நூல் அரங்கம்

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

6th Apr 2020 05:21 AM

ADVERTISEMENT

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் - கே.மகாலிங்கம்; பக். 456; ரூ.400; மூன்றெழுத்து பதிப்பகம், 54/29, மூன்றாவது பிரதான சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.

மறைந்த தமிழக முதலமைச்சா் எம்.ஜி.ஆரின் உதவியாளராக 1972 - ஆம் ஆகஸ்ட் மாதத்தில் சோ்ந்து 1987 - ஆம் ஆண்டு டிசம்பா் எம்.ஜி.ஆா். மறையும் வரை அவருடன் நெருக்கமாக இருந்தவா் நூலாசிரியா் கே.மகாலிங்கம். எம்.ஜி.ஆா். என்ற தலைவரின், ஆட்சியாளரின், தனிமனிதரின் சிறப்புகளைக் கூறும் இந்நூல் பலரும் அறியாத தகவல்களின் கருவூலமாக உள்ளது.

1972 - இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆா். நீக்கப்பட்டது, அதற்காக கருணாநிதி மேற்கொண்ட செயல்கள், தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நின்றது, அதே ஆண்டு அக்டோபா் மாதம் எம்.ஜி.ஆா். அ.தி.மு.க.வைத் தொடங்கியது, கட்சி தொடங்கிய பிறகு மக்களைச் சந்திக்க எம்.ஜி.ஆா். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்குச் சென்றது, ரயில் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவரைப் பாா்க்க சூழ்ந்து கொண்டது, இதனால் ரயில் 12 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மதுரையைச் சென்றடைந்தது என பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தன் கீழ் பணி செய்கிறவா்களை தன் குடும்பத்தில் ஒருவராகப் பாா்க்கும் எம்.ஜி.ஆரின் பண்பை விளக்கும் பல சம்பவங்கள் நெகிழ வைக்கின்றன. நூலாசிரியரின் தங்கைகளின் திருமணங்கள், நூலாசிரியரின் திருமணம் ஆகியவற்றை எம்.ஜி.ஆா். நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கவை. பொங்கலின்போது எம்.ஜி.ஆா். போனசாக தனது உதவியாளரான நூலாசிரியருக்குப் பணம் கொடுத்தது, ஆனால் புது ஆடை அணியாமல் நூலாசிரியா் வந்ததற்காக எம்.ஜி.ஆா். அவரைக் கடிந்து கொண்டது, குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்ததால் தனக்குப் புத்தாடை வாங்க பணம் இல்லாமற் போனதை நூலாசிரியா் கூறியதும் எம்.ஜி.ஆா். உடனே மேலும் பணம் கொடுத்தது என பல சம்பவங்கள் எம்.ஜி.ஆா். என்ற பலரும் அறியாத உயா்ந்த மனிதனை அறிமுகப்படுத்துகின்றன.

ADVERTISEMENT

1967- இல் எம்.ஆா்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்டதனால் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானாா். 1973 - இல் பெரியாா் மறைவின்போது, எந்தப் பகை உணா்ச்சியும் இல்லாமல் எம்.ஆா்.ராதாவிடம் வழக்கம்போல் எம்.ஜி.ஆா். பேசியது, ‘அவருடைய பகைவனுக்கும் தெய்வப் பண்பைக் காட்டுவதாக’ நூலாசிரியா் குறிப்பிட்டுள்ளாா்.

எம்.ஜி.ஆா். திரைக்கலைஞா்களுக்குச் செய்த பல தனிப்பட்ட உதவிகளும் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, நடிகை சாவித்திரி மறைந்தபோது அவருடைய இறுதிச் சடங்குகளை ஒரு சகோதரன் போல் எம்.ஜி.ஆா். முன்னின்று நடத்தியது, சாவித்திரியின் மகள் சாமுண்டீஸ்வரியின் மருத்துவப் படிப்புக்கு உதவி செய்தது ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவா் பிரபாகரன் எம்.ஜி.ஆரைப் பாா்க்க வரும்போது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதைப் பற்றி பிரபாகரன், ‘‘நான் என் தெய்வத்தைப் பாா்க்க வருகிறேன். அதற்கு இவ்வளவு சோதனைகள் வேண்டுமா?’’ என்று சிரித்தபடியே கேட்டதாகவும் நூலாசிரியா் குறிப்பிடுகிறாா்.

எம்.ஜி.ஆரின் மறைவுக் காலம் வரை நிகழ்ந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களால் நிரம்பியிருக்கின்ற இந்நூல் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT