நூல் அரங்கம்

சேர மன்னர் வரலாறு

15th Jul 2019 01:29 AM

ADVERTISEMENT

சேர மன்னர் வரலாறு - ஒளவை சு.துரைசாமி -பக்.232; ரூ.220; ஜீவா பதிப்பகம், 12/28, செளந்தரராஜன் தெரு, தி.நகர், சென்னை-17.
 மூவேந்தர்களுள் ஒருவராகிய சேர மன்னர்களுக்கென்று விரிவான வரலாறு கிடையாது. "சங்க நூல்களை நன்கு பயின்றால் அன்றி சேர நாட்டின் பண்டை நாளை அறிவது அரிது; சோழர்களைப் பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் வரலாற்று நூல்கள் உண்டானதுபோல, சேர நாட்டுக்கு வரலாற்று நூல்கள் தோன்றவில்லை; சேர நாடு பிற்காலத்தே கேரள நாடென வழங்கத் தலைப்பட்டது. சேர நாடென்பது கேரள நாடானதற்கு முந்திய நிலையாதலால் அதன் தொன்மை நிலை அறிதற்குச் சேர மன்னர்களையும், சேர நாட்டு மக்களையும் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்கள் சான்றாகின்றன' எனக் கூறும் நூலாசிரியர், கிடைத்த இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு சேர மன்னர்களின் வரலாற்றை வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
 சங்க இலக்கியங்களில் சேர நாட்டின் வடக்கும் தெற்குமாகிய எல்லைகள் இவை என வரையறுத்து அறிதற்குரிய குறிப்புகள் விளக்கமாக இல்லை. கி.பி.2 -ஆம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரைப் பகுதிக்கு வந்த யவன அறிஞரான தாலமியின் குறிப்பிலிருந்து, சேர நாட்டுக்கு வடக்கில் வானவாறும், கிழக்கில் மலையும், தெற்கில் கொல்லத்து ஆறும், மேற்கில் கடலும் எல்லைகளாக இருந்தன என்பதை அறிய முடிகிறது.
 சேர நாடு, அதன் தொன்மை, சேரமன்னர்களான பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், கணைக்கால் இரும்பொறை முதலிய 16 மன்னர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களும், அவர்களது அரசாட்சி, போர் நெறி, மெய்க்கீர்த்தி, அம்மன்னர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT