்.சங்கரநாராயணன்; பக்.160; ரூ.140; நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை-92.
அடித்தளத்திலுள்ள சாமான்யர்களைப் பற்றிய 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
உற்சாகம் பிறரோடு பகிர வல்லதாகவும், துக்கம் தனக்குள்ளேயே பேசிக் கொள்வதாகவும் ஆகிவிடுவதை "யானைக் கூண்டு' சிறுகதையில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
ஜாதி பயத்தில் தனித்தனியே தமக்குள்ளேயே குமைந்து மடியும் கிராமத்து காதல் கதை "கிணறு'. ஒதுக்கப்பட்ட முதல் மனைவி அவளுடைய குழந்தையின் உள்ளக்குமுறல்களைக் காட்சிப்படுத்துகிறது "பையன்'. கணவனின் கயமைத்தனத்தால் திசை மாறி விலைமகளாக உருமாறிய சாதாரணப் பெண்ணின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறது "நாலு விரற்கடை'
ஓடி ஓய்ந்துபோன ரயில் பெட்டி ஒன்று புழக்கமற்ற தண்டவாளத்தில் உதவாக்கரையாய் நீண்ட நாட்களாய் நின்று கொண்டிருக்கிறது. அந்த ரயில்பெட்டியோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தவிக்கும் ஓய்வு பெற்றவனின் மனநிலை சித்திரிப்புதான் "தனித்து விடப்பட்ட ரயில் பெட்டி' சிறுகதை.
"ஆயுதம் ', " மணல் ரேகை', "நுரை' கதைகளும் வித்தியாசமான கருவில் நூலாசிரியரின் எளிமையான சொற்பிரயோகத்தில் வாசகர்களை ஈர்க்கின்றன.
தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் ஏற்கெனவே பல இதழ்களில் பிரசுரம் ஆனவை. கதைகளின் முடிவில் அவை வெளியான இதழ்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கலாம்.