தண்ணீர் வாசகர் கவிதை பகுதி 1

நீயும் கூட என்னைப் போலத்தான் நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், அமர்ந்தால் குற்றம்
தண்ணீர் வாசகர் கவிதை பகுதி 1

தண்ணீர்

நீயும் கூட என்னைப் போலத்தான்
நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், அமர்ந்தால் குற்றம்
நீயென்ன செய்தாலும் குற்றமென்றால்
எங்கே தான் போவாயோ?
போவது தான் போகிறாய் இரு வருகிறேன்
என்னையும் உடனிழுத்துச் செல்;
பெண்கண்ணீர் வேறு ஆற்றுத் தண்ணீர் வேறு அல்ல!
மடை திறந்தால் இரண்டும் ஒன்றே!
உனக்காத்தான் தான் நாட்டில் சண்டையென்று 
இறுமாப்பு கொண்டாயோ 
பாட்டிலில் அடைத்து விடுவேன் ஜாக்கிரதை!
நானும் இருக்கிறேன் போட்டிக்கு;
குடம் தண்ணீர் 5 ரூபாய் என்ற காலம் மலையேறி
லாரித்தண்ணீர் 2500 ரூபாய் 
வாங்கி நிரப்புவதில் நிற்கிறது
சென்னை வாழ்க்கை!
இங்கே பெண்ணுக்கும் தண்ணீருக்கும் தான் விலையே!
அடச்சே!
நடந்தாய் வாழி காவேரி! அல்ல! அல்ல!
வறண்டன வற்றாத ஜீவநதிகள்!
குறைந்தன நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
எங்கு பிழை? எதில் பிழை?! 
தேடித்திரிகிறது மனிதக் கூட்டம்!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் 
திரிந்து கிடைத்த பாலை நிலத்தில் 
எலும்பு மாலை சூடி நிற்கும் 
பகவதியாம் கொற்றவையே
மழை வேண்டும் எங்களுக்கு மனம் திறவாய் பேரெழிலே!
மழைத்தேவதை பெண்ணில்லை ஆணென்று கண்டதனால்
வர்ஷிக்க மறுப்பாரோ அவனியிலே!
செய்... ஏதேனும் செய்!
அன்பு மழையாக அன்னை மழையாக பூமி தொடு!
வற்றாத பெருவெள்ளத் தண்ணீரில்
பெண் கண்ணீர் கரைந்துருகிக் காணாமல் ஆகட்டும்!
அதற்கேனும் நீ இறங்கி வா!

- கார்த்திகா வாசுதேவன்

**
ஒன்றாய்ச் சூழ்ந்து ஒன்றில் வெந்து
ஓன்றில் கலந்து ஒன்றில் மிதந்து
ஒன்றில் தங்கி உயிரை இயக்கும் 
ஒன்றாம் இதையே தண்ணீர் என்க!

இரண்டே முடிந்து மூன்றே வரினும்
இதற்கே என்பர் அறிந்தோர் பலரும்
இனியும் விளிப்பீர் துளியினும் சேர்ப்பீர்!
இனிதே வாழ இணைந்தே காப்பீர்!

சொல் விளக்கம்:
முதல் ஒன்று - கடல்;இரண்டாம் ஒன்று - நெருப்பு (கதிரோன்) ;மூன்றாம் ஒன்று - காற்று 
நான்காம் ஒன்று - வானம்;ஐந்தாம் ஒன்று - நிலம் ;இரண்டும் மூன்றும் - உலகப் போர்.

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

ஏரி-குளம் எல்லாம் நிரம்பி
எத்தனையோ - காலமாச்சு
தூர் வாராத நெல மயாலே
ஆறும் கூட சேறாச்சு,
ஆக்களுக்கும் இல்லாம
மக்களுக்கும் இல்லாம
விவசாயி வானம் பாக்க
மூழ்கடிக்கும் நீராலே
வேற தேசம் தத்தளிக்க
பொட்டுத் தண்ணி இல்லாம
மோட்டு வலைய நாம் பாக்க
கார்மேகம் சேர வேணும்
காவிரித் தாய் கண் தொறக்க
நில மகளும் மண் செழிக்க
கலகலப் பே நாம் வாழ
பொல- பொலன்னு மழ பொழிய - அருள்வாய் நீ
மாரி - யாத்தா. கும்பிட்டு பொங்க வைக்க - தீர்த்தக் குடம் - நாம் எடுப்போம்.
கண் திறந்து பாராத்தா - மக்க- பஞ்சம் தீராத்தா.

- கவிதாவாணி - மைசூர்

**

கோவில்தேரும் தண்ணீர்லாரியும் 
எங்களுக்கு ஒன்றுதான் - வந்துவிட்டால்
ஊரே ஒன்று கூடிவிடும்....!

இரவில் திருடர்கள் பயமே இல்லை -
ஏனெனில் பெரும்பாலும் - எங்களுக்கு
தண்ணீர் வருவதே இரவில்தான்....!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்
எடுத்துவந்த சாதனையாயிருக்கிறது
எங்கள் ஊரில் தண்ணீர் எடுப்பது...!

மனித மனங்கள் - கூவம்நதிபோல்
மாறிவிட்ட காரணத்தால்தான் - இன்று
குடிப்பதற்கும் வழியில்லாமல் இருக்கிறது...!

வரும்போது சேகரிக்காமல்
வறண்டபோது சோகத்திலிருப்பதே
பெரும்பாலும் வாடிக்கையாகிவிட்டது...!

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

தண்ணீர்தாம் பூமிக்குத் தாயாம் ! நம்மைத்
-----தாய் அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த் தாயைக்
கண்போல நாம்பேணிக் காக்கா விட்டால்
----கண்ணீரில் நாளும்நாம் துடிக்க வேண்டும் !
மண்மீதில் சிறுபுல்லும் முளைப்ப தற்கு
-----மழைஈயும் தண்ணீரே உயிராம்1 அந்தத்
தண்ணீரைச் சேமித்துக் காக்கா விட்டால்
-----தார்பாலை ஆகுமிந்தத் தாரும் வாழ்வும் !
முன்னோர்கள் ஊர்சுற்றி அகழி வெட்டி
----முழுநீரைத் தேக்கிவைக்க இலஞ்சி கூவல்
நன்னீராய் சிறைகுளமாம் கிணறு தன்னில்
-----நாற்புறமும் கரையமைத்தே ஏரி தன்னில்
நன்றாக மழைநீரைத் தேக்கி வைத்து
-----நல்லபடி நிலத்தடியில் காத்த தாலே
பொன்போல முப்போகம் வயல்வி ளைத்துப்
-----பொலிந்திருந்தார் தாகமின்றி நிறைந்த வாழ்வாய் !
நீர்தேக்கும் ஏரிகுளம் குட்டை யெல்லாம்
-----நிரவியதை மனைகளாக்கி விற்று விட்டோம்
நீர்பாய்ந்த ஆற்றினிலே கழிவு நீரை
-----நிரப்பியதைச் சாக்கடையாய் மாற்றி விட்டோம்
ஊர்நடுவே ஆழ்துளையில் கிணறு தோண்டி
-----உறிஞ்சியெல்லா நீரினையும் காலி செய்தோம்
சீர்பெறவே காடுமலை காத்து வானம்
-----சிந்துகின்ற தண்ணீரைக் காப்போம் வாழ்வோம் !

( அகழி-ஊரைச்சுற்றி கால்வாய்போல் வெட்டியிருப்பர். 2.சிறை-
மழைநீரின் ஒரு துளியையும் வீணாக்காமல் சேமிக்கும்
நீர்நிலை.3.இலஞ்சி- பல்வகைக்காய்ப் பயன்படுத்தும் நீர்நிலை.4.கூவல்-
பள்ளத்தில் தேங்கிநிற்கும் நீர்நிலை. சங்க இலக்கியங்களில் உள்ள
பெயர்கள் இவை)

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

தண்ணீரே நீயே எங்கள் தாய், நீயே உயிரின் மூலம்
உடலிலும், உலகிலும் நீ தான் நிரம்ப உள்ளாய்.
நீ இருப்பதால் தான் இப்பூமி உயிர்க்கோளமாய் 
இல்லையென்றாலோ இப்பூமி உருளும்கோளமே
அசுரத்தனமாய், சுயநலப்பேயாய் உறிஞ்சிக் குடிக்கிறோம்!
பூமித்தாயின் மடி வற்றிப்போகும் நாள் வெகுதூரமில்லை 
தெரிந்தே தொடர்கிறோம், அறிந்தே அழிகிறோம்!
வறண்டு கிடக்கும் வயல்வெளியும்,
உலர்ந்து கிடக்கும் ஆற்றுப்படுகையும்
விடுக்கும் எச்சரிக்கை புறந்தள்ளி
விரைகிறோம் புயலாய் வீழ்ச்சியை நோக்கி!
இயற்கையின் சமநிலை காக்கத் தவறிய நாங்கள்
செயற்கையின் கோரப்பிடியினில் மடிவோம்.
உனது அருமையை உணர்ந்திட்ட பொழுதினில்
உலகம் உய்த்திடும் சிலநூறு ஆண்டுகள்

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம்

**

உருவமற்ற திரவ மது தண்ணீர் 
உருவமுள்ள உயிர்க் கெல்லாம் 
தாகம் போக்கும் பன்னீ ரதன் 
நிறைவின்மை வடிகிறது செந்நீர் 
கண்களிலே வழிகிறது கண்ணீர் 

தண்ணீர் தேவதையை காணவில்லை
தண்ணீரின்றி மனிதகுலம் சாவதை 
நிலம் காய்வதை காண சகிக்காது 
மண்குடமேந்தி குளம் தேடுவோரை 
புலன் விசாரணை செய்கின்றாளோ 

மூலிகையை முத்தமிட்டு ஓடிவரும் தண்ணீர்; 
மனு குலத்தின் நோயினை ஆற்ற வந்த 
தண்ணீர் அதனையிங்கே 
பணங் கொடுத்து தாகம் போக்கும் 
அவலை நிலை இந்த லோகத்திலே 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

தண்ணீர்

உண்மையிது நீரின்றி அமையாது இவ்வுலகு
கண்மை கரையும் அழுகை தண்ணீருக்காக
அண்மையில் கிடைக்காதது காத தூரத்திலோ
தண்ணென்ற நீரெல்லாம் கானல் நீராகுமோ

காடு அழித்தோம் மரங்களெல்லாம் வெட்டினோம்
நாடு இப்போது வெப்பவூற்றின் வெறிப்பாய்ச்சலில்
ஈடுசெய்திட்ட மழைநீர் சேகரிப்பெங்கே போனதோ
மேடு மணற்குன்றுகள் பணமுதலைகள் வாயிலோ

நீர்வழிச் சாலைகளெங்கும் மாட மாளிகைகளா
சீர்கெட்ட மாந்தர்களாலே தண்ணீர்ப் பஞ்சமா
தூர் வாராமல் தூங்கிக் கிடக்கின்றன ஏரிகள்
பேர் சொல்லவும் நீரில்லை ஏரிகளிலே எங்கும்

நதிகள் இணைப்பிலும் நாட்டமில்லா அரசியல்
கதியின்றி நதிகளும் வறண்டுபோக விட்டனர்
மதியோடு திட்டங்கள் தீட்டி செயல்படலாமே
விதியோடு மோதி வெற்றி நடை போடலாமே

சிக்கனமாய் செலவு செய்யலாமே தண்ணீரை
இக்கணமே யோசித்திடுவீர் மக்களே உண்மையை
சிக்கலாகும் தண்ணீர்ப் பஞ்சம் விரட்டிடுவோமே
முக்காலம் உணர்ந்தே தண்ணீரை சேமிப்போமே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

தண்ணீர் ...தண்ணீர்  நாடகமும் 
திரைப்படமும்  பார்த்த நேரம் புரியவில்லை 
தண்ணீரின் அருமை பெருமை !
திரை இயக்கத்தின் பெருமை பேசி 
அப்போதே மறந்து விட்டோம் தண்ணீரின் அருமை !
தண்ணீர் தண்ணீர் என்று கலங்கினான் 
இந்த மண்ணின் விவசாயி வாடிய அவன் 
பயிர்  பார்த்து ....அப்போதும் தெரியவில்லை 
நகரவாசி  நமக்கு  தண்ணீரின் அருமை !
காற்று மட்டும் வரும் தண்ணீர் குழாய் ,
வறண்டு கிடைக்கும் குளம் குட்டை ஏரி, 
அரண்டு மிரண்டு இருக்கு நம் நகரமே இன்று !
"தண்ணீர் இல்லை எங்க வீட்டிலும்  " என்னும் 
ஒரே ஓரு வார்த்தையில் இணைந்துவிட்டோம் நகர 
வாசிகள் அனைவரும் இன்று! சாதி ,மத ,மொழி 
இனம் பேதம் ஏதும் இல்லை இந்த " இணைப்புக்கு " !
"தண்ணீர் இல்லை" என்னும் விதியால் இணைந்த 
நாம்  சாதி ,மதம் ,  மொழி பேதம் பாராமல் 
மனதாலும் இணைவது எப்போது ? 

- K.நடராஜன் 

**

தண்ணீரே உனக்குத் 
தயவே இல்லையென்று 
கண்ணீர் உகுத்தபடி
கதறிடும் மக்கள்கூட்டம்!
 
அபரிமிதமாய் நீ
அடித்து நொறுக்குவதை
வெள்ளமென்றே மனிதர்
வெறுத்தே யொதுக்கிடுவர்!

கோடையிலே நீ
கொஞ்சமும் இரக்கமின்றி
பூமிக்குள் ஒளிந்தே நீ
புரட்டுகிறாய் மக்களையே!

எல்லோர்க்கும் எளியனாய்
எப்பொழுதும் நீ யிருந்திட்டால்
தெய்வமாய்  என்றுமுன்னை
சீராட்டி மகிழ்ந்திடுவர்!

- ரெ.ஆத்மநாதன், காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**
நிலந்தன்னில் முப்பங்கை நேராகப் பெற்றவளே !
மலர்ச்சோலை மணந்திடவே வானுயிர்த்து வந்தவளே !
ஏரிகுளம் குட்டையென ஏற்றமுடன் நிறைந்தவளே !
வாரிதனில் பற்பலவும் வாரிதரும் கொடையாளே !

உன்னாலே உலகியக்கம் ஒப்பின்றி நடக்கிறது !
உன்னாலே எவ்வுயிரும் உயர்ந்திங்கே வருகிறது !
உன்வரவு இல்லாக்கால் உலகெல்லாம் தவிக்கிறது !
உன்வரவு மேலோங்கின் உலகெல்லாம் அழுகிறது !

அணைதன்னில் நீதேங்கின் ஆறுதலைத் தருகிறது !
மனையெங்கும் நின்னாட்சி மதிப்புடனே ஆள்கிறது !
சுனைதன்னில் நீபெருகின் சுவைகூடிக் கொள்கிறது !
இணைநீயே என்றாகி எவ்வுயிரும் வாழ்கிறது !

மண்ணகத்தின் மாநிதியே மாசில்லா வானமுதே !
எண்ணத்தின் எழில்நிதியே ஏற்றத்தின் தேனமுதே !
விண்ணகத்தின் விழியொளியே விரிந்தயெழில் பேரழகே !
தண்ணீரே ! தண்ணீரே ! தாய்நீயாய்த் தானேதே !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

**

தண்ணீர் செல்வம் பெருஞ்செல்வம் ;
உயிர் காக்கும் அருஞ்செல்வம் .
மரம் காத்து மழை பெருக்க ,
உரம் கொள்வோம் நெஞ்சினிலே !
தூய்மை காத்து நதிகள் இணைத்து ,
சேய்கள் வாழ வழி வகுப்போம் .
வறட்சி யில்லா உலகு அமைக்க ,
திறட்சியுடன் நல்விதி சமைப்போம் .
சொட்டு நீரும் தங்கமன்றோ ?
தட்டு இன்றி சேமித்து தாய் -
நிலத்தடி நீர்மட்டம் உயரச் செய்து ,
நலமுடன் வாழ முயன்றிடுவோம் .
தண்ணீர் தேவை இன்று நமக்கு
கண்ணீர் தான் வருகுது அதனால்
பூசல் ஒன்றும் ஏற்படாமல் நாடுகள்
நேசமுடன் வாழ வந்தனை செய்வோம் .

- திருமதி ராணி பாலகிருஷ்ணன்

**
கருமேகங்கள் கலந்து
 ஒன்றோடொன்று உருவாடி 
வானவீதியில் உதித்து
 அமுதத்துளியாக உருமாறி 
தாய்மடியில் விழுகிறாய்
 ஊற்றாகி அருவியாகி
ஆறாகி பெருகுகிறாய்
  பலவடிவமெடுத்து பார்தனில்
தன்னிகரில்லாது செழிக்கிறாய்..
 உனதருமை உணர்ந்தோர்
தண்ணீரின் புகழ்பாடுவர்
  இன்றேல் உனையிழந்து
கண்ணீரில் சோகத்துயராடுவர்...

-கவி தேவிகா,தென்காசி

மனிதன்  உயிர்  வாழ 
புனிதனாக  நின்று  ஆரோக்கியமாக  வாழ  
 தேவை தண்ணீர்................!
விளைநிலங்களை  வீடுகளாக்கி 
களையிழந்து   நிற்கும்  பூமித்தாய் 
வளையல்  அணிந்த  கையெடுத்து 
கூப்பி  கும்பிட்டு  வேண்டுவது 
இயற்கை  கொடுக்கும்  மழையினை 
உவகையோடு   சேமிக்க ஒரு  
நொடியேனும்   சிந்தித்தால்  
தடி  கொண்டு நடக்கும்  தள்ளாத  வயதுவரை 
பிடிப்புடன்  வாழலாம்!
உணவு இல்லாவிடில் கூட 
உயிர்  வாழ  ஒரு டம்பளர்  நீர்  போதுமே!
நாம்  படைத்த  பணத்தின் பின்னே  
ஓடும்  மானிடனே..........
பணம்  கொடுத்தால்கூட 
 நீர் இல்லை  என்று  சொல்லும்  
குணம் உடைய  மக்கள்  
வாழும்  உலகம்  வெகு   தொலைவில்  இல்லை.
யோசிப்போம்!..........தண்ணீர் சேமிக்க   
யோசிப்போம்  அனைவரிடமும்! 

-  உஷாமுத்துராமன்,  திருநகர்

**

அடுக்கு மாடி   கட்டிடத்தில் 
ஆடம்பர  வாழ்வு  வாழ்வதைவிட 
சின்னக்குடிசையில்  ஒற்றுமையுடன் 
வாழ  எண்ணி  விட்டால்  
அடுக்குமாடி  கட்டிடமும்   வானுயர 
வளராது   தண்ணீர் பஞ்சமும் வராது!
ஒரு    குடும்பம்   இருக்கும்   இடத்தில் 
ஓராயிரம்  பேர்  அடுக்கடுக்காக  அமர்ந்தால் 
தண்ணீர்  .எங்கே  வரும்........
கண்ணீர்தான்  ஓடி  வரும்!
கிணற்றினை  வெட்டிய  இடத்தில்  '
பிணக்கில்லா    நீர்   சேர  வாய்ப்புண்டு!
கிணறில்லா  வீட்டில் குடியிருக்க மாட்டேன்  
என..... உறுதியுடன்  ஆழமான  கிணற்றினை  வெட்டி 
தினம்  பிரார்த்தித்தால்   வருணக்  கடவுள் 
கன   கண்  திறந்தால்கூட  
கிடைத்திடுமே  தண்ணீர்!..............

- பிரகதா நவநீதன், மதுரை

**

 வண்ணக்குடங்கள் வரிசையில் காத்திருக்க..
தண்ணீரின்றி மக்களெல்லாம்
தவித்திருக்க..
மூன்றில் ஒருபகுதி உலகு
தண்ணீரால் சூழ்ந்திருக்க..
மூன்றாம் உலகப்போர் குடி
தண்ணீருக்காக எனும் நிலை.
அனல் கக்கும்  ஆதவன்
அழியும் விவசாயம் 
வறண்ட பூமி..
வற்றிப்போன குளம் குட்டைகள் ..
வான் பொய்த்தது ஏனோ
வருண பகவானே ?
மரங்கள் வெட்டப்பட்டதால்
மனம் வெறுத்தாயா ?
ஏரி குளமெல்லாம்
எட்டடுக்காக மனைகளானது
ஏமாற்றமா ?
கருணை காட்டு வருணா!
குளம் குட்டைகளை
தூர்வாரி வைக்கிறோம் !
மரக் கன்றுகளை நட்டு
மழைநீருக்கு தவமிருக்கிறோம் !
வந்து பெய்து விடு
வான் மழையே !

- ஜெயா வெங்கட்.

**

கண்ணீரைத்  தண்ணீராய்  அருந்தக்  கூட
       கண்களிலே  கண்ணீரு(ம்)  இல்லை காணீர்! 
மண்ணுலகில்  பருவமழைப்  பொய்த்த  தாலே
        மாற்றுவழித்  தெரியாமல்  தவித்தல்  காணீர்! 
விண்மகளின்  கண்ணீராம்  அமுத  மின்றி
        விடைகாண  இயலாமல்  துடித்தல்  காணீர்! 
மண்ணுக்குள்  நீரூற்று  மாண்ட  தாலே
          மாந்தவேட்கை  நீரின்றி தணிப்ப  தெங்கே? 


தண்ணீரை  அயல்நாட்டு  நிறுவ  னத்தார்
         துளியளவும் மிச்சமின்றி உறிந்து  விட்டு, 
மண்ணுக்குள்  கனிமவளம்  திருடிச் செல்ல
         மண்ணகழ்ந்து  தமிழகத்தை  அழித்தல்  பாரீர்! 
எண்ணியெண்ணி  பணத்தாளை  பதுக்கும் ஈனர்
        ஏற்றங்கள்  பெற்றிருக்க  உழவர் மக்கள்
கண்ணீரில்  குளிக்கின்றார் அவலம் கொஞ்ச;
        தண்ணீரைத் தேடியினி  எங்கு  செல்ல? 

_நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

**

ஆற்றின் நீர் ஏரிக்கும் - ஏரி - கம்மாய்க்கும் - பின் கரணை - தாங்கள் - ஏந்தல் - ஊரணி - குளம் - குட்டை- என்றே நீரை மேலாண்மை செய்த பழந் தமிழக நினைவினிலே - தாகம் அடிக்க - குளத்தை சிறிது எட்டிப் பார்த்தேன், குளமோ - அபார்ட்மென்டாச்சு, ஏரி - கல்லூரியாச்சு ஆறு - ஊராச்சு ஊரணி - மண்டிப்பு தராக,பாரினில் குடிக்க நீரில்லை வர்க் அட் ஹோம் என்றனர் வர்க் அவுட் ஆகாத இன்றைய நீர் மேலாண்மை யால்,யார் காரணமிதற்கு? தொழில் நுட்பமா? இல்லை காலத்தின் கோலமா? சீலம் (ஒழுக்கம் ) இல்லாததால் ஞாலம் வாழுமா - இல்லை தவி- தவித்து வீழுமா? புவி - வெப்பமயமாம் பனிப்பாறை உருகுமாம், நீரின்றமையாது உலகென்றே - படித்துக் கொண்டிருந்தான் - சிறுவனொருவன்.. யார் காதிலும் அது .ஏனோ விழாமல் தான் போனது. 

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

இன்றையயிவ் வேளையிலே தேவை தண்ணீர்
      இருந்தால்தான் எல்லோரின் தாகந் தீரும்
நின்றுபல வேள்விசெய்தால் நீல வானம்
      நிறைமழையைப் பெய்யுமென உலகம் நம்பும்
நன்றுபல மரங்களெலாம் வெட்டிச் சாய்த்து
      நாமிருக்கும் இடங்களெலாம் பொட்ட லானால்
என்றுமழை பெய்யும்நம் நீர்நி லைகள்
     எப்போது நிரம்பியதில் தண்ணீர் கிட்டும்.

ஆழ்கிணறும் வறண்டுவிட குளங்கள் குட்டை
      ஆறுகளும் வறண்டுவிட இருககும் தண்ணீர்
பாழ்செய்து பக்குவமாய்ப் பயன்செய் யாமல்
      பாவத்திற் காளாகும் மனிதர் வாழ்வில்
வீழ்ந்துவிடக் காரணமாய்த் தண்ணீ ராகும்
      வியனுலகில் மூன்றாம்போர் மூளச் செய்யும்.
காழ்ப்புணர்ச்சிக் கொள்ளாமல் இயற்கை யோடு
      கைகோர்த்து மரம்நட்டால் தண்ணீர் கிட்டும்.

பெய்மழையைச் சேகரிக்க வீடு தோறும்
      பெருந்தொட்டி அமைத்துநிலத் தடியிற் சேர்ப்பீர்
மெய்வருத்தம் பாராது நீர்நி லைகள்
       மெய்யாகத் தூர்வார்ப்பீர் நிறையக் காண்பீர்
செய்தவற்றைத் திருத்தி,ஆறு ஓடை எல்லாம்
       சீர்செய்வீர் சிக்கனத்தைக் கொள்வீர் நன்றாய்
கைதவமாய்த் தண்ணீரைக் காப்பீர் என்றும்
      காலத்தே செயத்தண்ணீர் காக்கு மன்றோ.!

- கவிமாமணி "இளவல்" ஹரிஹரன், மதுரை.

**

துளியாய் தொடங்கும்
தூரலாய்த் தொடரும் ..
அருவியாய் கொட்டும்
ஆறுகளில் ஒடும் ......
குளத்தில் தேங்கும்
கிணற்றில் கிடக்கும்.....
கால்வாயில் கடக்கும்
கடலில் கலக்கும்   ....  
மழை நீரே ..தண்ணீரே ..  
மனிதர்களின் வாழ்வாதாரம் !.
மண்ணுயிர்களின் மூலாதாரம்.!
நீரின்றி அமையாது உலகம்
நினைவிலே கொள்வோம் !
இயற்கையின் கொடையாம் நீரினை 
இனியாவது சேகரிப்போம்!

- கே..ருக்மணி

**

கடல் நீரைக்கொண்டு செல்லும்
கருமேகக் கூட்டங்களே...
குடிநீருக்கு ஏங்கும்
உயிரினங்கள் கூக்குரல்
உனக்கு கேட்கவில்லையா?
விண்ணில் தவழும் மேகங்களே...
நீ ஆனந்தக் கண்ணீர் வடித்து
நாங்கள் நீருக்காக
வடிக்கும் கண்ணீர்
துடைத்து தாகம் தீர்ப்பாய்!
வானில் விளையாடும் மேகங்களே
மண்ணில் ஓடும் மழைநீரில்
காகிதத்தில் கப்பல் செய்து
களிப்புடன் விளையாட
சிறுவன் கண்கள் காத்திருக்கின்றன !
விண்ணில் ஓடும் மேகங்களே
வளைந்தோடிய வற்றிய நதிகள்
வாடிய வறண்ட ஏரிகள்
வெடித்த விளைநிலங்கள்
உன் கண்ணீர் பூக்களின்
வருகைக்காக காத்திருக்கின்றன!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்

**

உயிரினங்களுக்கு முக்கியம் தண்ணீர்,
அதனை தேடி தேடி அலைந்து 
விவசாயிகள் சிந்தியது உயிர் கண்ணீர்,
ஐம்பூதங்களில் இருந்து நீ நீங்கி விடுவாயோ என்று அச்சம்,
நீ மழையாய் பொழிந்து  மற்ற உயிரங்களை தருவாயா மிச்சம்.

- கருப்பையா

**

நட்ட ஒரு மரம் வளர பலகாலம்;
வெட்டவோ,ஒரு நாள்

வெட்டும் போது அழுவது மரம்; 
சத்தமில்லாமல்

மழைகொட்டும்போதுசிரிப்பது
மொத்தஇனம்;
புத்தியில்லாமல்

மரம் தான் மழைக்குக்காரணம்,
என்ற புத்தியில்லாமல்

மழைக்காக யாகஞ்செய்யும் மனிதா,
வெட்டிய மரத்தை நட்டாயா?

குடிநீருக்காக குழாயடியில் யுத்தம்  செய்யும் மனிதா,
அவலநிலையை உணர்ந்தாயா?

ஒரு மரத்தையாவது நடு,
ஊருக்காக அல்ல,உன் நீருக்காக;
உலகத்துக்காக அல்ல;
நாளைய உன் தலைமுறைக்காக.

- ம.சபரிநாத்,சேலம்

**

நீர்நிரப்பிய காலத்தை என்றோ மறந்துபோய்
சூரியத்தீயில்
கரிந்துகொண்டிருக்கிறது தீயணைப்பு வண்டியொன்று
ஏரிகாக்கும் ராமருக்கு வேலை பறிபோய்க்
கரிகாக்கும் ராமர் வேலைக்கு
விண்ணப்பம் எழுதிக்கொண்டிருக்கிறார்
மண்ணில் விழும்முன்னே மழைத்துளியைப் பருகிவிடும்
சக்கரவாகப் பறவைகள்
கூவம் ஓடிய தடம்தேடிக் கொத்துகின்றன
ஆறில்லாத சென்னை மாநகரம் நேற்று
நீரில்லாத சென்னை மாநகரம் இன்று
ஆளில்லாத சென்னை மாநகரம் நாளை
கூட்டமாய் வரும் மேகங்களைக் காணாமல்
கொப்பளித்துக் கிடக்கிறது வானம்
கண்ணீரைக் குடிக்கவும்
தயாராகிவிட்டன வறண்ட நாவுகள்

- கோ. மன்றவாணன்

**

நீர்நிலைகள்  நிரம்பியேதாம்  வழிகிறதே;
      நெல்வயலும் நிரம்பியேதாம்  வழிகிறதே;
வேர்ஊன்றி  வீடுகளாய்  எங்கெங்கும்;     
        வெள்ளத்தால்  விளையாடும் ஆறெல்லாம்
கார்மேகம்  களவாடப்   பட்டதனால்       
         கானல்நீர்  குடியேறி  குதூகளிக்க
நீர்போல மணலையுமே  களவாட
         நீசராலே  தண்ணீரும். தேடு( ம்)நிலை!     

குளம்குட்டை  ஏரிகண்மாய்  அணைகளென்ற
         காலத்தின்  கொடையெல்லாம்  பாடதிட்டக்
களத்தினிலும்  காண்பதற்கும்  வக்கற்றுக்
         கலங்குகிற  பாழ்நிலையை அரசியலின்
களவாணி  மாக்களாலே  நாடெங்கும்
       கையளவும்  தண்ணீரும்  இல்லையந்தோ; 
வளங்குன்றி  நித்தநித்தம்  மாய்ந்திடாமல்
      மழைநீரைச் சேகரித்து  உயிர்வாழ்வோம்! 

- கவிக்கடல் கவிதைக்கோமான், பெங்களூர்.

**

தன் கருப்பையில்
நீர் இல்லையாமே,
பாசனப்பெண் துடித்தது –
பிறந்ததென்னவோ பாலைவனம் தான்-
மழை நண்பன் எங்கே ? தொலைத்தேனே
மன விரிசல்களுடன் பூமி !  ஆம்
இந்த மண் பச்சைத்துணியின்றி
வெந்து கொண்டிருந்தது !
கால்நடைகள்    டெலஸ்கோப்புடன்
புல்வெளிகளைத் தேடிகொண்டிருந்தன !
பசியாற தென்பட்டது ஒரு புல்திட்டு.
ஓடி வந்து வாய் பதித்தது பசு !
அதன் எச்சிலை இழுத்து
களைப்பாறியது புல் !

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

**

தண்ணீரென்னக்  கண்ணீரின் எழுத்துப் பிழையோ ?
தமிழன்னைத் தழைய விட்ட இலக்கியக் கூந்தலாய்,
மின்னல் கற்றையென வீழும் நீர் வீழ்ச்சிகளும், 
மிஞ்சிய வெள்ளமாய் ஓடிக் கடல் சேரும் தண்ணீரும்,
நளின நடைப் பயிலும் ஆறுகளும், சிற்றோடைகளும்,
நல்லுலகுப் படைத்திடப் பொழியும் மழைத் தாயும்,
இயற்கையன்னையின் நீர் நிலைகளும், ஏன், ஏன்-உழவரின்,
இன்னல் தீர்க்கவில்லை ; மனிதரின் தேவைக் குதவவில்லை ?
ஊழித்தாண்டவம் யாரிங்கு ஆட ; நானிலத்தில் தண்ணீர் பெருகி ஓட !
ஊரெல்லாம் கூடி வணங்கும் தாயே ! தண்ணீரே ! தண்ணீரே !
நீயின்றி செழித்திடுமோ உலகு ? களித்திடுமோ மானுடம் ?
நீயன்றோ உயிர் காக்கும் முதல் மருந்து ! நீயின்றி ஏது பிற விருந்து !
அறிஞரும், ஆட்சியாளரும் ஆவண செய்திடுவீர். -- மக்கள்,
அகமகிழத், தண்ணீர் பெறத்  நல்திட்டந் தீட்டிடுவீர். 
தண்ணீர் வளம் பெருக, நீவீரே யாவருக்கும்,
ஆண்டவனாவீர் ;
தண்ணீரால், ஒழியும் வறுமை யாதலினால்,
வளஞ் சேர வழி வகுப்பீர்.

- கவி. அறிவுக்கண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com