நூல் அரங்கம்

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)

30th Mar 2020 08:34 AM

ADVERTISEMENT

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) - மலர் -விசு; பக்.392; ரூ.380; வாசக சாலை பதிப்பகம், 80, சுவாமிநாதன் இல்லம், (மூன்றாவது வீடு, தரைத்தளம்) முதல் பிரதான சாலை, ஸ்ரீ சத்ய சாய் நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜ கீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை - 600073.
சுதந்திரப் போராட்டத்தின் விதையான சிப்பாய் புரட்சி முளைத்த வேலூரின் காந்தி நகரில் தொடங்கும் கதை, பாஸ்டன் விமான நிலையத்தில் முடிகிறது. கிச்சா என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் கதைநாயகன். கிளிமூக்கு என்று அவனால் செல்லமாக அழைக்கப்படும் உமா கதையின் நாயகி. பிளஸ் 2, கல்லூரி, சிஏ என அவர்களுடைய படிப்புடன் காதலும் வளருகிறது. 
அம்மா உள்பட தான் நேசிப்பவர்களை இழந்துவிடும் உமா, ""விச்சு பயமா இருக்கு. நாம ஃபிரண்ட்ஸ் ஆகவே இருந்துவிடுவோம்'' என்கிறாள். இருப்பினும் இரு வீட்டுக் குடும்பத்தாரும் அவர்களை ரிஜிஸ்ட்ரரர் ஆபிஸுக்கு வரவழைத்து மணமக்களாக்கிவிடுகின்றனர். 
எழுத்தாளர் சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்' தொடர் 13 - ஆவது வாரம் வெளியானபோதுதான் கதையின் நாயகனும் நாயகியும் முதன்முதலாய் சந்திக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட அவர்கள் எப்போது பிரிந்தனர் என்று நாவலில் காட்டப்படவில்லை. 25 ஆண்டுகளுக்குப் பின் பாஸ்டன் விமான நிலையத்தில் இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர். உமா மகனுடன் பெர்லின் செல்கிறாள். விஸ்வநாதன் மகளுடன் நியூயார்க் செல்கிறான். 
சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்' இரண்டாம் பாகம் புத்தகத்தை விஸ்வநாதனுக்குக் கொடுத்துவிட்டு பறந்துவிடுகிறாள் உமா. நாவலை வாசிப்பவர்கள் அவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று மானசீகமாக வாழ்த்தாமல் இருக்க முடியாது. 
வேலூரில் பதின் பருவத்தை கழித்த நூலாசிரியர்கள் கதைக் களத்தை பெரும்பாலும் வேலூரில் உலவவிட்டு சுவாரஸ்யம் குன்றாத படைப்பை அளித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT