நூல் அரங்கம்

பசும்பொன் களஞ்சியம்

7th Oct 2019 03:49 AM

ADVERTISEMENT

பசும்பொன் களஞ்சியம் - தேவரின் சொற்பொழிவுகள் - தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்; பக்.656; ரூ.650; காவ்யா, சென்னை-24; ) 044- 2372 6882.
 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களிலும், தமிழக சட்டமன்றத்திலும் ஆற்றிய 40 உரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
 சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்ததும் இந்நூலில் உள்ள பல சொற்பொழிவுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
 பிரிட்டிஷாரிடம் இருந்து உண்மையில் நாம் சுதந்திரம் அடையவில்லை என்ற கருத்து அவருக்கு இருந்திருக்கிறது. அதற்காக அவர் கூறியிருக்கும் விளக்கங்கள் சிந்திக்கத் தக்கவையாக உள்ளன.
 சுதந்திரமடைந்த ஒரு நாடு மக்களின் நல்வாழ்விற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஆனால் நாம் செய்யத் தவறியவை எவை? என்பதை விளக்கமாக எடுத்துக் கூறுகிறார். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்யாத மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்பது அவருடைய கருத்து.
 அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுப்பது, பதவி உயர்வு கொடுப்பது எல்லாம் ஒருவருடைய திறமை, வேலையின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அவர் வேண்டியவர் என்பதற்காக இருக்கக் கூடாது என்று அவர் கூறுகிறார்.
 சாதி ஏற்றத் தாழ்வுகள் நீங்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் நிலைக்கு அவர்களை உயர்த்த வேண்டும் என்கிறார்.
 பெரியவர்களுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள ஒருநாட்டில் குழந்தைகளுக்குத் தொழில் கல்வி போதிக்கப்படும் என்று சொல்வது தவறு என்பது அவருடைய கருத்து.
 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த காலத்தில் இருந்த பல பிரச்னைகள், இப்போதும் இருப்பதும், அதற்காக அவர் கூறிய பல தீர்வுகள், இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாக இருப்பதும் சிந்திக்க வைக்கிறது.
 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிந்தனைகள், சாதி வேலிகளுக்கு அப்பால், சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருப்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வர். அனைத்துப் பிரிவு மக்களின் கைகளிலும், மனங்களிலும் இருக்க வேண்டிய நூல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT