புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா? - ஆர்.ரங்கராஜ் பாண்டே; பக்.168; ரூ.175 ; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; )044 - 4200 9603.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் சூழலில், தமிழகத்தின் மொழி அரசியல், நீட் தற்கொலை அரசியல் என பல்வேறு விஷயங்களை இந்நூலில் பேசியிருக்கிறார் நூலாசிரியர் .
தனது விருப்பத்துக்கு ஏற்ப உயர் கல்வியை படிக்கும் சுதந்திரம் புதிய கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளது. இது, கல்லூரிப் படிப்பில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார். நமது முன்னோர்கள் வீரமானவர்கள், விவேகமானவர்கள் என்ற உண்மையைப் படிக்கும்படி புதிய கல்விக் கொள்கை கூறுவது எப்படித் தவறாகும் என்ற அவரின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
பிற மாநில மாணவர்களைக் கொல்லாத நீட் தேர்வு தமிழக மாணவர்களை மட்டும் ஏன் கொல்கிறது என்ற நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.
மூன்றாவது மொழியாக ஹிந்தியைக் கற்பதில் தமிழ் மக்கள் ஆர்வத்துடனேயே இருக்கின்றனர் எனவும் வாதிடுகிறார்.
ஹிந்தியைத் தவிர்ப்பதாலேயே தமிழகம் பிற மாநிலங்களில் இருந்து 30 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகக் கூறும் நூலாசிரியர், எந்தெந்தத் துறைகளில் பின்தங்கியிருக்கிறோம் என்பதை விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
தமிழகத்தில் ஒருவர் 35 மதிப்பெண்களைப் பெற்றாலே பொறியியல் படிக்க முடியும் என்ற அவல நிலை இருப்பதாகக் கூறும் நூலாசிரியர், நீட் தேர்விலும் கூட 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் சுயநிதி மருத்துவப் படிப்பில் சேரும் நிலை இருப்பதைக் கவனத்தில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.
நீட் என்பது பேய், பூதம் போல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் மாணவர்களின் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகளை சோர்வடையச் செய்திருக்கிறார்கள். நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நமது குழந்தைகள் சாதனை படைக்க முடியும். இதற்கு அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இந்த நூல்.