சுய தரிசனம் வாசகர் கவிதை பகுதி 2

உலகெல்லாம் விழித்திடவே உயர்கதிரோன் ஆனேன்  ஒவ்வொருவர் உழைப்பினிலும் உயர்வாக உரைந்தேன் !
சுய தரிசனம் வாசகர் கவிதை பகுதி 2

சுயதரிசனம்

தூணிலும்   
துரும்பிலும் இருப்பவனை
அன்னையின் அன்பிலே..
ஆசானின் உருவிலே..
இயற்கையின் எழிலிலே..
இனிமையான இசையிலே.
உழவனின் வியர்வையிலே..
உண்மையின் உன்னதத்திலே..
கருணையுள்ள கண்களிலே..
கலைஞனின் கைவண்ணத்திலே..
மழலையின் சிரிப்பிலே..
மண்ணின்  வாசத்திலே..
மனம் நிறைந்து  
மானசீகமாக
தரிசிக்கிறோம் !...

- ஜெயா வெங்கட்

**

காட்டிலும் - மேட்டிலும், 
ஏட்டிலும் பாட்டிலும் 
தேடி அலைந்தேன் இறைவா,
மூட்டிய தீயில் (ஹோமம்) மந்திரம்
ஜெபித்தும் - மதித்தும்
கும்பிட்டுப் பின் - நம்பிட்டேன் 
உன்னை - ச்ரவனம் - கீர்தனம்
மனனம் என்றே பக்தியில் தேடி 
நினைந்தேன் நாளும்,
நெற்றியில் நீரும் - நினைவில் நீயும்,  
நற்கதி வேண்டி நாளும் தொழுதேன்,
செவியில் விழுந்தது சித்தர் பாடல்,
ஓடி - ஓடி - ஓடி - ஒடி
உட்கலந்த ஜோதியை - என
இதுதான் - பார்க்குமொரு இடமெங்கும் 
நீக்கமற நிறைந்திருக்கும் 
பரிபூரணானந்தமோ எனத் தெளிந்தேன்.

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

என்னுள்ளே என்னையேன் மாற்ற வேண்டும்
-----எல்லோர்க்கும் ஏற்றபடி மாறு யென்றே
என்னிடத்தில் ஏன்இவர்கள் சொல்ல வேண்டும்
-----எதற்காக சமரசம்நான் செய்ய வேண்டும்
என்சுயத்தை யாருக்காய் இழக்க வேண்டும்
-----என்வழியை யாருக்காய் மாற்ற வேண்டும்
என்கொள்கை என்குறிக்கோள் அடைவ தற்கே
-----எவர்தடையாய் நின்றாலும் தகர்த்த ழிப்பேன் !
ஊருடனே ஒத்துப்போ என்று ரைப்பார்
----ஊர்செய்யும் தவறுகளுக் கிசைவ தோநான்
சேறுதனைச் சந்தனந்தான் பூசி டென்றே
----செப்பிடுவோர் கூற்றுதனை ஏற்ப தோநான்
நாருதனில் மலர்கோர்த்த லின்றிச் சுற்றி
----நறுங்கழுத்தை இறுக்குவோரைப் போற்ற வோநான்
ஏறுபோல தீமைகளை எதிர்த்தி டாமல்
----எச்சில்நாய் போலிருக்க முடியா தென்னால் !
குற்றத்தைக் குற்றமெனச் சொல்ல அஞ்சிக்
----குற்றேவல் புரிவதற்கா வாழ்வைப் பெற்றேன்
வெற்றுக்கே வாழ்வதினால் பயன்தான் என்னே
-----வெறும்வயிற்றை நிரப்புதற்கா இந்த வாழ்வு
சிற்றெறும்பும் கடித்தபின்பே உயிர்து றக்கும்
----சிறுபுலியும் சினந்தெழுந்தால் யானை ஓடும்
பெற்றயென்றன் தமிழைநாட்டை உயர்த்தும் போரில்-
----பெறுகின்ற விழுப்புண்ணே என்னைக் காட்டும் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

விண்ணும் மண்ணும் தெரிகிறது உன்
விழிவாசலில்
உன்னை அறிந்ததுண்டா
ஒரு நாளேனும்... ஒரு நொடியேனும்...?
உருவத்தை அழகாக்குகிறாய்
கண்ணாடி பார்த்து
உள்ளத்தை அழகாக்க எதன்
முன்னாடி நிற்பாய்?
உன்னை யாரென்று
உனக்குக் காட்டும்
வாழ்வில் வரும் இடர் ஒவ்வொன்றும்
உன்
பலத்தை அறிந்ததுண்டா?
பலவீனத்தைப் புரிந்ததுண்டா?
இரண்டையும் எடைபோட்டால்
எந்தப்பக்கம் சாய்வாய் நீ?

- கோ. மன்றவாணன்

**

தன்னைத்தானே நேசித்துக் கொள்வதே 
சுய தரிசன மெனலாம் 
அது போலவே அயலாரை நேசி என்பின் 
அது வயபடும் தரிசனம்
இவையிரண்டும் சேர்த்து இனங்கூற 
வியலா மாய தரிசனம் 
உருவெடுத்து கடவுளின் கருணையைப் 
பெரும் தெய்வ தரிசனம் 
இவ்வாறான முடிவதைத் தான் கூறுவர் 
தீர்க்கமான தரிசனம் 
கண்ணீரை தான் வடிக்கக் கிடைக்கும் 
கடவுள் காணக் கிடைப்பாரோ 
உன்னை நீயே அறிதல் அவசிய மதுவே
பாதையை காட்டி தருகிறது 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி

*
கண்ணாடியில் பார்க்கிறோம் நம் 
முகத்தை  தினமும் .. திரும்பத் திரும்பப் 
பார்த்து ரசிக்கிறோம் ...அது சுய தரிசனம் !
கண்ணாடியில் தெரிவது இல்லை நம் சுய ரூபம் !
பார்த்தவுடன் தெரிவதில்லை நம் 
சுய ரூபம் தன் மூக்கு கண்ணாடி
வழியே நம்மைப் பார்க்கும் அடுத்தவருக்கும் !
நம் கண்ணாடியும் காட்டுவதில்லை 
நம் சுய ரூபத்தை ! அடுத்தவரும் 
பார்ப்பதில்லை நம் சுய ரூபத்தை அவர் 
கண்ணாடி வழியே !
நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும் 
தெரியும் அவன் வசிக்க ஏற்ற இடமா நம் 
இதயம் என்று ! நம் சுய ரூபம் என்ன என்று !
இறைவன் வசிக்க ஏற்ற இடமாக நம் 
இதயத்தை மாற்ற தேவை ஒரு சுய 
பரிசோதனை ...சுய தரிசனம் நமக்கு !
இதயத்தில் இறைவன் குடி புகுந்து விட்டால் 
ஒரு கட்டண தரிசனமும்  தேவை இல்லையே 
நமக்கு அந்த இறைவனை தரிசிக்க !

- K. நடராஜன் 

**

பிறந்தவர் எல்லாம் சிறந்தவர் என்றே
   பேசுதல் இல்லையடா !-தம்பி
சிறந்த செயலே சிறப்பை சேர்க்கும்
   தெளிவாய் அறிந்திடடா !

பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்பதில்
    பெருமை இல்லையடா !-தம்பி 
அறமும் மறமும் அணியாய்க் கொண்டே
    ஆக்கம் விளைத்திடடா !

உண்மை உழைப்பே உன்னை உயர்த்தும் 
    உணர்ந்து நடந்திடடா !-தம்பி 
மண்ணும் பொன்னாய் மாற்றும் ஆற்றல் 
    மதி'யால் மலருமடா !

முகத்தின் அழகைத் தகவே காட்டும் 
     முன்னே கண்ணாடி !-தம்பி 
அகத்தைத் தகவே அறிவாய் ஆள்வாய்
      அதுவே நின்நாடி !

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

மற்றொருவரின் வெற்றியின் போது
வெளிப்படும் பொறாமையில்,
மங்கையவளின் மாராப்பு விலகும்போது
தடுமாறும் பார்வையில்,
கையாலாகாத் தனத்தின் விளைவாய்
தோற்றுப்போகும் தருணங்களில்
பழியை விதியின் மேல் 
சுமத்தும் புலம்பலில்,
அலுவலகத்தில் மேலாளரின் 
அதிகாரத்தின் ஆதிக்கத்திற்கு  ஒடுங்கி
வீடு சென்று மனையாளிடம்
வெடிக்கும் சினத்தில்,
எவ்வளவு தான் கண்ணியவான் அரிதாரம்
பூசிக்கொண்டாலும் வெளுத்து
வெளிப்பட்டு விடுகிறது
சுயம்.

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம்

**
கோவிலுக்கு சென்றேன்,  
ஆலய தரிசனம் கொண்டேன் 
கடவுளை வணங்கினேன்,  
தெய்வ தரிசனம் கண்டேன் 
வெற்றி பாதையில் சென்றேன், 
உறவுகள் தரிசனம் பெற்றேன் 
தோல்வியை தழுவினேன், 
தனிமையை உணர்ந்தேன் ,
வெறுமையில் என்னை நானே காண நேர்ந்தேன் ,
சுய தரிசனம் பெற்றேன்!
மீண்டு வந்தேன், ஜெயிக்க !!

- பிரியா 

**

மறைந்திருக்கும் புகழ்நிலையின் மாண்பைக் கண்டு
மகிழ்ந்திருக்கப் பெருமைகளில் நிறைவே உண்டு
உறைந்திருக்கும் மனங்களிலே ஏற்றந் தந்து
எழுகவென எடுத்துரைக்கும் எதுவும் நன்றே
முறையுடனே முன்தமிழர் அறிவால் ஓங்கி
முன்னேற்றம் நாகரீகம் நிறைவாய்த் தந்தார்
கறைபடியா உயர்நிலையைக் கண்முன் வைத்த
“கண்டெடுப்பின் காலத்தின் குறிப்பில்” வென்றார்

தொல்லியலார் ஆய்வினிலே தமிழர் எல்லாம்
தேர்ந்திருந்தார் கீழடியில் உலகம் பார்க்க
துல்லியமாய் பல்துறையும் நிறைகள் கண்டு
திறன்படைத்து உயர்ந்திருக்கும் வரலாறு றென்றார்
வெல்லுகின்ற வீரத்தில் மட்டும் அல்ல
விண்வெளியின் கோள்வழியின் கணக்கில் வென்றார்
கல்வியினால் உயிரனைத்தும் உறவே என்றார்
“கண்டெடுப்பின் காலத்தின் குறிப்பில்” நின்றார்

**

கோயிலிலே கரங்குவித்து வணங்கப் போகும்
குறைகளைய வேண்டுதலை வைக்கப் போகும்
நோய்தீர மருத்துவரைப் பார்க்கப் போகும்
நேர்ந்திருக்கும் வலிமறையா நிலையில் நோகும்
தாயிடமும் துன்பத்தின் தன்மை கேட்டு
தன்குறைகள் அறியாது தேடும் ஓடும்
ஓய்வின்றி புறந்தேடி ஓய்ந்த பின்னே
“உள்மனதின் தரிசனத்தில்” உயரும் உள்ளம்

தேடிடுவார் இன்பத்தை வெளியில் எல்லாம்
திசைதெரியா சிந்தனையால் மயக்கம் கொள்வார்
வாடிநின்று வழிமறந்த வலியில் நோவார்
வசந்தமதை காணாத நிலையே ஆவார்
கூடிவந்து வாழ்ந்திருக்கும் நம்முள் தெய்வம்
குறைமதியின் உணர்வாலே நினைவில் கொள்ளார்
சூடியதோர் மனமலரில் சுகந்தம் வீசும்
“சுயதரிச னம்”தந்து சுகமாய் பேசும்

-கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**

தெய்வ தரிசனத்தில் 
வாழ்க்கை பிரகாசமாகும்...
சுய தரிசனத்தில் - என்
கவிதைகள் பிரசவமாகும்...

