நூல் அரங்கம்

கரிசலில் உதித்த செஞ்சூரியன் 

1st Dec 2021 06:13 PM

ADVERTISEMENT


(சோ.அழகர் சாமியின் வாழ்க்கைத் தடம்) - எஸ்.காசிவிஸ்வநாதன்; பக்.366; ரூ.335; நியூ செஞ்சுரி புக்  ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; -044- 2625 1968.

எட்டயபுரத்துக்கு அருகில் உள்ள ராமனூத்து என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் சோ.

அழகர்சாமி.   தனது 14 வயதிலேயே நாட்டுப்பற்று உடையவராகத் திகழ்ந்த அவர் காங்கிரஸ், சோசலிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசியல் தலைவர்களை எட்டயபுரத்துக்கு வரவழைத்து அரசியல்மாநாடுகள் நடத்தியிருக்கிறார். 

பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில்  இணைந்து செயல்பட்டிருக்கிறார். 1948 - இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, தலைமறைவாகச் செயல்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்த சோ.அழகர்சாமி,  மக்களுக்கான பல போராட்டங்களில் உயிர்த்துடிப்புடன் ஈடுபட்டிருக்கிறார். 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1967 - ஆம் ஆண்டு முதல் 1989 - ஆம் ஆண்டு வரை ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவராக,  தனது கிராமமான ராமனூத்து பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்திருக்கிறார். சீவலப்பேரி குடிநீர்த்திட்டத்தைக் கொண்டு வந்தவர் அவரே. 

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக 1967 - ஆம் ஆண்டு அவர் இருந்தபோது,  மருத்துவம் படிக்க விரும்பிய தனது மகனை, சிபாரிசு செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்க்காத நேர்மையாளராக அவர் இருந்திருக்கிறார்.    

இந்நூல் சோ. அழகர்சாமியின் வாழ்க்கை வரலாற்று நூல் என்றாலும்,  திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாறாகவும்,  கரிசல் மண்ணின் வரலாறாகவும் திகழ்கிறது.  தெற்கு சீமையில் நிகழ்ந்த நாயக்கர் ஆட்சி, பாளையக்காரர்களின்  ஆட்சி ஆகியவற்றால் ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  வ.உ.சி. நடத்திய போராட்டங்கள், அவர் சிறையில் அனுபவித்த கொடுமைகள்,  கலெக்டர் ஆஷ் துரையின் வன்செயல்கள்,  வாஞ்சிநாதனால் ஆஷ் கொல்லப்பட்டது, சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது,  கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிகழ்ந்த பிளவுகள், 1975 ஆம் ஆண்டின் அவசரநிலைப் பிரகடனம் என அவர் வாழ்ந்த காலத்தின் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த சமூக, அரசியல்,  பொருளாதார மாற்றங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT