அஞ்சலை அம்மாள் - ராஜா வாசுதேவன்; பக்.320; ரூ.250; தழல், 35, அண்ணா நகர் பிளாசா, சி 47, 2 ஆவது நிழற்சாலை, அண்ணா நகர், சென்னை-40.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சாமானியக் குடும்பத்துப் பெண் அஞ்சலை அம்மாளின் தியாகத்தை ஒரு நாவல் போல விறுவிறுப்பாகவும், யதார்த்தத்தோடும் எழுதியிருக்கிறார் நூலாசிரியர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அஞ்சலையம்மாள், துணிச்சலுடன் வெள்ளைக்கார இளைஞரை எதிர்கொண்டு அவரது தவறான செயலுக்கு மக்கள் ஆதரவுடன் தண்டனை தருவதும், ஆங்கிலேய அரசு தேடிவந்த பாரதியாரை புதுச்சேரியில் இருந்து மாட்டுவண்டியில் தனது வீட்டுக்கு வரவழைத்து உபசரித்து ஆசி பெற்றதும் வியக்க வைக்கிறது.
அஞ்சலை அம்மாளின் சுதந்திர போராட்ட செயல்களுக்குப் பின்னால் அவரது கணவர் முருகப்பன் செயல்பட்டதை மிக அற்புதமாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தாய்மை அடைந்த நிலையிலும் தாய் நாட்டு விடுதலைக்குப் போராடும் வீரம் என நூலெங்கும் அஞ்சலை அம்மாளின் தியாகங்கள் கண்ணீரில் எழுதப்பட்டதுபோல சோகங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 9 முறை தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அஞ்சலை அம்மாள் சுதந்திரத்துக்குப் பிறகு தேர்தலில் வெற்றிவாய்ப்பு இருந்தும் அதை விரும்பவில்லை. அத்தகைய தியாகத் தாயின் மகன் ஜெயில்வீரன் இருமுறை சிறுவயதில் அம்மாவுடன் சிறையில் இருந்ததையும், ஆனால், சுதந்திரமடைந்த பிறகு அவருக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம்கூட தரப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
அஞ்சலைஅம்மாளின் தியாகம் கவனிக்கப்படாமல் போனதை படிக்கும்போது மனது வலிக்கிறது.