நூல் அரங்கம்

சங்கத்தமிழ் களஞ்சியம்

2nd Aug 2021 01:37 PM

ADVERTISEMENT

சங்கத்தமிழ் களஞ்சியம்- நிர்மலா மோகன்; பக். 316; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை- 17;)044- 2434 2810.
தமிழின் தொன்மையை விளக்கும் ஆவணங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள்.
சங்கத்தமிழ் நூல்களை தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரை 21 கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வு எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முதல் பக்தி இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறுகள் வரை தற்காலத் தமிழ் ஆர்வலர்களுக்குப் புரியும் வகையில் நூலில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் முக்கியத்துவத்தை ஒளவையார் முதல் ஒக்கூர் மாசாத்தியார் உள்ளிட்டோர் வரை எந்தவகையில் பாடியுள்ளனர் என விளக்கியிருப்பதுடன், அப்பாடல்களை திரைப்படக் கவிஞர்கள் வரை எப்படி கையாண்டுள்ளனர் என்பதையும் விளக்கியிருப்பது சிறப்பாகும்.
ஆற்றுப்படை நூல்கள் மூலம் கொடை, விருந்து என தமிழர் பண்பாட்டை நினைவூட்டும் நூலாசிரியர், நற்றிணைக்கு முதலில் உரை தந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் குறித்த கட்டுரையில் அவரது நயவுரையின் சிறப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"சங்க இலக்கியத்தில் விழுமியப்பதிவுகள்' எனும் கட்டுரையில் நட்பு, பெரியோரைத் துணைக்கோடல், ஒழுக்கச்சிந்தனை, துன்பங்களை எதிர்கொள்ளுதல் என இன்றைய தனிமனித மேம்பாட்டுக்கான கருத்துகள் எப்படி சங்க இலக்கியங்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
சங்க இலக்கியங்கள் தற்காலச் சிந்தனைக்கு ஏற்ப எந்த வகையில் அமைந்திருக்கின்றன என்பதை அறியும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைகள் அமைந்து உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT