நெடுவாழ்வின் நினைவுப் பாதை! வாசகர் கவிதை பகுதி 1

எத்தனையோ நினைவலைகள் நெஞ்சிலிங்கே நாளுமுண்டுஅத்தனையும் சொல்லிடவே உற்றதொரு நேரமுண்டோ?
நெடுவாழ்வின் நினைவுப் பாதை! வாசகர் கவிதை பகுதி 1


நெடுவாழ்வின் நினைவு
 
எத்தனையோ நினைவலைகள் நெஞ்சிலிங்கே நாளுமுண்டு
அத்தனையும் சொல்லிடவே உற்றதொரு நேரமுண்டோ?
இன்பங்களும் துன்பங்களும் கூட்டலுடன் கழித்தலுமாய்
சின்னச்சின்ன செயல்களுமே பெருகிவரும் மனமுழுதாய்
பகுத்தறிந்த பாடங்களும் வகுத்தன நற்பாதைகளே
தொகுத்திருந்த யெண்ணங்களாய் உள்ளமெல்லா மாடிவரும்
நல்லதெல்லாம் நின்றிருக்க வசந்தமெங்கும் பரவிநிற்கும்
தொல்லையின்றி வாழ்வினிக்க அந்நினைவுகளே கைகொடுக்கும்!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

நெஞ்சிலே புதைந்திருக்கும்
நெடுவாழ்வின் நினைவுகள்
சுடும் வெய்யிலில்
சுகமான தென்றலாக...
மலர்களைப் போல பூத்துக்குலுங்கிய
மாணவப் பருவமது..
சிலிர்க்க வைத்து
சிந்தையில் சிறகடித்து
கவலையின்றி  திரிந்த
பொழுதுகள் .....
நிலையான நட்பின் பெருமையை
நினைக்கையில் என்றும் இளமை !
உறவுகளுடன் வாழ்ந்து
உயிரையும் உணர்வையும்
உரசிப் பார்த்த நினைவுகள்..
இனிமையான இல்லறத்தில்
இதயம் தொட்ட நினைவுகள் என.
இந்த தள்ளாத வயதிலும்
அசை போடுகிறது மனது !
நினைவு தரும் சுகத்திலேதான்
நிஜத்தின் சுமைகள் மறக்கப்படு கின்றன !

- ஜெயா வெங்கட்

**

ஞாலத்தில்  பிறப்பது  ஒரு முறை 
காலம்  உணர்ந்து  நெடுவாழ்வு 
தாளமுடன்  கிடைத்தால் 
அந்நினைவே  "மலரும்  நினைவு"
நினைவுகள்  இனிமையாக  அமைய 
கனவுகள்  கண்டு அதை 
நிறைவேற்றுவதால்  பெறலாமே 
குறைவிலா  நினைவுகள்!
"நெடுவாழ்வில்  மிக மிக அவசியமானது 
கடுமையான  உழைப்பும் 
தளர்வில்லா  நம்பிக்கையும் 
இரண்டும்  இருந்துவிட்டால் 
கரைபுரண்டோடும்  வெற்றி
நிறைவோடு தேடிவருவது  உறுதி!
வெற்றிக்கனி  சுவைத்த  "நெடுவாழ்வின் 
சுற்றிக் கிடைக்கும்  நினைவில் 
காண்பது  இன்பத்தின்  சொர்க்கம்!
"நெடுவாழ்வின்  நினைவுகள் 
கடுமையின்றி  பெருமையுடன் அமைய 
தடுப்பின்றி  முயற்சி செய்வோம்!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

சின்னச் சின்ன  குழந்தையாக 
வண்ண  வண்ண  சிரிப்புகளுடன் 
எண்ணம்  போல தூங்கி விழித்து 
மகிழ்வாக  வாழ்ந்த "நெடுவாழ்வு"
என்றுமே  நினைவில்  இருக்குமே  பசுமையாக!
இன்று  நினைத்தாலும்  திரும்பி வராத 
கன்றுக்குட்டி போல  துள்ளித்  திரிந்த 
நெடுவாழ்வு  வாழ்க்கையில்  
நாம்  பார்த்தது  பல  உறவுகளை!
உறவுகள்  மாறினாலும்  நாம் 
மாறா  உணர்வுகளுடன்  பழக  எண்ணுவதே 
சிறந்த  "நெடு  வாழ்வு!
கிடைத்த  நல்ல  "நெடு வாழ்வு"
நினைவுகளை  ஏட்டில்  எழுத  முடியாது!
உள்ளத்தில்  திரும்ப திரும்ப  அசைபோட வைக்கும் 
கள்ளமில்லா   வாழ்வு  வாழ்ந்தால்தான் 
உள்ளம்  விரும்பும்  நீங்கா  நினைவுகள் 
பசுமரத்தாணியாக  வந்து வந்து  போகும்!
நீண்ட  பெருவாழ்வுவான  நெடு வாழ்வு வாழ்ந்து 
தாண்ட  முடியாத  இன்னல்களையும்  தாண்டி  
மகிழ்ச்சியான  நினைவுகளில்  மூழ்குவோம்!  

- பிரகதா நவநீதன்.  மதுரை

**
எங்கேயோ
மழையில்
நனைந்து வந்த
காகமொன்று

துணிக்கொடியில்
அமர்ந்தபடி,

றெக்கை ஆடைகளை
சிலிர்த்தபடி

உதறுகையில்
காற்றில் மிதந்த
சில நீர்த்திவலைகள்!

சருகாய் காய்ந்த
துணிக்கொடியில் 
ஆடிய அந்தரங்க ஆடை

நனைந்து போனது!
உள்ளாடை மட்டும்
அதில் நனையவில்லை

மொட்டை மாடியில்

காயப் போட்ட 
உள்ளாடை காய்ந்திருக்கும்
என்று எண்ணிக்கொண்டு
இருக்கும் ,கீழ் வீட்டுக்காரனின்
நம்பிக்கையும் அதில் நனைந்து விட்டது!

- அம்பேத் ஜோசப்

**

வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
------வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
-----தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
-----விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே
ஏழ்மையிலே தவிக்கின்ற மனிதன் என்றன்
-----எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வேன் நானே !
பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை
------பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை
முச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி
------மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை
கச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்
------கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்
நிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து
------நிறைவாழ்வு வாழ்ந்திடுவேன் வாய்ப்ப ளிப்பீர் !
மாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை
 -----மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை
கேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை
 -----கேள்விக்கு விடைதேடும் என்ற னுக்கு
வாலியினை மறைந்திருந்து கொன்ற போல
------வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து
கூலிக்காய் உழைக்குமென்றென் உழைப்பிற் கேற்ற
 -----கூலிதந்தால் போதுமென்றன் ஏக்கம் தீரும் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

நெடுவாழ்வின் நினைவுகளில் நீங்கா இடம்பிடிப்பவர்கள்
நமக்கு உதவியவர்கள் ஒருபுறம் என்றால் -
நம்மை உதறியவர்கள் மறுபுறம் - நெடுவாழ்வின்
நினைவுகளில் - தேவைகள் என்றுமே  குறைந்ததேயில்லை...
ஒன்று நிறைவேறினால் ஓராயிரம் முளைத்துவிடுகிறது....
இறுதியில் வங்கியில் பணமும் குவிந்துவிடுகிறது....
எடுக்கும்நிலையில் அல்ல - கட்டவேண்டிய நிலையில்...!!!

அவனுக்கென்ன குறை என்றுக் கூறிவிட்டு
அடுத்தவர்கள் நம்மை எளிதில் கடந்துசெல்வர்
உரியவர்களே அறிந்திடுவர் இருக்கின்ற பிரச்சனைகளை-
இதயக்கனவுகள்  குதிரை வேகத்தில் பயணித்தாலும் -
மாற்றம் வருவதோ ஆமை வேகத்தில்தான்...!
என்ன செய்வது என்தேசத்திற்கும் அப்படித்தான்....
என்தாய்  படித்தபோதும் - நான் படித்தபோதும் 
ஏன்...? - என்மகள்  படிக்கின்ற- இக்காலத்திலும்
என் தேசம் வளரும்நாடுகளின் பட்டியலில்தான்...!!!

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

கரைதாண்ட மாட்டேன் என
ஊருக்குச் சத்தியம் செய்துவிட்டு
ஓடிக்கொண்டே இருந்தாள் காவிரி
நிலவு குளிக்க வரும்வரை
கயல்களோடு போட்டியிட்டு நீந்தினர்
மூவேந்தர் காலத்து மக்கள்
ஆழ்துளைக் கிணறுகள் இல்லை
மரகதப் பட்டுடுத்தி மகிழ்ந்தாள்
மண்மகள்
மாசு ஏதும் இல்லாத காற்று
மாசு ஏதும் இல்லாத மனசு
இரவின் மடியில் கண்துயின்றனர்
எம் மூதாதையர்
நள்ளிரவில்
தண்ணீர் லாரி வருமென்று
காத்திருந்த கூட்டத்தில்
எழுந்தடங்கியது அந்த நினைவு.

- கோ. மன்றவாணன்

**

இன்னல் பின்னலென யிம்மின்னல் 
இன்னும் எதுவரைதான் மின்னும் 
விமோசன மொன்று மில்லையா 
எஞ்சியுள்ள காலத்தி லேனும் அவ் 
விமோசனம் தலையை காட்டிடுமா
பொருத்துதான் பார்த்திடு வோமே 
நெடுவாழ்வின் நினைவு எங்களுக்கு 

மீண்டிட தோன்றிய முன்னோர்கள் 
மாண்ட நாள் குறிப்பி லில்லை 
நீண்ட நாள் துயரே தொல்லை 
தோண்ட கிடைக்கும் புதையலிது 
தீண்ட நம்மை தொற்றிவிடுமோ 
வேண்ட கிடைத்த கடவுளவனை 
நாண்ட தலைநிமிரா வேண்டினோம்
நெடுவாழ்வின் நினைவு நிஜமாகவே 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான், மும்பை

**

ஆறில் அறியவில்லை
ஏழில் எடுபடவில்லை
எட்டில் பிடிபடவில்லை
ஒன்பதில் ஒளிபடவில்லை

பத்தில் பலித்தது
பதினொன்றில் இழித்தது
பன்னிரெண்டில் படர்ந்தது
பதிமூன்றில் முழித்தது

பதிநான்கில் புளித்தது
பதினைந்தில் இனித்தது
பதினாறில் சிறகு விறித்தது
பதினேழில் பறந்தது

பதினெட்டில் மலர்ந்தது
பத்தொன்பது பிறந்த போது தான்,வாழ்க்கையே புரிந்தது 
ஏற்றம் இறக்கமென இரண்டுமே இருக்கும்,
சமாளித்து வாழ வேண்டும் வாழ்வை.

- ம.சபரிநாத்,சேலம்

**

நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை படைத்தது இந்த பூமி !
சில நாள்  வாழ்ந்தாலும்  பல நாள் வாழ்ந்தாலும் 
பதிக்க வேண்டும் நான்   ஒரு நல்ல முத்திரை !
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று நானும் 
படைக்க வேண்டும் சரித்திரம் !

ஆயிரம் பிறை காண ஆசை எனக்கு  என் நெடு 
வாழ்வில் ! அந்த நெடு வாழ்வின் நினைவலைகள் 
மீது விடாது தொடர வேண்டும் என் படகுப் 
பயணம் ...நெடு வாழ்வின் இனிய பயணம் !

என் பயணம் முடிந்தாலும் தொடர வேண்டும் 
என் பிள்ளைகள் பயணம் அதே படகில் 
என் நெடு வாழ்வின் நினைவலைகள் மீது !

படைக்க வேண்டும் அவரும் ஒரு சரித்திரம் 
அவரவர் நெடு வாழ்வில் !

- K .நடராஜன் 

**

நெடுவாழ்வின் நினைவு எல்லோருக்கும் உண்டு
நீங்காத நினைவு மூளையின் மூலையில் உண்டு!

பெற்றோர் வளர்த்த பாசம் நீங்காத நினைவு
பசுமையான நினைவு மறக்க முடியாத நினைவு!

முதல் காதல் கைகூடாவிட்டாலும் நம்
மூளையின் நினைவில் மறக்காமல் இருக்கும்!

மணமுடித்த திருமண நாள் நினைவில் நிற்கும்
மனதை விட்டு அகலாமல் நிலைத்து நிற்கும்!

வாரிசு வெளிவந்த நாள் மறக்காது இருக்கும்
வளமான நினைவுகள் எளிதில் மறப்பதில்லை!

சோகமான நிகழ்வுகளும் நினைவில் நிற்கும்
செத்துப்போன நண்பரின் நினைவும் நீங்காதிருக்கும்!

பசுமரத்து ஆணி போல பதிந்தவைகள் உண்டு
பழையவை பல மறந்து விடுவதும் உண்டு!

சுகமான நினைவுகள் எப்போதும் சுவை தருபவை
சோகமான நிகழ்வுகள் எப்போதும் கவலை தருபவை!

பிறந்தவுடன் நடந்தவைகள் நினைவில் இல்லை
இறந்தபின்னே நடப்பவைகள் தெரிவதும் இல்லை!

- கவிஞர் இரா .இரவி

**

நினைத்தாலே இனிக்கும்
வாழ்வின் நற்தருணங்கள்!
நினைத்தாலே கசக்கும்
வாழ்வின் துயர் தருணங்கள்!
ஒன்றா இரண்டா எதைச் சொல்வேன்!
பள்ளிக்கூடம் செல்கையிலே
நாலு டி டீச்சர் அடித்ததுண்டு!
உயர்நிலைக் கல்வி கற்கையிலே
ஊக்கம் தந்த தமிழ் வாத்தியார்!
பட்டயப்படிப்பு படிக்கையிலே
வகுப்பை புறக்கணித்து திரைப்படங்கள் சென்றதுண்டு!
வறுமையின் வாசலில் நின்றாலும்
வறுமை தெரியாமல் காத்தனர் என் பெற்றோர்கள்!
உயிரின் ஓசை  தெரிகையிலே!
உடலின் ஓசை புரிகையிலே!
தனிமை காதல் தனித்தே போயிற்று!
கடின உழைப்பால் முன்னேறி!
திருமண பந்தத்தில் இருந்து இரு பேறு பெற்றேன்!
இவ் நெடு வாழ்வின் நினைவுகள்!
என்றும் மாறாத வைரங்கள்!
"ஜொலிக்கும்" இன்றும் என்றும் என்றென்றும்!!!!

- மு செந்தில்குமார்

**

"அன்பு அனைவரின் இடத்திலும் வாரா !
அழகு வாழ்வினில் நிலையென நில்லா !
'அன்னை, தந்தை, ஆசான், அறிஞர்'
அன்பு மாறா அழியா வாழ்விலே !

ஆன்றோர் வாக்குக் கேளா துலகிலே
ஆடினால் தீமையே அடுக்கடுக் காகவே !
ஆடிடா ஆட்டம் ஆடலாம் புவியிலே
ஆடினால் வாடுவோம் பின்வரும் வாழ்விலே !

இன்பம் தருமெனத் தீமை அதனையே
இனிதாய்ச் செய்தால் இலக்கிலா திருந்தால்
இனிப்பாய் முதலில் இனித்திடும் ; பின்னே
இனிதிலாக் கசப்பாய் எதிர்வரும் வாழ்விலே !"

இப்படி நாற்பது ஆண்டுமுன் யானும்
எப்படி எழுதினேன் ? என்றே வியக்கிறேன் !
ஒப்பிலா நாள்களில் உறைந்தே போகிறேன் !
செப்படி வித்தையா ? சிந்தையில் ஆழ்கிறேன் !

- ஆதிநாராயணமூர்த்தி,பரதராமி, திமிரி

**

பாம்பென வளைந்து நெளிந்த சாலைகள் 
   பார்த்திடப் பார்த்திடத் தலையது சுற்றும் !
தீம்பென உயர்ந்தே ஓங்கிய சாலைகள் 
   சீரார்க் குறுதியைக் கொதித்திட வைக்கும்  !

அழகழ காகவே அடுக்கடுக் காகவே
   அணிவகுத் தங்கே இயற்கையே சிரிக்கும் !
எழயெழ மேலும் எறும்பென ஏறும்
   இனியவா கனங்கள் இரைச்சலில் கதறும் !

மழையது பெய்தால் மலைமண் சரியும்
   மணிநாள் கடந்தே வாகனம் நிற்கும் !
விழையும் இடத்தை விழையும் நேரம்
   விரைந்தே அடையும் வினையது வீழும் !

எத்தனை வாகனம்  எத்தனை வீரரார்
   எண்ணிலா தழிந்ததை இவ்வழி அறியும் !
கத்தலும் கதறலும் கடைசி பேச்சதும் 
   காணும் மலைகளின் காததே அறியும் !

கொட்டும் பனியும் கொத்தும் குளிரும்
   கூறிட முடியாக் கொடிதினும் கொடிதாம் !
மட்டிலா உச்சி மலைகளின் முகட்டில் 
   மலைத்திடும் எல்லையில்  மறவரார் விழித்தே !

ஆயிரம் ஆயிரம் அடிகளின் மேலாய்
   அடிமுடி காணும் அதுநமின் எல்லை !
ஆயிரம் ஆயிரம் படைஞரார் அங்கே 
   அனைத்தையும் துறந்தார் ஆழ்பணி நிமித்தமே !

   - படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு. 

**

வீடு பெற விழையும். எமது
நெடுவாழ்வின் நினைவுகள்
நெஞ்சில் எண்ணங்களாய் அலைமோத
பஞ்சணையில் சாய்ந்திருந்தேன் .
மாதாவின் நினைவலைகள்
சாதாரணம் அல்லவே ? இன்றும்
காத்திரமான எம் தேகத்திற்கு
சாத்திரமான உணவளித்தவள்
பிதாவின் அனுசரணைக்கு ஆகாயம்
உதாரணமாகும் அன்றோ ? சீரான
கல்வி அளித்து வாழ்வு( உ) யர்த்தி
பல் விதமாக செதுக்கியவர்
சகோதரன் , சகோதரியும்
மகோத்தம உறவு அன்றோ ?
நீங்கா நெடுவாழ்வின் நினைவுகள்
தூங்கா எம் சுகமான வசந்தமே !

- ராணி பாலகிருஷ்ணன்

**

உறக்கத்தை தொலைத்து
மறக்க நினைத்தாலும்
மறக்க முடியாத  நினைவுகள்...
ஆறாத மனக்காயத்திற்க்கு
அரு மருந்தாயிருக்கும்
அகலாத. நினைவுகள்....
இதயப் பேழையில்
இசையாய் ஒலித்திருக்கும்
இன்ப நினைவுகள் .....
நினைத்தாலே இனிக்கும்
நிம்மதியும் தரும்
நெடுவாழ்வின் நினைவுகள்...
கனவுகள் கலைந்தாலும்
கணங்கள் கரைந்தாலும் அழிவதில்லை !

- கே. ருக்மணி.

**

கடந்து விட்டதை நினைத்து
எதிர் வருவதை நோக்கி
தவித்துக் கொண்டிருக்கிறது
நிகழ்...

வாழ்வியலின் 
ரகசியமற்ற பெருவெளியில் கிடைத்த
நிதர்சனத்தை எண்ணி
நிகழ்வில் மகிழ முடியாமல்
பயமுறுத்துகிறது
எதிர் வருவதாக இருக்கும்
எதுவும்...

இன்றின் நிகழ்வில்
நேற்றின் முகத்தில் பூசிவிட்டப்
புனைவுகளை
இதுதான் நாளையென்றால்
கடந்ததும் நிகழ்வதும் பொய்யோ மெய்யோ...

உண்மை பயணிக்குமோ என
தடுமாறியபடி
ஏமாந்து விடாமல் நினைவுகள் துரத்த
வரலாற்றுச் சிறகுகளில் ஒட்டி
வெளிறிக் கிடக்கிறது வானம்
பிம்பங்களைத் தெளித்து...

எனவாங்கு,
நெடுவாழ்வின் நினைவுகள்
மவுனத்துள் சரணடைய
நகர்கிறது காலம்...!?

- கவிஞர்.கா.அமீர்ஜான், திருநின்றவூர்.

**

‘ஊர்ந்து கொண்டிருக்கும் காலச்சக்கரத்தை
அவ்வப்போது கடுகித் திருகி தோண்டி எடுக்கிறேன்
என் நெடுவாழ்வின் நினைவுப் பாதையை...
எங்கே புறப்பட்டேன்?
நினைவேதுமிருப்பதில்லை பகற்பொழுதுகளில்
இரவின் ஆழ்கனவில் எண்ணெயாய் மிதந்தலையும்
மீங்கடத்தில் மிச்சமாகின்றன எண்ணூத்திச் சொச்ச பிறவிக் கனவுகள்;
ஒரு யுகத்தில் அஞ்சி நடுங்கும் அபலையானால்
மறு யுகத்தில் பாய்ந்து தாக்கும் புலியானேன்;
யுகம் தோறும் மாற்றி மாற்றிப் பிறந்து வளர்ந்து
சதிராடும் பூமிப்பந்தில் நான் யார் எனும் ரகசியத்திற்கான சாவி
உறைந்திருக்கிறது என் மரபணுக்களில்;
சிறுமை கண்டால் பொறுப்பதற்கில்லையென
எள்ளி நகையாடும் ஏதிலிச் சமூகம் கண்டு
பொங்கிச் சிரிக்கிறேன் தனித்திருக்கும் பெரும்பொழுதுகளில்;
அவனியில் அருமையும் சிறுமையும் ஏதடா மானுடா?
காலம் தோறும் மனிதர்கள் பிறக்கிறார்கள், 
வளர்கிறார்கள், வாழ்கிறார்கள் மறைகிறார்கள்;
அப்பெருங்கடலில் சிறுதுளியாய் மறைவதற்குள்
ஊர்ந்து கொண்டிருக்கும் காலச்சக்கரத்தை 
அவ்வப்போது கடுகித் திருகி தோண்டி எடுக்கிறேன்
என் நெடுவாழ்வின் நினைவுப் பாதையை...’

- கார்த்திகா வாசுதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com