நூல் அரங்கம்

தென்னாட்டு ஜமீன்கள்

16th Dec 2019 12:45 AM

ADVERTISEMENT

தென்னாட்டு ஜமீன்கள் - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.1042; ரூ.1000; காவ்யா, சென்னை-24; ) 044 - 2372 6882.
 தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார்.
 மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஜமீன்களின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நூலில் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது.
 ஊர்க்காடு ஜமீனில் சிலம்பத்தில் சுப்புத்தேவர், அய்யங்கார் வரிசை குறித்து படிக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. கழுதையை வாயால் கடித்து தூக்கி எறிந்த சுந்தரத்தேவர், குத்தாலிங்கத் தேவர், கொள்ளையர்களாக இருந்து தற்போது தெய்வமாக வணங்கப்படும் சிவசாமி தேவர் சகோதரர்கள்,
 காதலித்த பெண்ணுக்காக நதியைத் திருப்பி ஊத்துக்காடு ஜமீன் கோட்டை கட்டியது, வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்துக்கு முன்பு பாஞ்சாலங்குறிச்சியில் இருந்த மூன்றாம் கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்தது, இதனால் பாளையங்கோட்டை ஆங்கிலேயரால் அப்போதே தாக்கப்பட்டிருப்பது, குளத்தூர் ஜமீன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரை ஆதரித்தது போன்ற பல பல சம்பவங்கள் நூலில் விரவிக் கிடக்கின்றன.
 நூலாசிரியர் பத்திரிகை ஆசிரியர் என்பதால் ஜமீன்களின் வரலாறுகளைச் செய்தி அடிப்படையில் கண்டது, கேட்டது, படித்தது என பரந்துபட்ட பார்வையில் தொகுத்திருக்கிறார். வரலாற்று ஆய்வு முறையின் அடிப்படையில் நூல் எழுதப்படவில்லை. ஒரே சம்பவம் பலமுறை நூலில் இடம் பெற்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT