சனிக்கிழமை 20 ஜூலை 2019

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?

DIN | Published: 14th January 2019 01:33 AM

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை? (சிறு கதைகள்)- உமா பார்வதி; பக்.144; ரூ.160; யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஷ்வர் நகர், 3ஆவது பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை-42.
 பல்வேறு நாளிதழ்களில், மாத இதழ்களில் வெளியான 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கதைகளும் கதைக் கருவில் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன.
 அம்மாவோடு நாளைக் கழிக்க ஆசைப்படும் பத்து வயது சிறுவன் சஞ்சுவின் ஏக்கம் ஒருபுறம்; ஒரே மகனின் ஏக்கத்தையும், தனிமையையும் போக்க நினைத்தாலும், அலுவலகத்தில் கெடுபிடி, ஆடிட்டிங் என்று நீண்ட தூரம் மின்சார ரயிலில் பயணம் செய்து, மனமும் உடலும் சோர்ந்து பல இன்னல்களை எதிர்கொண்டு வீடு திரும்பும் தாய் கவிதாவின் தவிப்பு மறுபுறம். வாழ்வின் சுமைகளையும், சோகங்களையும் சுமக்கும் தாயின் துயரத்தை நொடிப் பொழுதில் போக்கும் மகனின் மழலைச் சொல் கவிதாவுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய டானிக். மிடில் கிளாஸ் மக்களின் எதார்த்ததைப் படம் பிடிக்கிறது "பயணம்' எனும் சிறுகதை.
 திடீரென்று நடக்கும் ஒரு சம்பவம் எப்படி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடுகிறது என்பதை "நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?' என்கிற கதையில் கதாசிரியை ஆழமாகப் பதிவு செய்து சிந்திக்க வைக்கிறார்.
 மகள் அதிதியையும் கணவனையும் விட்டுவிட்டு அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப்போகும் தாய் கீர்த்தி. ஓடிப் போவதன் காரணத்தைக் கூறமுடியாமல் தவிக்கும் தவிப்பில் இருக்கும் மறுபுறத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இதை "ஓடிப் போனவள்' சிறுகதை படம் பிடிக்கிறது.
 இந்நூலிலுள்ள கதைகள் எதார்த்தத்தை எடுத்துச் சொல்வதுடன், சிந்தனைக்கும் பெருத்த தீனி போடுகின்றன. மே 29, ஜூலை 10, ஆகஸ்ட் 12 ஆகிய நாள்களை நாம் மறக்க முடியாதபடிக்குக் கதைக் கரு மனதில் ஒட்டிக்கொள்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இலக்கியச் சங்கமம்
 

சேர மன்னர் வரலாறு
குரங்கு கை பூமாலை
புவி எங்கும் தமிழ்க் கவிதை
ஆக்கப்படுவதே வாழ்க்கை