நூல் அரங்கம்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும்

16th Dec 2019 12:42 AM

ADVERTISEMENT

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும் - வேணு சீனிவாசன்; பக்.368; ரூ.250; மங்கை பதிப்பகம்,700 எம்ஐஜி, 2-ஆவது முதன்மைச் சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை - 600042.
 ராமாநுஜருக்குப் பிறகு தோன்றிய மிகப் பிரசித்தமான விசிஷ்டாத்வைத ஆச்சார்யர் வேதாந்த தேசிகர். சம்ஸ்கிருதம் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான நூல்களை இயற்றியவர். ஸ்தோத்திரங்கள், உரைகள், வேதாந்த விளக்கம், கவிதை, நாடகம் என்று பலவாறாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிஇருக்கிறார்.
 அதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வு நடைமுறைகளில் நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலே, ஆத்மிக விஷயங்களிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க இயலும் என்பதன் பொருட்டு, அவற்றைப் பற்றியும் இரு நூல்களைப் படைத்துள்ளார். அவரது பிரபந்த சாரம் ஓர் ஒப்பற்ற முயற்சி. ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்களைப் பிழிந்து தருவதால் இது பிரபந்த சாரம் ஆகிறது. மேலும் ஆழ்வார்களின் அவதார விவரங்கள், இயற்றிய நூல்கள் அனைத்தையும் பாசுரங்களாய் பட்டியலிட்டிருக்கிறார்.
 விசிஷ்டாத்வைதமே தலையாய சித்தாந்தம் என்று நிறுவுவதே இவரது வாழ்வின் பிரதான பணியாக எடுத்துக் கொண்டார். இன்றும் வலிமையுடன் இயங்கி வரும் அஹோபில மடம், பரகால மடம் ஆகியவற்றை நிறுவியது தேசிகரே.
 புத்தகத்தின் முதற் பகுதி தேசிகரின் வாழ்க்கை வர லாற்றை வடிக்கிறது. அவர் படைத்த பத்தொன்பது தமிழ் நூல்கள் பற்றி இரண்டாம் பகுதி அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரின் தமிழ் நூல்களைத் தேடிப் படிக்கத் தூண்டும் வகையில் அவரின் இன்பத் தமிழ்ப் பாசுரங்களில் சிலவற்றை எடுத்துக்காட்டியிருப்பது சிறப்பு. மேலும் இரண்டு பகுதிகள்- அவரது சம்ஸ்கிருத நூல்கள் மற்றும் தத்துவ - வேதாந்த நூல்கள்எடுத்துக்காட்டுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
 வேதாந்த தேசிகர் பற்றி மட்டுமல்லாமல், வேதாந்த சிந்தை, நாலாயிர திவ்யபிரபந்தத்தின் மேன்மை உள்ளிட்டவற்றையும் எளிமையான நடையில் படைக்கிறது வேணு சீனிவாசனின் நூல்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT