இரட்டையர் வாசகர் கவிதை பகுதி 2

என் விழிகளுக்கு நீ பார்வையாய்! உன் மொழிகளுக்கு நான் பொருளாய்!
இரட்டையர் வாசகர் கவிதை பகுதி 2

இரட்டையர்!

கர்ணனுக்குக்கோர் கவசகுண்டலம்!
எனக்கு நீ!

தனித்த கருப்பையில்
உன் தனிமைத் தாகம் தீர
பாசமழையாய் 
உன்னுடன் அவதரித்தவன் நான்!

சேர்ந்தே அழுகின்றோம்..
சேர்ந்தே சிரிக்கின்றோம்..

என் விழிகளுக்கு நீ பார்வையாய்!
உன் மொழிகளுக்கு நான் பொருளாய்!

உலகத்தீரே! நிற்க!
என் நிழலுக்கு உயிருண்டு, அவதானிப்பீராக!

நீ வா சகோதரா..
வள்ளுவனையும் அவ்வையையும் 
நெஞ்சகத்தில் குடியமைத்து 
ஓர் மாசற்ற தரணியைச் சமைப்போம்!

- த.சௌந்தரராசன், இராமநாதபுரம்.

தங்க மீன்களாய்
தரையிலே தவழ்ந்தனர் !
ஒரே மாதிரி உடையணிந்து
ஒரே மாதிரி தோன்றி
கண்கள் மலர.
காண்பவர் திகைக்க..
அரும்புகள் செய்யும்
குறும்புக்கு பஞ்சமில்லை!
அறிவில் அவர்களை
வெல்ல எவருமில்லை !
வீடும் நாடும் நலம் பெற
விந்தை பல புரிந்து
நீண்ட நீண்ட காலம்
நீடூழி இவர்கள் வாழவே
வேண்டுகிறேன் !

- ஜெயா வெங்கட், கோவை.45

**

வெற்றி தோல்வி
தோழமையுடன் தோள் பற்றி 
வண்ணத்துப் பூச்சிகளாக
வட்டமிட்டுப் பறந்தோம் !
ஒன்றாகப் படித்து
ஒன்றாக நடித்து
ஒன்றாக உண்டு
ஒன்றாகவே ஊர் சுற்றியதால்
இரட்டையர் என்றே அழைக்கப்பட்டோம் !
இன்றும் தொடரும் நட்புக்கு
இறைவனுக்கே நன்றி
உரைக்கிறோம் !

- கே.ருக்மணி.

ஒருமலரே பூக்குமென எதிர்பார்த்து நின்றோம்
    உயர்வாகும் மகிழ்வினிலே உற்சாகம் கொண்டோம்
கருவறையில் ஒருதெய்வம் கருணையது என்றே
    காத்திருந்து பாத்திருந்து  களிப்போடு நின்றோம்
பொருத்தமுடன் அலங்காரம் செய்திடவே எண்ணி
    புதுவரவை எதிர்பார்த்து புதுமகிழ்வு கொண்டோம்
திருமுறைகள் தினம்பாட கேட்டவரம் வாங்க
    தேர்கூடும் ஊர்வலத்தில் தொழுதிருந்து வந்தோம்

நெருப்பிட்டு அதன்மீது நடந்தநிலை உண்டு
    நெகிழ்ந்திடவே பக்தியிலே திளைத்தநிலை உண்டு
ஒருபிள்ளை வேண்டுமென ஓயாது கேட்டோம்
    உண்ணாமல் நோன்புநிலை இருந்தபசி கண்டோம்
அருளென்றே இறைதந்தான் துணைகொண்ட  செல்வம்
    அருகருகே இருகனிகள் அகம்மகிழத் தந்தான்
திருவயிற்றுக் கருவறையில் இருமலரின் காட்சி
    தெய்வத்தின் சன்னதியில் “இரட்டையர்கள்” ஆட்சி

-- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**

அகிலத்தில்  பிறந்து  மூச்சுவிடத் 
தொடங்கியதும்........மறந்தனர்  
கருவறையின்  இணைப்பினையும்...
இதுதான் கலியுகம்!.....
"இரட்டையாக  பிறந்தாலும்    
வாயும் வயிறும்  வேறுதான்  என 
சேயும் பிள்ளையும்    நிரூபித்தனரே!
நாம் படைத்த  பணம்.............
"இரட்டையரையும்"  பிரிக்கும் 
"ராட்சன்" என உணர்ந்து  
செயல்பட்டால் அதுதான்   
இரட்டையரின்  சிறப்பு!

- பிரகதா நவநீதன், மதுரை

**

உலகில் ஒன்றினை 
உணரும்போது மற்றொன்று
உருவானால் அவையெல்லாம் 
இரட்டையாகுமே! 

அம்மா அன்பு 
தாய்மை உணர்வில் 
இரட்டையர்கள்!

சூரியன் சந்திரன் 
பூமி இயக்கத்தில் 
இரட்டையர்கள்!

இன்பம் துன்பம் 
காதலர்கள் விழிகளில் 
இரட்டையர்கள் !

கவிஞன் கவிதை 
கற்பனையுலகில் 
இரட்டையர்கள் !

வண்ணம் ஓவியம்
எண்ணிப் பார்த்தால்
இரட்டையர்கள் !

வெற்றி தோல்வி
பிரிக்க முடியாத  
இரட்டையர்கள் ! 

மெய் பொய் 
பேச்சில் செயலில் காணும்
இரட்டையர்கள்!

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்

ஒட்டிப் பிறந்த முரணான
இரட்டையர்கள் அவர்கள்...
அவன் இவனைக்
கண்காணித்தபடியே இருக்கிறான்.
பல நேரங்களில்
அவன் 'செய்யாதே' என்பதையே
இவன் செயகிறான்.
'செல்லாதே' என்று 
எச்சரிக்கும் இடங்களுக்கும்
இவன் செல்கிறான்.
'இதெல்லாம் தவறு' எனும்அ வனின்
எச்சரிக்கைகளை அலட்சியம்  செய்கிறான்...
ஒன்றோடொன்றாக ஒட்டிப் பிறந்த 
முரணான இரட்டையர்கள்
இவனான 'நானு'ம்
அவனான 'எனக்குள் நானு'ம்...!

 - ஆதியோகி

**

கருவறையில் ஒன்றாய் வளர்ந்து
....கூட்டினில் வாழும் பறவையானோம்
இருவரும்  ஒன்றாய்ப் பிறந்து
....இவ்வுலகின் இரட்டையர் ஆனோம்
உயிர்கள் இரண்டாய் இருந்தும்
....உணர்வு ஒன்றாய் இருந்தது
பயிர்கள் போல பசுமையாய் 
....பாசமும் நெஞ்சினில் வளர்ந்தது
கொடியில் வளரும்மலராய் தாயின்
....மடியில் நாமும் கிடந்தோம்
மடியும்வரை பிரியாமல் இந்த
....மண்ணின் மடியில் நடந்தோம்
இருவிழிகள் போல நாமும் 
....இணைந்தே நலமுடன் இருப்போம்
இருவழிகளில் பயணம் சென்றாலும்
....இன்பமான கனவுகளை சுமப்போம்
 
 - கவிஞர் நா.நடராஜ்

**

நிலவே தோன்றாத கிரகமுண்டு -என்
கர்ப்ப கிரகம்தான் அது - அதில்
ஒற்றை நிலவே கோடையின் கானல்நீராய்-
தாகமே தீருவதில்லை - தேகத்தில் நிலைப்பதுமில்லை
உடல்ரீதியாய் குறைவைத்தவன் இறைவன் - எங்களை
மனரீதியாய் காயப்படுத்தின இந்த சமுதாயம் -
பெற்றெடுத்து வளர்க்க உடல் ஒத்துழைக்கவில்லை 
தத்தெடுத்து வளர்க்க உரியவர்கள் விடுவதில்லை;
பிரச்சனைகளுக்கு செவிகொடுக்கும் செவிகளை விட - இங்கு
உபதேசம் செய்ய  புறப்படும் உதடுகளே அதிகம்-
இறுதியாய் எங்கள் வானிலும் இரட்டை நிலாக்கள்
பெற்றெடுக்காமலும் - தத்தெடுக்காமலும் - இரு குழந்தைகள் -
எனக்கு அவரும் - அவருக்கு நானும்
'இரட்டையர்'களாக பயணிக்கிறோம் இனிய வாழ்க்கையை...!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**

எங்களின்
ஒற்றை பெருந்தவத்தின்
பலனாய் இந்த
இரட்டையர்...
மூன்றாம்தர பேச்சுக்களை
பொய்யாக்கியது எங்களின்
இந்த புது வரவு
எங்கள் 
நால்வரோடு
ஐந்தாம் நபராய் 
வீட்டில் நிரந்தரமாய்
குடியேறியது...
மகிழ்ச்சி!

- ச.கீர்த்திவர்மன், புதுச்சேரி

 
மரத்தையுமே சுற்றிவந்து மந்திரத்தை உச்சரித்தே
……….மழலைவரம் தாவெனவே மண்டியிட்டுக் காத்திருந்தேன்.!
வரமாகக் குழந்தைவரம்.. வல்லவனாம் இறைவனிடம்
……….விருப்பமுடன் வேண்டியருள விண்ணப்பம் செய்துவைத்தேன்.!
விரதத்தின் மகிமையாக வந்ததுவே பொக்கிஷமாய்
……….விலையில்லாச் செல்வமாக வாழ்நாளை இன்பமாக்க.!
இரட்டையராய்ப் பிறந்ததாலே.! இதுபோதும் என்பதாக..
……….இருபாலாய்த் தந்துவிட்டான்.! இன்பத்துக் களவில்லை.!

.
அரட்டைக்கும் களிப்புக்கும்..ஆரவார கொஞ்சலுக்கும்
……….அளவில்லா ஆனந்தம்.! அனைத்துக்கும் பஞ்சமில்லை.!
அரண்மணைக்குப் புகழான அரியாசனம் பூந்தவிசு
……….அனைத்தையுமே வாங்கியதில் அழகாக அமரவைத்தேன்.!
இரவுபகல் பாராது இருவரையும் பராமரித்து
……….இந்நாட்டுப் பிரஜையென இருமாப்பில் மகிழ்ந்திருந்தேன்.!
இரட்டையராய்ப் பெற்றுவிட்ட இரட்டிப்பு மகிழ்ச்சிதனில்
……….ஈந்தவனைப் புகழ்ந்திடவே இச்சன்மம் போதாது.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

ஒட்டிப் பிறந்த ரெட்டையரென
விட்டுப் பிரியாமல்
இருந்து கொண்டிருப்பதிலிருந்து
விட்டு விடாமல்
தொடர்ந்திருக்க வேண்டி
கண்காணித்துக் கொண்டிருப்பதை
கவனிக்கும் எவரையும்
விட்டு வைத்ததாகத் தெரியவில்லை
ஒழிக்க முயன்றும்
ஒழியாமல்
இருந்து கொண்டிருக்கிறது
இன்னும்
இரட்டைக் குவளை முறை
கிராமத்தில்;
நாடு விடுதலை அடைந்தும்
விடுதலை ஆகாமல்...

- கா.அமீர்ஜான்./ திருநின்றவூர்

**

எதிரில் நிற்பவரின் முகம் காட்டும் கண்ணாடி போல்
எதிரில் நிப்பவரின் அகம் கட்டும் நண்பர்களும் இரட்டையர்கள்!
திருக்குறளின் வரிகள் இலக்கியத்தில் இரட்டையர்கள்!
இரட்டைக் கிளவியோ இலக்கணத்தில் இரட்டையர்கள்!
சந்திரனும் சூரியனும் வானில் இரட்டையர்கள்
இரவும் பகலும் ஒரு நாளில் இரட்டையர்கள்!
ஒரு பயணம் போகும் இரு காலும்
ஒரு பார்வை பார்க்கும் இரு கண்ணும் 
ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் இரு முள்ளும்
ஒரு மின்சாரம் பாய்ச்சும் நேர் எதிர் மினுட்டங்களும் 
இரட்டையர்களே!

 -கு. முருகேசன்

**

மகிழ்ச்சிப்பூவை எந்நாளும் மனதினில்
மலரச்செய்யும் இரட்டையர் யார் ?
பிறந்தவுடன் பெறும் “பாலும் பாசமும்” – அவையா ?
மாணவச்செடியில் தொடர்ந்து காய்க்கும்
“உணவும் கல்வியும்” - அவையா ?
சமூகப்படிகளில் கைகொடுக்கும்
“உழைப்பும் பொருளும்” - அவையா ?
குடும்பக்காற்றில் பறக்க சிறகுகள் வேண்டுமே !
“மனைவியும் குழந்தையும்” அவையா ?
இவையெல்லாம் ஒரு ஒற்றை மனிதனின்
சுயநலசிந்தனையை குளிர்விக்க வந்த அருவிகள் !
செழிக்குமா பொதுநலப்பயிர்?
மற்றவர் மகிழ்வு, சுற்றவர் சுகம் தரும் இரட்டையர் யார் ?
“அன்பும் அறமும்” – இவைதானே !

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**

ஒருமுறை பார்த்தால்,
மறுமுறை பார்க்கத்தூண்டும்;
விழுந்தெழும் குழந்தை
வாழ்வை சொல்லித்தரும்

ஒரு மரத்தில்,
பல கனிகள்;
ஆனால் சுவையோ 
ஒன்று

ஒரு கல்லில்,
இரு மாங்காய்;
இரட்டையோ 
நன்று

- ம.சபரிநாத், சேலம்

இன்பம் துன்பம் உறவு பிரிவு
இரவு பகல் இனிமை கசப்பு
வெப்பம் குளிர் வேதனை சுகம்
இப்படியாய் ஆனது 
இரட்டையர் உலகம் – அதனால்தானே
இவ்வளவு கலகம்!

விரட்டி யடித்தால் நெருங்கி கடிக்கும்
நெருங்கிப் போனால் விரட்டி யடிக்கும்
இருட்டில் ஒளியும் ஒளியின் கூட்டம்
ஒளியில் ஒளியும் இருட்டின் ஆட்டம்
அன்பின் ஆழம் பகையின் கோலம்
பகையும் புரியும் அன்பின் ஜாலம் 
ஜனனம் மரணம் நோக்கிய பயணம்
மரணம் ஜனன ஜனகன கீதம்
உறவின் சுகமது பிரிவில் கலையும்
பிரிவும் உறவின் உச்சியில் விளையும்
இப்படியாய் ஆனது 
இரட்டையர் உலகம் – அதனால்தானே
இவ்வளவு கலகம்!                        

 - கவிஞர் மஹாரதி

**

வாழ்க்கை எனும் சக்கரத்தில்
திருமணம் எனும் பந்தமதில்
இணைந்து ஆண்டுகள் பல கடந்துவிட
தாய்மை எனும் மகுடம் இன்றி
மலடி எனும் பதம் தாங்கி 
சமூகம் என்னை எள்ளி நகையாடிவிட
நான் அரச மரத்தை சுற்றி 
பிள்ளை வரம் வேண்டுமென
அனுதினமும் வேண்டி நின்ற வேளையிலே
இறைவனின் அற்புத படைப்பாக
என் வாழ்க்கையின் அா்த்ததம் சொல்ல
தாய்மைக்கு அழகு சோ்த்து என் கரங்களில்
இன்று பெண் எனும் தெய்வ வடிவில் 
குழந்தைகளாய் அழகான இரட்டையா்கள்.

- ஈழநங்கை

**

தமிழன்னை மடி தவழும் அடுக்குத்தொடராய்
அன்னை கருவறைத் தொட்டிலிலே
இருகுழவிகளும் மலர்ந்தனவே
ஒரு கொடியின் இருமலராய் !

ஈகை கற்பித்த புண்ணிய தளமாம்
இருள் சுழலும் கருவறையுள்
இருவர்க்கும் சம இட ஒதுக்கீட்டில்
இரட்டையர் ஒருவர் நகலாய் மற்றொருவர்

இருவருள்ளும் மாதிரிகள் அதிகமிருப்பினும்
இரட்டையரிலும் எண்ணங்கள் வெவ்வேறாய் !
இறைவன் கொடுத்தானோ இணைப்பை
ஒன்றுக்கு ஒன்று இலவசமாய் 
சுகமான சுமையேற்ற அன்னை மனம் மகிழ !!

- தனலட்சுமி பரமசிவம்

**

கிரிக்கட்டில் கெட்டிக்காரர்கள் கீர்த்திமிகு விளையாட்டாளர்
ஆஸ்திரேகியாநாட்டின் அன்பளிப்பு,விளையாட்டால் மகிழ்விப்பார்                 
ஸ்டீவ் வா, மார்க் வா இருவரும் இரட்டையர்கள் அதான் சிறப்ப
ஸ்காட் கெல்லி, மார்க்க கெல்லி, அம்ரிக்காக்காரர்கள் இரட்டையர்கள்
வானவெளிவீரர்கள், வானவெளியில் சாதனை செய்தவ்ர்கள் வல்லவர்கள்
இதில் முன்னவர் ஸ்காட் கெல்லி ஒர் ஆண்டு  வனவழியில் வசித்தார்
மைக்கேல் ஸுமார்க, ரபுல் சஸுமார்க, கார்ரேஸ்ஸில் சாதனையாளர்கள்
ஜெர்மானியர்கள் முதலில் துவங்கிய முன்னோடிகள் முதல்பார்முலாக்காரர்
இவற்றுக்கெல் மேலாக நம் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஏ.ஆர் மற்றும் ஏஎல்
இரட்டையர்கள் ஏ, ராமசமிமுதலியார், ஏல் லட்சுமணசாமி என்பார் ஆவார்
நிகரற்ற மகப்பேறு மருத்துவர்கள் உலகளவில் புகழ் ஓங்கிய வாழ்ந்தனர்
இதில் ஏ.எல்அவர்கள் நீண்டநாள் சென்னை பல்கலையின் துணைவேந்தர்

- கவிஞர் அரங்க கோவிந்தராஜன், இராஜபாளயம்

**

இரட்டை நயனங்கள் 
பேசின் உலகே 
வீழ்ந்திடும்தானே ! - உலகினில்,
இரட்டைதான் சாதியும்; 
நல்லோர், தீயோர் என்பது சத்தியந்தானே !
மனைவியும், கணவரும் இரட்டையரே, 
நேரிய வாழ்வினிலே !
மனமும், செயலும் இரட்டையரே மானுட தர்மத்திலே !
பூவானச் சிரிப்பும், பூரிக்கின்ற மனமும் 
இரட்டை, இரட்டையர் தானடா !
புவிவாழ்வில் வெற்றியும், 
தோல்வியும் இரட்டை, இரட்டையர் தானடா !
வீணையின் நாதமாய், பெண்ணுக்கு 
இரட்டையர் பிறப்பது உவப்பே !
விந்தையாய் எனக்கும் ஆணொன்று, 
பெண்ணொன்று, இரட்டையர்; என் தவமே ! 

- கவி, அறிவுக்கண் 

**

என்னைப் பார்க்கும் நானும்
எனக்குள்ளே நானும் இரட்டையராய்
கண் மூடிய மோனப் பொழுதினில்
எந்நொடியில் நிகழும் சுகானுபவம்
ஓராயிரம் நட்சத்திரங்களை
குறுக்குவெட்டாய் ஒளிரச் செய்யும்
வாழ்வினில் இந்நொடியே அற்புதம்
நினைவின் ரேகை உயிர் நனைத்திருக்க
இக்கண பரவசத்தின் உச்சம்
உடலின் அதிர்வுகளாய்
அழியாக் கனவொன்றின் மிச்சம் என
எனக்குள் முகிழ்கிறது!

- உமா ஷக்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com