இதில் கடவுள் தன்மையும்
காதலும் கலந்தே இருக்கும்...
கடவுளைக் காதலித்துப் பாா்ப்பேன்
காதலியைக் கடவுளாகவே பாா்ப்பேன்

தெய்வ தரிசனத்தில்  -
வானவேடிக்கையை இரசிக்கலாம்...
சுய தரிசனத்தில் -
மனசெய்யும் வேடிக்கையை இரசிக்கலாம்...

என் சுயதரிசனத்தில் - மௌனமே -
மொழியாகிறது - அந்த மொழியில்
அணுதினமும் அர்ச்சனை நடைபெறுகிறது
அனைவரின் நன்மைக்காகவும்.. நலனுக்காகவும்...!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

வாஞ்சை சூல்கொண்ட குமரிமண்ணில்
பெருமை சேர்த்த மலரும் மாலையுடன்
கவிமணி தன் பிறப்பைப் பதிவிட,
அம்மண்ணில் நானும் மலர்ந்திட மனம் பூரிக்க,
பெண்ணாய் பிறப்புக்காண அகம் மகிழ்ந்தேனே !
பெண்மையின் அங்கமாய் நாணம் எழுமன்றி
பெண்ணாய் பிறந்ததற்கு ஒருபோதும் நாணியதில்லையே !
அச்சம்தவிர் மந்திரத்தை எழுத்தோவியங்கள் பதிக்க
தன்னம்பிக்கை என் குருதியுள் விழுக்காடு ஏற்க
ஞாயிறு கண்ட செந்தாமரையாய் மலர்ந்திட்டதே
என்னுள் புன்னகை போர்த்திய மனோதைரியம் !
இடையூறுகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரத்துடன்
சுயதரிசனம் காணும் திரையில்
அகராதியினின்று ‘ பெண்ணுள் இயலாமை ‘மறைய
நாடுதே என் மனம் !!

- தனலட்சுமி பரமசிவம் 

**

காலையில் கண்களுக்குக் கிடைத்தது
……….கதிரவனின் கவின்மிகு தரிசனம்
மாலையில் மண்ணிற்குக் கிடைத்தது
……….மயக்கும் மதியின் தரிசனம்
சோலையில் புதியவாசம் வீசும்
……….சோர்வுநீக்கும் பூக்களின் தரிசனம்
ஆலயத்தில் அமைதி தந்திடும்
……….ஆண்டவனின் அன்பு தரிசனம்

ஒளியை  வணங்கும் வள்ளலாரின்
……….ஒப்பற்ற ஜோதி தரிசனம்
எளிய மனிதர்களும் வாழ்வில்
……….ஏற்றம் காணும் சுயதரிசனம்
உளிசெய்த சிற்பத்தால் கிடைத்தது
……….உலகிற்கு கடவுளின் தரிசனம்
வளியின்றி உயிர்கள் இல்லை
……….வாழ்வே இயற்கையின் தரிசனம்

- கவிஞர் நா. நடராஜ், கோவை

**

எண்சீர் ஆசிரிய விருத்தம்

காலையிலே எழும்போதே கணினி முன்னே
……………காலத்தைத் தள்ளுதற்கே கடின வேலை.!
மாலைநேரம் வீடுவந்து முடிவ தற்குள்
……………மலைபோலக் குவிகின்ற மற்ற வேலை.!
சாலையிலே வாகனங்கள் சறுக்கி யோட
……………சந்திக்கும் சங்கடங்கள் சொல்லி மாளா.!
மூலையிலே முடங்குமெண்ணம் முற்றும் ஓட
……………முன்னோக்கிச் செல்தற்கே முனைய வேண்டும்.!
.
.
மொழிநாடு மேல்பற்று  மிகுதல் வேண்டும்
……………முன்னோர்கள் சொல்லியதை மறந்தே போனோம்.!
விழிப்புணர்வு அனைத்திலுமே வேண்டும் என்றே
……………விடுதலைக்கு முன்பாக வேண்டிச் சொன்னார்.!
அழித்துவிட்ட பகையுணர்ச்சி..அடக்கும் கோபம்
……………அன்புடனே நட்புறவாய் அரவ ணைக்க..
செழிப்பாக வாழ்வதற்கே சிந்தை யுள்ளே
……………சுயதரிச னம்பெறவே சுழலும் வாழ்க்கை.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

கல்வியெனும் கனிகள் பல சுவைத்தே வளர்ந்தான்—
தொழிலேணி கைப்பிடித்து உயர்ந்தே நின்றான்-
நோட்டுக்கள் சுருக்கி வைக்க கோணிப்பை உண்டோ  –
தேடித்தீர்த்தான் – நிரப்பி மகிழ்ந்தான் --             
குடும்பத்திற்குள் நுழையாமல்
பிள்ளைகள் பெற்றுக்களைத்தான் –
தந்தையோ தங்கையோ ? ஒட்டாமல் ஒதுக்கி வைத்தான் –
தர்மத்தை தள்ளி வைத்து தங்கத்தை நாடிச்சளைத்தான் –
இளைத்துவிட்ட நிம்மதியுடன்
சுய பரிசோதனை செய்தான் ஒரு நாள்  !
சுண்டி இழுக்க  தடி நூலாய் திருப்தி இல்லை –
திசை தெரியாத பட்டம் போல்
பறந்தே மறைந்தான் !!

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

உலகெல்லாம் விழித்திடவே உயர்கதிரோன் ஆனேன்  
   ஒவ்வொருவர் உழைப்பினிலும் உயர்வாக உரைந்தேன் !
மலராக மணமாக மண்ணெங்கும் மாட்சி
   மலர்ந்திடவே கண்டுள்ளம் மலையாக மலைத்தேன் !

வானமுழு வெண்ணிலவாய் என்னையான் கண்டேன்...
   வையத்து மக்கள்தம் வாட்டத்தை அழித்தேன் !
தேனகத்தை கொண்டவர்கள் திருவாயால் வாழ்த்தத்
   திளைக்கின்றேன் திகைக்கின்றேன் முகில்முகத்தில் புதைந்தேன் !

விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம்போல் ஆகும்
   வியன்மழையாய் நானானேன் வியப்பின்பம் பூண்டேன்...
மண்ணெங்கும் நான்நிறைந்தே மண்குளிக்க வைத்தேன் 
    மலையதிலும் மண்ணதிலும் மகிழ்வைத்தான் விதைத்தேன் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

எதைத் தேடிச் செல்கிறேன் எனத் தெரியாமல்
தேடிச் சென்றேனோ அதைத் தேடிப் போனபோது
காணாமல் போயிருந்த நான் என்னைத் தேடிவர
நான் தேடிப்போனேன் காணாமல் போயிருந்த என்னை
தேடல்மயமான பயணத்தில் தேவன்யாரும் இல்லை வழிகாட்ட
தொலைந்ததைத் தேட தூமணி விளக்கும் இல்லை ஒளிகாட்ட
யார் நான் யார் நான் என்று கேட்டுக்கொண்டே போனது தேடல்
அவன் நீ நீ அவன் என்று அசரீரியாய் ஒலித்ததோர் பாடல்
வழியில் மொட்டைத்தலையோடு ஒருவன் கண்மூடி இருந்தான்
மற்றோர் புற்றில் ஜடாமுடியோடு உட்கார்ந்து தூங்கினான் ஒருவன்
நீ இல்லை நீ அவனுமில்லை நீ நீவெறுமை வடித்த பிம்பம்
நீரற்ற பூமியாய் நீசொல்லும் நான் எல்லாம் வீண்ஜம்பம்
எனப் புலம்பியவாறு சென்றான் ஒரு வழிப்போக்கன்
அவனிடம் கேட்டேன் வீடு போகும் வழி
நான் போனால் வரும் என்றான்
நீயா என்றேன்; இல்லை நீ என்றான்
நான் இல்லை என்றேன்
அதைத்தான் சொன்னேன் என்று சொல்லிவிட்டு
தூங்கப் போனான் மீண்டும் கல்லறைக்குள் 

- கவிஞர் மஹாரதி

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com