பூமியைச் சுற்றிப் பாருங்கள் - பத்ஹுர் ரப்பானி; பக்.426; ரூ.250; செய்யது ஹோம் பப்ளிஷர்ஸ், திருநெல்வேலி-3; )0462 - 2502486.
1970 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 20 அக்டோபர் 2018 வரை உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த தனது பயண அனுபவங்களை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் பயண அனுபவங்களாக மட்டும் இல்லாமல், சென்ற இடத்தின் சிறப்புகள், வித்தியாசமான தன்மைகள், வரலாறு என அனைத்தையும் தொட்டுச் செல்கிறது இந்நூல்.
சிங்கப்பூரில் எந்த நாட்டு நாணயத்தைக் கொடுத்தாலும் மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றுவதற்கென்றே பல நிறுவனங்கள் பல இடங்களில் இருக்கின்றன. இது சட்டப்படியும் செல்லுபடியாகும்.
இடம் இல்லாததால் ஹாங்காங் விமானநிலையத்தில் ஓடுதளத்தைக் கடலில் அமைத்து இருக்கிறார்கள்.
ஜப்பானிய மொழியில் "ட' எழுத்து உச்சரிப்பு இல்லை. அரபு மொழியில் "ட' எழுத்து இல்லை. " வாட்டர் ' என்பதை "வாத்தர்' என்று உச்சரிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் சிட்னியில் சுத்த, சைவ உணவகங்களும் இருக்கின்றன. ஹரே கிருஷ்ணா இயக்கம் நடத்தும் சைவ உணவகங்கள், சிட்னியில் மிகவும் பெயர் பெற்ற இடங்கள்.
சீனாவில் பொருளாதாரச் சுதந்திரம் உண்டு. ஆனால் அரசியலில் சுதந்திரம் தரப்படவில்லை. சீனநாடு 1992 - ஆம் ஆண்டு டெங் ஸியா பெங் தலைமையில் சிறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து, வெளிநாட்டு முதலீடுகளையும் பெற்றதன் மூலம் அந்நாடு வெகுவாக முன்னேறி இருக்கிறது.
இவ்வாறு நூலில் இடம் பெற்றுள்ள பல வித்தியாசமான தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
நூலாசிரியர் டோக்கியோவிலிருந்து நகோயாவுக்கு ரயிலில் பயணம் செய்யும்போது மூக்குக் கண்ணாடியைத் தவறவிட்டு விடுகிறார். எந்தப் பெட்டியில் எந்த சீட்டில் கண்ணாடி தவறவிடப்பட்டது என்பதை ரயில்வே துறைக்குத் தெரிவித்தவுடன் கண்ணாடி கூரியர் மூலம் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்கிறது. இப்படிப்பட்ட நாம் இதுவரை கேள்விப்படாத பல சுவையான, வியப்பு ஏற்படுத்துகிற சம்பவங்களுக்கும் இந்நூலில் குறைவில்லை.