வாழ்வியல் - த.திலகர்; பக். 128; ரூ.150; விஜயா திலகர் பதிப்பகம், 68 -ஏ, தமிழ்ச் சங்கம் சாலை, மதுரை - 625 001.
சுவாமி சின்மயானந்தரால் தொடங்கப்பட்ட சின்மயா மிஷன் அமைப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டு புரிந்து வரும் நூலாசிரியர் திலகர், சுவாமிஜியிடம் கற்ற, கேட்ட விஷயங்களைப் பல்வேறு தலைப்புகளில் நூலாக வடித்துள்ளார்.
மனம் ஒரு குரங்கு - அதைக் கட்டுப்படுத்த வேண்டும். செய்யும் விஷயத்தில் முழு மனதைச் செலுத்துவதே தியானம் .
நாம் எந்தத் துறையைத் தேர்வு செய்ய வேண்டும், மணவாழ்க்கையில் நிம்மதியாக இருப்பது எப்படி, ஓம் என்ற எழுத்தின் சிறப்பு, பள்ளிப் பருவத்தில் பாலுணர்ச்சியைத் தவிர்ப்பது எப்படி?, பல்வேறு பெயர்களில் தெய்வங்கள் எதற்காக? குரு என்பவர் யார் என்பதற்கான விளக்கங்கள் உரையாடல் வடிவில் சிறுகதைகள், உதாரணங்களுடன் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆழமான தத்துவங்களுக்கான விளக்கங்கள் கூட சுவாரசியமாக எழுதப்பட்டு உள்ளன.
"இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையாமல் இல்லாததைத் தேடி ஓடுவதால் மகிழ்ச்சியை இழக்கிறார்கள், மகிழ்ச்சிக்காக வேலை பார்ப்பதைவிட மகிழ்ச்சியோடு பார்க்கக் கூடிய வேலையைத் தேர்வு செய்யுங்கள், பிறரை வெல்பவன் தலைவனல்ல - தன்னை வெல்பவனே தலைவன்' என்பன போன்ற முத்திரை வாசகங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
மாணவர்களும், ஆன்மிகம் பற்றி அறிந்து கொள்ள விழையும் அன்பர்களும் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் நூல் இது.