நூல் அரங்கம்

திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும்

16th Dec 2019 12:44 AM

ADVERTISEMENT

திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும் - நாயனார்; பதிப்பாசிரியர்: ஜெ.மோகன்; பக்.912; ரூ.1,100; சிவாலயம், சென்னை-04; )044-24987945.
 பண்டைக் காலத்து இலக்கியங்களுக்கு பழைய ஏட்டுப் பிரதிகளில் உள்ள அரிய உரை நூல்களைப் பதிப்பாசிரியர் பதிப்பித்து வருகிறார். அவற்றுள் திருக்குறள் பதிப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில் சரவணப் பெருமாளையர் உரையான இந்நூலும் சேர்கிறது.
 இவ்வுரை நூல் 1847, 1862, 1878, 1909,1928-ஆகிய ஆண்டுகளில் வெளிவந்திருக்கின்றன. இத்திருக்குறள் தெளிபொருள் விளக்கம், பரிமேலழகர் உரையைத் தழுவி, திருவள்ளுவ மாலையுரையுடன் வெளிவந்துள்ளது.
 திருவள்ளுவர் "பேராண்மை' எனக் குறிப்பிடுவதற்கான காரணத்தைக் கூறுமிடத்தில், "புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையோர்க்கும் உட்பகையாகிய காமத்தை அடக்குதல் அருமையாததால் அதனை அடக்கிய ஆண்மையைப் பேராண்மை யென்றார். செய்தற்கரிய அறமும், ஒழுக்கமும், இதனைச் செய்யாமையினாலேயே உண்டாகு மென்பதாம்' எனக்கூறி, "பிறன்மனைவியை யிச்சியாமையே பெரியோர்க்குத் தருமம் என்பதாம்' என்று இக்குறளுக்குக் கருத்துரை தந்துள்ளார்.
 காலமறிதல் அதிகாரத்திலுள்ள, "காலம் கருதி இருப்பர்' என்கிற குறளுக்கு, "பூமிமுற்றுமாள நினைக்குமரசர் பகைவரை வெல்லக் காலம் பார்த்திருப்பார் என்பதாம்' ; "இருத்தலாவது- நட்பாக்கல், பகையாக்கல், மேற்செல்லுதல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்கிற அறுவகைக் குணங்களுள் மேற்செல்லுதலுக்கு எதிராகிய தொழில். இதனால் காலம் வராதவிடத்தே செய்ய வேண்டியது சொல்லப்பட்டுள்ளது' என்று விளக்கம் தருகிறார்.
 ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பரிமேலழகர் உரையின் விளக்கங்களை எளிமையாக்கித் தந்திருப்பதும்; உரையில் காணப்படும் கடினமான சொற்களுக்கு எளிய பொருள் விளக்கம் தந்திருப்பதும்; பரிமேலழகர் உரை விளக்கத்திற்கு சங்க இலக்கியங்களிலிருந்தும், பிற நூல்களிலிருந்தும் மேற்கோள் பாடல்களை மிகுதியாகத் தந்திருப்பதும்தான் சரவணப் பெருமாளையர் உரையின் தனிச்சிறப்பு. இந்த அரிய பதிப்பை தமிழ்கூறு நல்லுலகம் தவறாமல் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT