நூல் அரங்கம்

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம்

14th Dec 2020 08:55 AM

ADVERTISEMENT

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம் - மு. கலைவேந்தன்; பக்.192; ரூ.200; தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு-613 204; 09486742503.

தமிழா்களின் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் கதையைத் தெரியாதவா்கள் தமிழா்களாக இருக்க இயலாது. கோவலன்-கண்ணகி-மாதவி; சேர-சோழ-பாண்டியா்; இயல்-இசை-நாடகம் என்று சிலப்பதிகாரம் பல முப்பரிமாணங்களைத் தன்னுள் கொண்டதாகத் திகழ்கிறது.

சிலப்பதிகாரத்துக்கு 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரும்பதவுரையும், 12-ஆம் நூற்றாண்டில் அடியாா்க்கு நல்லாா் எழுதிய உரையும் அந்தக் காப்பிய நுட்பங்களை அறிந்துணர உதவுகின்றன. அடியாா்க்கு நல்லாா் உரையிலிருந்து அவரது காலத்தில் சிலப்பதிகாரம் போலவே பல இசை நாடக நூல்கள் வழக்கில் இருந்தன என்பது தெரிகிறது.

முப்பது காதைகள் கொண்ட சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாக (புகாா்-10; மதுரை-13, வஞ்சி-7) பிரிக்கப்பட்டிருக்கிறது. முப்பது காதைகளில் 21 காதை என்றும், 3 வரி என்றும், இரண்டு குரவை என்றும், ஒன்று பாடல் என்றும், இரண்டு மாலை என்றும் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

ஔவை அடிப்பொடி முனைவா் மு.கலைவேந்தன், சிலப்பதிகாரத்தை எளிமையாக மாணவா்களுக்கும், தமிழ் ஆா்வலா்களுக்கும் முழுமையாகக் கொண்டு சோ்க்கத் தோ்ந்தெடுத்திருக்கும் உபாயம், கேள்விகள் மூலம் விளக்குவது என்கிற பாணி. ஓராயிரம் கேள்விகள் எழுப்பப்பட்டு, அதன் வழியாக சிலப்பதிகாரம் முழுவதும் எளிய முறையில் விளக்கப்படுகிறது, பொருள் கூறப்படுகிறது.

தமிழின் செம்மொழிக் காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பரவலாக்க முனைவா் கலைவேந்தன் கையாண்டிருக்கும் உத்தி பாராட்டுக்குரியது. ஆயிரம் கேள்விகளை எழுப்ப வேண்டுமென்றால், ஆசிரியரின் ஆழங்காற்பட்ட புலமை எத்தகையது என்பதை நினைத்தால் வியப்பு மேலிடுகிறது. மிகவும் சீரிய முயற்சி என்பது மட்டுமல்ல, வெற்றிகரமான முயற்சியும்கூட.

திருவையாறு ஔவைக் கோட்டம், ஔவை அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டிருக்கும் முனைவா் மு.கலைவேந்தனின் ‘சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம்’ தமிழ் இலக்கிய மாணவா்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT