கவிதைமணி

சிரிப்பு என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதை பகுதி 1

4th Sep 2019 10:00 AM | கவிதைமணி

ADVERTISEMENT

சிரிப்பு (புன்னகை)

அங்காடி தனில்விற்கா முகத்திற் கிங்கே
-----அழகூட்டும் சாதனமே புன்ன கையாம்
அங்கங்கள் அனைத்திற்கும் அழகை ஊட்டி
-----அகத்திற்கும் அழகூட்டும் புன்ன கையாம்
தங்கத்தால் ஒளிர்ந்தபோதும் மங்க லத்தைத்
-----தருவதுவே அரும்புகின்ற புன்ன கையாம்
மங்கைக்கும் ஆணிற்கும் மனமி ணைக்கும்
----மந்திரமே இதழ்பூக்கும் புன்ன கையாம் !
மனவழுத்தம் நீக்குகின்ற மருந்தாய் நின்று
----மனத்தினையும் உடலினையும் பேணிக் காக்கும்
மனத்திலுள்ள உணர்வுகளை மற்ற வர்க்கு
----மனமறிய மௌனமாக புரிய வைக்கும்
மனம்கொதித்துக் குருதியினைக் கொதிக்க வைக்கும்
----மாச்சினத்தைக் குறையவைத்து நோய்த டுக்கும்
வணங்காத பகைவனையும் வணங்க வைத்து
-----வளர்கின்ற நட்பாக்கும் புன்ன கையாம் !
வாய்விட்டு சிரிக்கவைத்து நோயை ஓட்ட
----வாயிலினைத் திறப்பதுவே புன்ன கையாம்
தாய்நகையோ பாசநகை ; கண்ண சைத்துத்
----தாரந்தான் காட்டுநகை மோக நகையாம்
சேய்நகையோ இன்பநகை ; காதல் மங்கை
----செய்நகையோ அன்பிசைவைக் காட்டும் நகையாம்
வாய்மைக்கு மெருகூட்டும் புன்ன கையை
----வாய்மலர்த்தி நேயமுடன் வாழ்வோம் ஒன்றாய் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**********

ADVERTISEMENT

மனிதனுக்கு நல்லதொரு மருந்து
....மனச்சோர்வுக்கு நல்லதொரு விருந்து
மனிதனும் கவலைகளை மறந்து
....மனக்காயமும் போய்விடும் பறந்து
சிரிக்கும் உதடுகள்தான் அழகுகாட்சி
....சிரிப்புதான் சிந்தனையின் வளர்ச்சி
சிரிக்கும் பூக்களே அதற்குசாட்சி
....சிரிக்காவிட்டால் வாழ்வே வீழ்ச்சி
நல்வாழ்வுக்கு வேண்டும் நகைச்சுவை
....நாம்உண்ணாமல் கிடைக்கும் அறுசுவை
இல்லங்களில் துன்பங்கள் வீண்சுமை
....இன்சிரிப்பால் பறந்தோடும் மனச்சுமை
சிரிக்காவிட்டால் மனிதனும் விலங்கு
....சிந்தித்து இதைநீயும் விளங்கு
சிரித்துவாழ்ந்தால் நமக்கு பாரமில்லை
....சிகரமும் நமக்கு வெகுதூரமில்லை

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்.

**********
மழலைச் சிரிப்பில் மகத்துவம் கண்டேன்!
மாசில்லா சிரிப்பின் மாண்பினைக் கண்டேன்!
மாக்களில் இருந்து மனிதனென வேறுபடுவதற்கு!
சிரிப்பென்ற சிறப்பே சிறந்து விளங்கிடும்!


நட்பின் பிணைப்பில் நாளும் சிரிப்பேன்!
நலமுடன் வாழ நட்புடன் கலப்பேன்!
வளமுடன் வாழ சிரிப்பே மருந்து!
சிந்திக்க மறவாமல் தினமும் அருந்து!


துன்பம் போக்கிட சிரிப்பினை நாடிட!
இன்பம் பெற்று சிரிக்குமே நாடி!
உடலும் மனமும் இனிதே இருந்திட!
என்றும் மறவாதே சிரிப்பெனும் மருந்திட!

- குமார் சுப்பையா, பல்லாவரம்

**

எரிந்து வீழா இன்பச் சொற்கள்
……….இயைந்து வருமே சிரிப்பலையில்.!
சிரிப்பு புன்னகை சிந்தும் முத்தம்
……….சகிப்பும் என்றும் சலிப்பதில்லை.!
சிரிப்பின் மூலம் சிந்திய காதல்
……….சுற்றத் தொடங்கிச் சுழன்றுவரும்.!
விரித்த வலையில் வீழ வைக்கும்
……….வினையும் உண்டு சிரிப்பினிலே.!
.
கன்னிச் சிரிப்பில் களங்கம் இருந்தால்
……….கலகம் பெரிதாய் வெடிக்குமன்றோ.?
முன்னின் வினையால் மூக்கை இழந்தாள்
……….மூடச் சிரிப்பால் சூர்ப்பனகை.!
அன்று வந்த மாபா ரதப்போர்
……….அருமை பேசா பெண்சிரிப்பை.!
மென்மை இல்லா மேலெழும் சிரிப்பே
……….வன்மை செய்ய வழிவகுக்கும்.!
.
உணர்வை வெளியிட உள்ளம் எழுமே
……….உவகை வருமே பல்விதமாய்.!
பணத்தைப் பார்த்துப் பெருமிதம் கொள்ளப்
……….பதமாய்க் காட்டும் பல்லிளிப்பு.!

குணத்தைப் போற்றும் கொள்கை கொண்டால்
……….காண வருமே குறுஞ்சிரிப்பு.!
வணங்கும் எண்ணம் வந்து விட்டால்
……….வருமே உதட்டில் புன்சிரிப்பு.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

சிரிப்புதான் மனிதர்களின் சிறப்பான அடையாளம்
இனிப்பான  வாழ்வுக்கு  இதுதான்  மூலதனம்!
களிப்பாய் இருந்திடவும் காதலில் மூழ்கிடவும்
உயிர்ப்புடனே வாழ்வை உயரத்தில் வைத்திடவும்
பயிர்ப்புடைய பெண்டிரின் பாசத்தைப் பெற்றிடவும்
உள்ளச் சிரிப்பொன்றே உண்மையாய் உதவிடுமே!

முகத்தின் வசீகரத்தை முழுதாய்க் காட்டுவதில்
உள்ளத்தின் மென்மையினை ஊருக்கு உணர்த்துவதில்
பள்ளத்தில் கிடப்போரைப் பரிமேல் ஏற்றுவதில்
வெள்ளத்தில் தவிப்போரை வீடுகொண்டு சேர்ப்பதில்
கள்ளமில்லாச் சிரிப்பும் கனிவான இதயமுமே
என்றைக்கும் உதவிடுமே இதுவென்றும் நிரந்தரமே!

சிரிப்பு பெருமருந்து! சீரிய அருமருந்து!
இதையுணர்ந்து செயல்பட்டால் எழுந்தோடும் நோய்களெல்லாம்!
வருத்தமில்லா வாழ்வினையே வாழ்ந்திடலாம் பலகாலம்
இதுவன்றோ வாழ்வென்று இருந்திடலாம் மகிழ்வுடனே!
சேர்ந்தே சிரித்திருப்போம்! சிரித்தே மகிழ்ந்திருப்போம்!
ஹாஹா! ஹாஹா! ஹாஹா! ஹாஹா!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

*********************

வன்மமும்
வாஞ்சையுமெனப் புரியாமல் இருக்கிறது
சிரிப்பு...

தாள நயத்தோடு
தகமைச் சார்ந்த புளங்காகிதமும்
பொச்சரிப்புமுமற்று
வெள்ளந்தியாக இருக்க வேண்டிய
சிரிப்பு
வேடமிடுவது வெளிக்காட்டாமல் 
உலா வருவதுதான்
வியப்பாக இருக்கிறது...

காலத்தின் கற்பு
களங்கப்படாமல்  இருந்தாலும் 
இuல்லை
சரியாகவோ தவறாகவோ...

இனிய கணங்களில்
இனிப்பதைக் காட்டிலும்
துன்ப தருணங்களில் தோள்சாய்த்து
வருட தொலைக்க உதவும்
அன்பின் சிரிப்பு...

சிரிப்பு சேர்த்துக் கொள்ளவும்
சிரிப்பு 
மனித உறவுளைச் சிதைக்கவும்
செய்யும்...

நமக்கு
மனங்ளில் சாய்ந்து வருடும் சிரிப்பால்
மன்பதை உய்யும்
மாறாக பயணிக்க வாழ்க்கை நெடுகிலும்
கல்லும் முள்ளும் பரவிய மயானமாகும்...

-~கா.அமிர்தம் நிலா/நத்தமேடு

**

கலைகளுள் சிரிப்பும் ஒன்று, கவலையைப் போக்குமென்று
கலைவாணர் சொன்னார் செய்து காட்டியும் மகிழ வைத்தார்.
விலையிலாப் புன்சிரிப்பு விளங்கிடும் முகத்தினோர்கள்
விரைவினிற் கவர்வார் எம்மை வெல்லுவார் தம் நோக்கத்தில்.
அலைகிற மனத்தினோடும் அகத்தினிற் குழப்பத்தோடும்
சிலையென முகத்தைக் கொண்ட சிரிப்பிலார் தோற்பார் வாழ்வில்
நிலையிலா உலகைநோவார் நிம்மதி குலைந்து போவார்.
 
துயர் எது வந்தபோதும் சோர்ந்திடாதியங்கி என்றும்
நகைமுகம் மாறிடாது  நல்வழியதனிற செல்ல
உயர்திருக் குறள்போதிக்கும் உண்மையைப் புரிந்தோர் என்றும்
பகையிலா இனிய  வாழ்வின் பசுமையாற்தளைப்பார் மற்றோர்
அகமெலாம் கெட்டுச் சோர்வார் அன்பினால் இன்பம் காணார்.
 ஆதலால் நாநிலத்தீர் அன்பினை முகத்திற்காட்டும்
தீதிலாப் புன்னகைத்துத் தீமையைத் துரத்திவிட்டு
காதலோடயலார் தன்னைக் கருதியே என்றும் வாழ்க
மேதினி சிறக்கு மஃதால் விதியதும் மாறுமன்றோ.
 
- சித்தி கருணானந்தராஜா

**
அம்மா, அப்பா, ஆயா, தாத்தா
     அன்பு சிரிப்பைப் பார்க்கலாம் !- அவர் 
தம்மைப் போல அன்பாய் என்றும் 
     தனித்த சிரிப்பால் தாங்கலாம் !

அண்ணல் காந்தி, அன்னை தெரசா
     அன்புச் சிரிப்பை ஆளலாம் !- அவர் 
மண்ணில் பெற்ற புகழை எண்ணி 
     மலைத்து நாமே வியக்கலாம் !

செருக்குத் தனமாய் சிரிக்கும் சிரிப்பால் 
     சேர்ந்த இன்பம் சிதைந்திடும் !- பலர் 
அருமை பெருமை யாவும் கூட
     அற்றுத் தானே போய்விடும் !

அசட்டு, ஆணவம், எள்ளல், ஏளனம்
     ஆகாச் சிரிப்பு தானாகும் !-யார்க்கும்
வசமாம் வாகைச் சிரிப்பு வகையால்
     வரவே வந்து மிகக்கூடும் !

உயிரெ ழுத்துப் பன்னி ரெண்டாய்
     உயிர்க்க வேண்டும் நம்சிரிப்பு !- நம் 
உயிரும் கூட வாழ்நாள் கூடி
     உலகம் ஆளும் பல்லாண்டே !

-ஆர்க்காடு. ஆதவன்.

**
துரோகி தொட்டவுடன் கூட
சிவக்காத கண்கள்,
காற்றினில் கலந்த சில கிருமிகள்
பட்டவுடன் சிவக்குமே --
குடலிற்குள் கால் பதித்து
குலுக்கியதே பலரை காலரா--
மனிதனிற்குள் நுழைய
பாதை அமைத்தது கொசு,
உள்ளே புகுந்தது டெங்கு
ஊதியது பலருக்கு சங்கு !!
இங்கே மனிதனின் ஆரோக்கிய கணினிகளை
தொற்று நோயாய் பல வைரஸ்கள்
அரித்துக்கொண்டிருக்கின்றன !!
இந்தக்கலகக்கூட்டத்தில் தனித்த தொற்று ஒன்று
நன்மையே செய்யுமாமே – அது
“சிரிப்பென்ற” பெயருடன்  சில்லென்று வருமாமே !!
ஆம் !! உலகத்திற்குள் உவகை புகுத்த
நமக்கு வேண்டும், விவேகானந்தரின்
நான்காம் மந்திரம் -  “சிரித்திரு”

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி  

**
மனிதர்களே வாய்விட்டு சிரியுங்கள் 
அது.......................
இறந்தகால சோகங்கள்  
நிகழ் கால வேகங்கள் 
எதிர்கால  வெற்றிகள் 
என முக்காலம் காட்டும் 
கண்ணாடி என்பதால்   
 மனிதர்களே  வாய்விட்டு சிரியுங்கள் 
அது................
வாழ்க்கை என்ற  கரும்பலகையில் 
பெருக்கல்,  கூட்டல், வகுத்தல்  என 
வாழ்க்கையின் கணக்குகளை 
தவறின்றி  போட  உதவும் கையேடு 
மனிதர்களே  வாய்விட்டு சிரியுங்கள் 
அது..................
சுற்றங்களையும்  
உற்ற நண்பர்களையும் 
மற்ற  உணர்வுகளையும் 
இணைக்கும் இரும்பு பாலம்!
மனிதர்களே  வாய்விட்டு சிரியுங்கள் 
அது...........
ஞாலம்  என்ற  பெரிய மேடையில் 
நடிக்க கற்றுக் கொடுக்கும் 
பற்று மிக்க  இயக்குனர்!
சிரிப்பு   -  செலவின்றி 
ஆரோக்கியமாக  வாழ  உதவும் 
மருந்து!..... சிரிப்போம் 
ஆரோக்கியமாக  வாழ்வோம்!

- பிரகதா நவநீதன், மதுரை  

**
மனிதனை மற்ற உயிரிகளிடமிருந்து 
தனித்து காட்டுவது சிரிப்பு!
ஐந்தறிவுடைய  மிருகங்கள்  அறியா 
ஆறறிவுடைய  மனிதனுக்கு மட்டுமே 
தெரிந்த உன்னத செயல் சிரிப்பு!
பலவகை இருக்கும் சிரிப்பில் 
மகிழ்வோடு சிரிப்பது  ஆனந்த சிரிப்பு!
பிறரை  குற்றம் கூறி சிரிப்பது  ஆணவ சிரிப்பு!
அடுத்தவரை  புண்படுத்தி சிரிப்பது 
அகங்கார  சிரிப்பு!
மழலைகள் சிரிப்பில்  
கள்ளமோ   கபடமோ இல்லாமல் 
வெள்ளை நிற சிரிப்பை  காணலாம்!
நகைச்சுவை உணர்வு தரும் 
மிகையில்லா  தீர்ப்பு  ஆனந்தமானது!
சிரிப்பில் மறக்கலாம் உலகை !
பூரிப்புடன் சிரித்தால் 
உடலும் உள்ளமும் 
திடமும்  ஆரோக்கியமும் 
மடைதிறந்த  வெள்ளமாக தேடிவரும்!
சிரிப்போம்....உலகை  மறப்போம்!
ஆரோக்கியமாக  வாழ்வோம்!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**
சிரிப்பு வருது 
நாகரீகக் கோமாளிகளை 
நினைக்கையில்,
உடம்பை மறைக்க கண்டறிந்தான்
ஆடையை இன்று
பளிச்சினு தெரியுது 
கிழிக்கப்பட்ட ஆடைகள்;

ஊருக்கு ஒதுக்குப்புறம்
மதுக்கூடம்இன்று
அதனைச் சுற்றியே
வாழ்விடங்கள்;

எத்தனை சோதனைகள் புத்தி
கெட்ட மாந்தரால்
இந்தனைக்கும் போலி சிரிப்பு
தானே காரணம்;

தன் வளர்ச்சி காணுவதாய்
சமூகத்தை குழி பறிக்கும்
சுயநல பேய்களை
சிந்தித்து சிலிர்ப்பதா; மாறாத
மடையரை எண்ணி எண்ணி
சிரிப்பதா.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

பூமியின் பிள்ளைகளே
உமக்கு இல்லாத
குணங்கள்
ஆறறிவுக்குள் மட்டும் கண்டேன்

ஆனந்தப் போக்கினால்
அழிகின்ற பாதையில்
சுவையான நினைப்பினில்
விழுந்து திரிகிறான்;

தன்னம்பிக்கை கெட்டு
அவநம்பிக்கையில் அலைபவன்;
சிந்தனை செய்யாமல்
நகைச் சுவையினை ரசிக்காத

இயந்திரமாய், நிற்காமல் ஓடி
எதைத்தான் தேடுகிறானோ;
விலங்கிடம் இருந்து பிரித்துக் காட்டும்
நகைச் சுவையால் நடுக்கத்தைக் கெடுத்து;

மனத்துக்கு வலிமை கொடுத்து
மாற்றத்தை இழுத்து
மானத்தை உயர்த்தி
வாழ்வில் வெல்லலாமே
நீயுமிதை நம்பலாமே.......

- சுழிகை ப.வீரக்குமார்.

*********************

குங்கு  மச்சிமிழ் வாய் திறந்து குழந்தை சிரிக்கும் சிரிப்பு
பொங்கும் உணர்வுடன் அம்மா பூரித்து ரசிக்கும் சிரிப்பு

இலக்கியம் சொல்லும் இதழின் அலுவல்கள் சிரித்தல்
இசைத்தல், உணவுண்ணல், முத்தமிடல்,உச்சரித்தல்

இதயம் சுத்திகரீக்ப்படுகிறது நித்தம் நாம்சிரிக்கும் போது
காற்றைப்போல் கவசமாகிறது நாம் சிரிக்கும் சிரிப்பு

அதிசயம் பாரீர் சிரிப்பின் ஒலி கேட்கும் வீட்டை
அணுகாது நோய் என்றும் அறிவோம், வெல்வோம்

பூக்கும் உதகை மலர்த் தோட்டம் கூட
பூக்கும் குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகாது

பார்க்கும் மனிதர்க்  கெல்லாம் பாடம் “ சிரிப்பு”
பயிலுவோம் சிரிப்போம்! வெல்வோம் வாரீர்!

- கவிஞன் அணிபுதுவை கோவேந்தன், இராஜபாளையம்   

**

கொவ்வை இதழ்விரிப்பு குழந்தை சிரிக்கும் சிரிப்பு
கொஞ்சுமொழி கேட்டு பூரித்துத் தாய் சிரிக்கும் சிரிப்பு
இதழின் வேலைகளாய் தமிழ் மரபு சொல்கிறது
இசைத்தல், முத்தமிடல், உண்ணல்,உறிஞ்சல்
உச்சரித்தல், சிரித்தல் உணர்வுகளாய் சொல்லுகிறார்
அத்தனையும் இதழின் அன்றாட அலுவல்கள்
இதழ்சிரிப்பில் சிதறும் நோய்கள் மரிக்கும் வியாதிகள்
சிரிப்பின் பலன் இவை,இருந்தாலும் சிரிக்காதோர் உண்டு!
சிரிப்பொலி கேட்கும் வீட்டு திண்ணையை நோயணுகாது
சிரிப்பில் இத்தனை இருக்கிறது சிறப்பாய் சிரிப்போம் நாம்
நித்தம் நாம் சிரிக்கும் போது சுத்தீகரிக் கப்படுகிறது இதயம்
“சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு சொந்தமான திந்தச்சிரிப்பு
கலைவாணர் பாடினார்! சிரிப்பை சொந்தமாக்கிக்கொள்வோம்  

- கவிஞர் சூடாமணி, இராஜபாளையம்

**

சிரிக்கும் தருணங்களில்
ஓடி ஒளிந்துகொள்கிறது
எந்த நோயின் வலியும்
அழகின் உச்சத்தைக் காணலாம்
காந்தியின் சிரிப்பிலும்
மோனலிசா புன்னகையிலும்
இளம்பெண்ணின் கண்ணும் சிரிக்கும்
இதயத்தில் காதல் மலர்ந்தால்
யார் சொன்னார்
மனிதருக்கு மட்டுமே சிரிப்புச் சொந்தமென்று
கொடியின் சிரிப்புதானே பூக்கள்
நம்
வெள்ளைச் சிரிப்பையும்
கொள்ளையடித்துவிட்டார்களே
அதிகாரப் படையெடுத்துவந்து

- கோ. மன்றவாணன்

**

சிரிப்பென்னும் அருங்குணத்தால் மனித ரிங்குச்
      சிறப்புற்றார் செம்மையுற்றார் மற்று யிர்கள்
பிரித்திங்கு அடையாளம் காண்ப தற்கு
      பிழையில்லா மேன்மையெனப் பெரிதும் சொன்னார்
சிரிப்பொன்றே முகவரியாய் அழகு சேர்க்கும்
      செயலெதுவும் சாதிக்கத் துணையாய் நிற்கும்
சிரிப்பதனால் உடற்குருதி ஊறு மென்பார்
       சிரித்திடுவோம் நட்டமில்லை உறவைக் காக்க

சிரிப்பாகச் சிரிக்கின்ற வாழ்க்கை வேண்டாம்.
       சிரிக்காத அழுமூஞ்சித் தோற்றம் வேண்டாம்
செரிக்காத உணவதனால் வலியும் வேண்டாம்
       சிரிக்கின்ற குணமதனால் வம்பும் வேண்டாம்
எரிகின்ற சூழலையும் இதமாய் ஆக்கும்
       இருக்கின்ற பகைமையையும் இல்லா தாக்கும்
சிரிப்பொன்றே மருந்தாகும் உள்ளம் சீராயச்
       செயல்படுமே நன்றாக வாழ லாமே.

- கவிமாமணி "இளவல்" ஹரிஹரன்

**

ஜாதி, மத, பேதம் இல்லாதச் சிரிப்பு!
மனிதர்க்கு மட்டுமே உண்டானச் சிரிப்பு! 
எந்நாட்டு மக்களுக்கும் உண்டு சிரிப்பு! 
உணர்ச்சிகளின் உந்துதலால் வரும் சிரிப்பு!
ஒற்றுமையின் கலகலப்பு சிரிப்பு!
பலதரப்பட்ட சிரிப்புகள் உண்டு,
பல குணம் கொண்ட மனிதர்களிடத்தில்!
எல்லாச் சிரிப்பும் ஒன்றல்ல!
சிரிப்பு மட்டும் வாழ்வல்ல!
ஏளனச் சிரிப்பை எதிர்கொண்டு - பல
வெற்றிகள் பெறுவாய் 
தன்னம்பிக்கையாேடு!
சிரித்து வாழ்ந்தால்,சிந்தனை வரும்!
நோய்கள் தீரும், நிம்மதி கிடைக்கும்!
பிறப்பு முதல் இறப்பு வரை, 
நிமித்தமான சிரிப்பு கூடவே வரும் - அது
மனிதர்க்கு சுயநினைவு உள்ள வரை
அது தாெடர்ந்து வரும்
சிரிப்பில்லா மனித வாழ்வு
வாழ்நாளை பாதியாக்கும்!!

- மு. செந்தில்குமார், ஓமன்

**

 

Tags : smile laugh LoL laughter keep smiling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT