கடந்த வாரத் தலைப்பு மகளுக்கு ஒரு மடல்! வாசகர் கவிதைகள்!

எம்மை வாழ வைக்கும் உயிர்சுரபி நீ
கடந்த வாரத் தலைப்பு மகளுக்கு ஒரு மடல்! வாசகர் கவிதைகள்!

மகளுக்கு ஒரு மடல்

ஒரு குறிஞ்சி மலராக 
இரண்டுமுறை எங்கள் தோட்டத்தின் 
அன்பில் விளைந்த செல்ல மகளே..! 

நீ எங்கள் நினைவுகளோடு 
மாற்றான் தோட்டத்து மலராக 
பூத்து மலர்வதை எண்ணி 
ஆனந்தக் கண்ணீரில் மிதக்கிறோம் 

புகுந்தயிடம் பூ மணக்க 
நீ பிறந்தயிடத்துப் பெருமைப் பேசாதே 

நீ பூக்கும் தோட்டமே
உனக்கான எழில் வனம்

உன் வசந்தக் காலம் 
உன் பூக்களில் காணும் புன்னகையாகும் 

உன் நிம்மதி 
உன் வனத்தில் வீசும் நறுமணம் 

உன் சந்தோசம் 
உன் தோட்டத்தைச் சுற்றி வட்டமிடும் 
தேனீக்களின் ரிங்காரம் 

உன் பொறுமை 
உன் வாழ்வைக் காக்கும் அன்பின் கவசம் 

உன்னை விரைவில் காணும் 
பெரும் கனவுகளை நெஞ்சில் சுமந்து 

உன் குறும்செய்தியைக் கைபேசியில் 
எதிர்பார்த்த வண்ணம் 

செய்திதாளைத் தலைகீழாக வாசிக்கும் 
உன் தந்தை தமிழன்பனும் 

எரியாத அடுப்பில் இட்டலிச் சுடும் 
உன் அன்னை அபிராமி நானும்.

- கவிஞர் பி.மதியழகன்

**

மகளே....
எம் உயிரில் துளிர்த்து
எம் உயிராய் நிலைத்து
எம்மை வாழ வைக்கும் உயிர்சுரபி நீ

உன்னை உயர்த்தி 
உயரவே 
ஒவ்வொரு நாளும் மனதுக்குள்
தியான சாலை அமைத்துத்
தினம்தினம்  வேண்டுகிறோம்

உன் காலில் மலர்குத்திய போது
வாள் இறங்கியது
எமக்குள்

நீ முதல்மதிப்பெண் பெற்றபோது
நிலவு இறங்கிவந்து
பொன்னொளிர் மகுடம் ஆனது
எம் தலையில்

வாழ்க்கைப் பாதையில்
வசீகரம் காட்டி
விஷக்கொடிகள் வளைக்கப் பார்க்கலாம்.

அழகாகவே ஆடம்பரமாகவே வருவார்கள்
மாரீசன்கள்

உன்மனது
சக்கரவாகப் பறவையாய்த்
தூயதையே அருந்தி நிரம்ப வேண்டும்

கல்வியை விடவும் மேலானது
கடவுளை விடவும் உயர்வானது
ஒழுக்கம்

வானைத் தாண்டிப் பயணிக்கலாம் 
வாழ்த்த வரும் அறிவுலகம்
ஒழுக்கம் தாண்டி ஓரடி வைத்தாலும்
போய்ச்சேரும் இடம்
புதைகுழி

எம் காதுகளுக்குள் பண்பினள் இவளென
எந்நேரமும் அமுதிசை கேட்கவே
வரம்தர வேண்டும் நீதான்.

- கோ. மன்றவாணன்

**

என் அன்னையே எனக்கு
மகளாய் பிறந்திருக்கும் மாயமோ...!
இந்த இதயமோ இயங்கா-என்
இளைய நிலாவை காணும் வரை..!

உன் மழலைச்சொல்.. என் மனமயக்கும் வில்..!
உன் குழந்தை குறும்பு..என் குணம் காக்கும் கரும்பு..!
இந்த தந்தை கூட , தாயாக மாறினேன்-என்
தாயாகிய சேய் உன்னை சுமப்பதற்காக..!

நீ என்னுடன் இல்லாவிட்டாலும்-உன் 
நினைவுகள் நீங்காது நித்தமும்
நிலைத்திருக்கும் என் நிஜமே...!

- நா.திவ்யா

**

தத்திதத்தி எட்டடி
எடுத்துவைத்த 
காலம்போய்,
சிட்டாய் பறந்த
சிறார் காலம்
முடிந்து போய்,
இளமங்கையென
உருவெடுக்கும்
என்இனிய
 கண்மணிக்கு;

இறைகாணச் செல்லும்
படிகளது பதினெட்டு;
நிறைநோக்கி ஒட
நிர்ணய வயதும் பதினெட்டு;

வரப்போகும் வருடங்களில்
பொறுப்புக்கள் அதிகமம்மா!
காற்றோடு தூற்றிக்கொள்,
கருத்தாக நடந்துகொள்!

அறிவுரைக்கும் அம்மாயினி
அளவளாவும் தோழியானேன்;
(நம்)அநுபவ பகிர்வுகளே
(உறவை)பலப்படுத்தும்
வேர்களாகும்!

எளியவர்க்கு நிலவாக
கயவர்க்கு நெருப்பாக
உனைஉயர்த்தி ஊர்உயர்த்து;
உள்ளத்தில் பணிவமர்த்து!

அன்னைதந்தை வரஇயலா
அத்துணை இடங்களுக்கும்
தன்னம்பிக்கை தைரியமும்
தாய்தந்தை ஆகிடுமே!

இறையருள் உனக்குண்டு
எந்நாளும் துவளாதே;
ஏற்றஇறக்கம் கண்டு
என்றும்நீ அஞ்சாதே!

நட்பிற்கான நேரமிது
நிதானமாய் தேர்வுகொள்!
நிழலாய் தொடர்ந்திடும்
உறவுகளவை தெரிந்துகொள்!

பதினெட்டு முடிந்ததிலே
பெரும்கூற்று ஏதுமில்லை;
(உன்)வருங்கால சாதனைக்கு
படிக்கல்லாய் இவைமாற்று!

கன்னிபருவத்தில்
கால்வைக்கும்
சின்னபெண்ணிற்கு
நல்வாழ்த்து;
ஊர்மெச்ச நீவாழ
உளமார என்வாழ்த்து!
பெற்றவயிறு குளிர்ந்திருக்க
பெரும்புகழை எய்திடுவாய்;
நற்றமிழில் வாழ்த்துகிறேன்,
நலமனைத்தும் பெற்றிடுவாய்!!!

அன்புடன் அம்மா கவிதா

**

மூத்தவளே, குலமகளே, பாசத்துடன் அப்பா மடல்
இருவிழி ஓரம் பூப்பது பன்னீர்
ஐயிரண்டு மாதம் முன்னே 
அன்னை கருவறையில் நில்லாது
ஆர்வமுடன்  தரணியில் தடம் பதித்த சிசுவே,  
குறிஞ்சி யுகம் இரு முறை 
பார்த்த கண்மணியே,
அன்புடன் பண்பும், கல்வி கேள்வி ஞானத்துடன்,  
பாங்குடன் பந்தம் பேணும் மாதரசியே,
பிறந்த வீட்டின் சந்தோஷம் மனதின் ஓரம்
கரம் பற்றிய கணவன் மகிழ்வே நிரந்தரம்.
மகளே நான்கு விழிகள் பனிக்கிறது
அன்னை மனமோ துடிக்கிறது
சோதரனோ கல்வி ஏற்றம் பெற
பாரெங்கும் பவனிவர.
பிறந்த வீட்டின் பெருமைதனை
புகுந்த வீட்டில் பறைசாற்றாமல்
உன் வீட்டில் ஓங்கு புகழ் மணக்க
ஆல் போல் காத்து வாழை போல் 
தழைத்து வீட்டின் உறவு சேர்க்க.
தாயானது மீண்டும் லட்சுமி பசு,
நாய்க்குட்டி நான்கில் மூன்று நலம்,
ருக்மணி ஐந்து வயது மேள தாளத்துடன்  
அமர்க்கலமாக ஆரவாரத்துடன் 
மாடவீதி வலம் வந்தாள்  
திருவருணை கோயிலின் குட்டி யானை.
ஏரி நஞ்சை நிலத்திற்கு நாற்று நாற்பது 
பேருடன் நடப்பட்டது.
அன்புடன் மருமகனுக்கும், மகளுக்கும் ஷேமம் . 
கற்றது போதுமென்று நில்லாது 
ஒருங்கே இருவரும் தரணி புகழ் தமிழில் 
ஆய்வு முனைவர் பட்டம் 
பெற்றதறிந்து பேருவகை  
அடைந்திட்டோம், இலவசமாக ஏழை 
மாணவிகளுக்கு  
ஞானத்தை  அளிப்பது  குன்றின் 
மேலிட்ட தீபமாக ஒளிர்கிறது, 
அன்ன சத்திரம் விட ஆங்கோர் 
ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
தாய்மை சேதி மட்டற்ற மகிழ்ச்சி
உற்றார் உறவினர் ஊரெங்கும் உவகை
எல்லையற்ற நிகழ்வு
எவ்விதம் விவரிப்பேன்
எழுத்து  தினந்தோறும் 
அன்னை தமிழில் 
மகளுக்கு ஒரு மடல் .

- இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை.

**
அருகாமையில் வைத்து பார்க்கும் 
அதேஷ்டம் இல்லையடி தங்கமே 
தூரத்தில் வைத்துனைக் காண 
தவிக்கிறோமடி பெண் சிங்கமே 
தைப்பிறக்கப் போகுதடி வந்து சேர 
வழிப்பிறக்க வில்லையோ உமக்கு

என் தாய் நோய்வாய்ப் பட்டு மரண 
பிடியிலிருந்து மீள முடியாத தவிப்பை 
காணவொன்னாக் கண்ணீர் வடிக்க 
அருகாமையிலெனை அழைத்தெனக்கு 
சாவு இல்லையடா யுனக்கு மகளாக 
மீண்டும் பிறந்து வருவேனடா என்றாள் 

அவ்வண்ணமே பிறந்திட்ட என் தாயே 
நீ நலமா நாங்கள் இங்கே நலமடி உன் 
கவலையே என்றும் எங்களுக்கு எங்கள்
பத்ரமாத்து தங்கமே விரைந்துவாராயோ
வரவிருக்கும் வழிமேல் விழி வைத்தே 
காத்திருக்கும் தாய்த் தந்தை சேர்ந்து 
மகளுக்கு எழுதும் ஒரு மடலிது
 
- ஆபிரகாம் வேளாங்கண்ணி, கண்டம்பாக்கத்தான் 

**

அன்புக்கு உருவம் கொடுத்த அழகு மயிலே
இன்றும் அன்னைக்கு நிகரான பாசமலரே
நன்று நவில்வதில் நயம் காட்டும் நன்னெறியே
கன்றென உனை வளர்க்க பசுவின் புலியானாய் நீ

தந்தைப் பாசம் உன் நெஞ்சம் முழுதும் நிறைய
சிந்தையில் என்னை நடமாடும் தெய்வமாக்கினாய்
எந்தையின் மதிப்பறிய எனை மாற்றிய குருவானாய்
விந்தையிலும் விந்தை நான் உனது மகனானேனே

நீ ஒரு புதுமனை புகு தலைவியாக வரம் பெற்றாய்
தீ வளர்த்துத் திருமண யாகம்புக உதவியது நானே
நீ என்பாதையில் ஒழுங்கு வாழ்வினைக் கண்டாய்
நீ எங்கிருந்தாலும் எனை மறவாது நலம் வினவினாய்

உனது வாழ்வு சிறக்க என் உயிரையும் கொடுப்பேன்
எனது வாழ்நாள் முழுதும் உன் அன்பின் நனைவேன்
தனம்பல பெற்று நீ என்றும் சீரோடு சிறப்போடு வாழ
மனம் விரும்பும் அன்புத் தந்தையாய் நானிருப்பேன்

மகவுகளை அன்பில் குளிப்பாட்டி அறிவில் நிறைத்திடு
அகம் முழுதும் கணவன் குடும்பம் என வாழ்வு வாழ்ந்திடு
சுக வாழ்வு நீ வாழ என்னாலானது முழுதும் செய்வேன்
மகராசியாய் அன்புடன் ஆதரவாய் வாழ்ந்திடு கண்ணே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

பிள்ளையொன்று  வேண்டுமென்று  முயன்று  நானும் 
       பெண்மகளே  உன்னையுமே  ஈன்றெ  டுத்தேன்; 
கள்ளமனம்  கொண்டோர்போல்  நெற்கள்  நஞ்சு
       கள்ளிப்பால்  கொண்டுன்னைக்  கொல்ல  வில்லை;
அள்ளியேதான்  எடுத்துவந்து  குப்பைத்  தொட்டி, 
        அரசுதொட்டில்  தம்மில்தான்  போட  வில்லை;
வெள்ளைமனம்  பெற்றுநானும்  வளர்த்து  விட்டேன்; 
         வையத்தை  நீவெல்ல  முயற்சி  கொள்வாய்!

உலகத்தில்  பெண்ணொருத்தி  ஒருவள்  கூட 
       உன்னைப்போல்  இல்லையென  உணர  வைப்பாய்! 
நலன்விளைக்க  ஆணென்ன  பெண்ணு  மென்ன?
       நாடறிய,  வியந்துபோற்ற  உன்னை  நீயே 
நிலமாக  நிலைநிறுத்த  பாடு  பட்டு 
      நிலந்தோறும்  வணங்கிடவே  செயலை  மாற்று;
நிலவொளியாய்  வையமெங்கும்  மகளே  பாய்ச்சு; 
      நான்பெற்ற  மகிழ்வினையும்  எனக்கு  ஊட்டு! 

-'நெருப்பலைப் பாவலர் ' இராம இளங்கோவன்,  பெங்களூர். 

**

புல்லில் பூத்த என் புது மலரே ...
புன்னகையால் என்னை புதுப்பிக்க வந்தவளே..
தடைகளை எண்ணி தயங்காதே...
தோல்வியை கண்டு துவளாதே...
என்றும் துணையாய்  இருப்பேன் தளராதே...
போர்க்களத்தையும் பூத்தளமாய் மாற்ற புத்துணர்வோடு நடைபோடு
உன்னால் புகழ்பெறும் நாளை நம் நாடு...

- அனுசுயா லஷ்மி பாண்டியன்

**
அன்பு  மகளே,

உன் தாயின் கருவில் நீ ஜனித்தபோது  
இந்த உலகிற்கு என்னை அடையாளம்  காட்டினாய்,
இந்த பூமியில் நீ பூத்த போது உலகை  
எனக்கு அடையாளம் காட்டினாய்!
உனக்கு பெயர் சூட்டி என்  
கடந்தகாலத்தை அசை போட்டேன்,
உன் பெயருக்கு  முன் என் பெயர் 
போட்டு என் பொறுப்புகளை உணர்ந்தேன் !
உன் மழலையில் என் மொழி தொலைத்தேன், 
நீ பேசிய போது, மெய் மறந்தேன்!
நீ பட்டம் பெற்ற அந்நாளில்  
நான் ஜெயித்ததை உணர்ந்தேன்,
நீ மறுவீடு செல்லும் போது, 
என் கடமை நன்றாக நிறைவேறியதை நினைத்தாலும்,
அந்த  நிமிடம்  நீ  என்  கைப்பற்றி  
‘போயிட்டு வரேன் பா’ 
என்று சொன்ன போது என் வாழ்வில்  
அனைத்தையும் தொலைத்ததைப் 
போல் தேம்பினேன்!
மறுபுறம்  உன் அன்னை  
‘பெண்ணாக  பிறந்தவள்  மறுவீடு  
போய்த்தானே ஆகவேண்டும் ’ 
என்று என்னை  தேற்றிய போது  
இவளுக்கு கல் நெஞ்சமோ  
என்று ஒரு கணம் தப்பாக நினைத்து, 
பின்  உணர்ந்தேன்
உன்னை நெஞ்சில் நான் சுமந்த 
நாட்கள் அதிகம்  
ஆனாலும் அவள் உன்னை  
தன்னுள்  சுமந்தவள் என்று  
அவள் எனக்கு உணர்த்தினாள், அவள்  மனதிடத்தால் ,
என்  கண்ணீர்  உன்னை  துன்பப்படுத்த கூடாது என்று !
என்னை  தேற்றிக்கொண்டு  உன்னை  வழி  அனுப்பினேன்  
‘போய்  வா  மகளே ’ என்று
அன்று  முதல்  ஒவ்வொரு  நாளும்  
வாசல்  காத்து  நிற்கிறேன்  
உன்  சில மணி நேர வருகைக்காக
உன்னை உன்  குடும்பத்தோடு சந்தோஷமாய் 
பார்க்கும் போது மனநிறைவு கொண்டு  
என் அன்னையை காண்கின்றேன் உன் வடிவில் !
இன்று  வாழ்க்கையின் தேடல்  
நம்மை தொலைவில் வைத்தாலும் ,
நீ மண்ணில் தோன்றிய இந்த நாளே  
என் மூச்சுள்ள வரை என் வாழ்வின் திருநாள்
இந்நாளில் நீ பல்லாண்டு நலமாக வாழ வேண்டும்
என்று  வேண்டுகிறேன்,
என் அன்பு எழில்மிகு இளவரசியே ,

வாழ்க  வளமுடன்!!
பாசத்தோடு அப்பா.

- பிரியா ஸ்ரீதர் 

**
காலியான உன் பணப்பெட்டியில் 
இக்கடிதம் கண்டு குழம்பும் மகளே,

மது அருந்தப் பணம் கேட்டேன் 
மறுத்து விட்டாய்!
மாதா மாதம் சம்பளத்தை 
மறைத்து வைத்தாய்!

இன்று பணப்பெட்டியை மறந்தாற்போல் 
திறந்து வைத்தாய்!
பலநாளாய் காய்ந்த வயிற்றில்  
பாலை வார்த்தாய்!

எடுத்துக்கொண்டேன் இருநூற்றி ஐந்தை
இப்படிக்கு உன் அன்புத் தந்தை.

 - நிலவை பார்த்திபன் 

**
கருவறை தாண்டி
புவியினில் உதித்த
காலம் முதல்
அன்பால் அடக்கிய
சின்னஞ்சிறு தாயே!
கிண்கிணி கொலுசு
கிணுகிணுக்க
காதோர வளையங்கள்
ஜதி பாட
மஞ்சள் முகமும்
தீட்டிய புருவங்களும்
மை உண்ட கருவண்டுக் கண்களும்
பெண்ணுக்கு அழகில்லை
என்றே புறப்படுவாய்!
ஒய்யார நடையழகும்
குதி உயர்ந்த செருப்புகளும்
உதட்டுச் சாயமும்
உன் அழகை வெளிக்காட்டும்
களைகள் என்றே
உணர்ந்திடுவாய்!
தமிழ் கணினி
உன் விரலெங்கும்
நர்த்தனமிட
கல்வி விளக்கை
உலகெங்கும் நீ பரப்ப
காமராசர் வழியினில்
புறப்படுவாய்!
அறிவை உரமாக்கும்
அட்சயபாத்திரமாய் நீ
இருக்க அரிதார
ஓவியமாய் மாறாதிரு!

- சீனி

**

மகளே நீ பிறந்ததும் பெண்ணா ? என்று
முகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்!

பொட்டைப் பிள்ளையை படிக்க வைக்கிறான் என
புறம் பேசியவர்கள் இன்று பிரமித்து விட்டனர்!

செல்லம் தந்து கெடுக்கின்றான் என்றவர்கள்
சொந்தம் எங்கள் சொந்தமென்று பாராட்டுகின்றனர்!

மேல்படிப்பு எதற்கென்று மட்டம் தட்டியவர்கள்
மனதார பாராட்டி மகிழ்கின்றனர் உன்னை!

வெளியூருக்கு படிக்க அனுப்புகின்றான் என்று என்னை
வாயுக்கு வந்தபடி பேசியவர்கள் வாயடைத்து விட்டனர்!

ஒத்தையிலே அனுப்புறான் சமைந்த புள்ளையை என்றோர்
ஓகோ என்று புகழ்கின்றனர் மகளே உன்னை!

தடைகளைத் தகர்த்து சாதித்து பெயர் எடுத்தாய்
தடகளப் போட்டியிலும் நீ வென்று விட்டாய்!

உயர் பதவி அடைந்து நல்ஊதியம் பெறுகின்றாய்
உன் அலுவலகத்தில் நீயே தலைவியாய் இருக்கின்றாய்!

உனக்குக் கீழ்தான் கேலி பேசியோர் மகன்கள் உள்ளனர்
உயரத்தில் இருந்தாலும் தலைக்கனம் இல்லை உனக்கு!

வசிக்கும் ஊரிலிருந்தே வாழ்த்துகின்றேன் உன்னை
வந்தவர் போனவர் அனைவரும் பாராட்டுகின்றனர் உன்னை!

உன்னைப் பெற்றதற்காக பெருமை கொள்கிறோம்
ஒருபோதும் யாரும் வருந்தாதீர் பெண் பிறந்தால்!

பெண்னைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் உண்மை
பெண் பிள்ளையால் கிடைத்தது பெருமை!

பெண் பெற்றதற்காக அன்று குறை சொன்னவர்கள்
பெருமைப்பட்டு வாழ்த்தி பாராட்டிச் செல்கின்றனர்!

- கவிஞர் இரா .இரவி

**

மகளை பெற்றதினால் பாக்கியமுற்றேன்,
தாயை தூக்கி தாலாட்டும் பாக்கியம் பெற்றேன்,

தங்கை, அக்கா கோராத அளவில் உரிமை கோருகிறாயே,
தாய், தாரமிடம் இல்லாத அளவில் அதிகாரம் செய்கிறாயே,
எளிதில் கோபிக்கும் எந்தன் சுபாவத்தை தகர்த்தெறிந்தாயே!
வடிவமில்லாமல் இருந்த என் வாழ்விற்கு வடிவை தந்தாயே!

உன்னை பெற்றதால் எந்தன் வாழ்வு பூர்த்தியுற்றதோ?
உன்னை ஆரத்தழுவியதால் பாவம் அற்று தீர்ந்தனவோ?

அப்பா என்ற ஒரு வார்த்தையில் கட்டிப்போடும் மரகதமே,
மணாளன் வீடு புகும் மங்கையே, கணவனிடம் தந்தையை தேடாதே!
உன் வாழ்வு சிறக்கட்டும் வீடு தழைக்கட்டும்! 

- இனிய தமிழ் செல்வா, ஓமன்

**
மாலையிட்ட மங்கை தந்த மகளே!
என் குறிஞ்சி மலரே!

பூஞ்சோலையாய் பூத்துக்குலுங்கும் பொன் மகளே!
என் புது மலரே!
அரும்பரும்பாய் ஆர்ப்பரிக்கும் ஆனந்த சிரிப்பே!
சிரிப்பின் ஒலியே!
முத்துக்களில் நீ ஒளிந்திருந்தாலும் நான் மட்டும் காண்பேன் மாணிக்கமே!
ஆசையாய் நீ தந்த முத்தம் நித்தமும் இனிக்கிறதே!

என் வாழ்வின் வசந்தம் நீ,
வீட்டின் விளக்கும் நீ,
விளக்கின் ஒளியும் நீ,
இருள் நீக்கிய சுடரும் நீ,

மகளே எங்கள் பகலின் கதிரவனும் நீ!
இரவில் உலா வரும் நிலவும் நீ!

தாயின் அன்பு கருணையில் தெரியும்,
மனைவியின் அன்பு பிரிவில் தெரியும்,
மகளின் பாசம்  மறுமையிலும் தெரியும்,


இடர் வரும் பொழுது தடுப்பவளும் அவளே,
தாயும் அவளே என் சேயும் அவளே!
தரணியாளும் கலை "மகள்" அவளே!
எப்பிறவியிலும் நீ வேண்டும் "என்  மகளாக"....

- செந்தில்குமார், நெல்லை

**

மடல் வரைந்துதான் உணர்த்த வேண்டுமா!
மவுனமொழி பேசும் என் கண்கள்
துடிக்காமல் துடிக்கும் உலர்ந்த உதடுகள்
மகளுக்காக மட்டுமே மற்றதை நினைக்க மறுக்கும் மனது
மகளே....!
உணர்த்தவில்லையா என் அன்பை
அகிலத்தில் அனைத்தும் அன்பு மகளுக்காகவே
இல்லை என்பது  இல்லாது இருக்கவேண்டும்
என் மகளுக்கு என மறுகும் மனது புரியவில்லையா
மகளே....!
தேவையை மட்டுமே தெரிவிக்கும் என் அன்பு மகளே
எனக்கும் தேவையிருக்கும் என்று நினைத்ததுண்டா ?எப்போதாவது
மடலெழுதி மனமுணர்த்த விருப்பமில்லை எனக்கு
மகளுக்கு ஒரு மடல் மனதில் மட்டுமே.......!!

**

அசாத்தியங்களை இலகுவாய் சாத்தியமாக்கி என் 
ஆண்மைக்கே ஒரு அர்த்தம் விளைவித்தாய்!

மதகு திறந்த நதியைப்போல உன் மழலைச் 
சிரிப்பினால் மனம் குளிரவைத்தாய்!

தேவதைக்கு தேவதையாய் பிறந்த வரமடி நீ 
என் தோளில் உன்னைச் சுமப்பதில் புண்ணியம் தந்துவிட்டாய்!

அழுகையால் காரியம் ஆயிரம் சாதிக்கும் உலகில் நீ
அன்புப் புன்முறுவலால் அனைத்தையும் சாதித்துக் கொண்டாய்!

உன் அன்னைக்கும் எனக்கும் பிணக்கு வருகையில் 
நடுவராய் நின்று கட்டை பஞ்சாயத்து செய்தாய்!

மிதிவண்டியை ஓட்ட பழகிவிட்டேன் பள்ளி செல்ல - இன்று
உயர்தரக் காரை ஓட்டி அலுவலகத்துக்கு செல்கிறாய்!

மின்னஞ்சல் அனுப்பும் விதத்தை கற்றுக்கொடுத்தேன் இன்று 
இணைய தளத்தையே உருவாக்கும் வித்தையை சீராய் கற்றுக்கொண்டாய்!

குடும்பத்திற்கே ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்த நீ 
ஆனந்தமாக உன் குடும்பத்தை நடத்திச் செல்கிறாய்!

என் மகள் நீ என்று சொல்லாமல் 
உன் தந்தை நான் என்று கர்வம் கொள்ளவைத்தாய்!

- ஜ.ரா. கோபாலகிருஷ்ணன்

**
மகளே....... என் 
தாய்மையினை உணரச் செய்து 
வாய்மையுடன்  வாழச் சொல்லிக் கொடுத்த 
சேய்...... நீ!
சென்றுவிட்டாய்  புகுந்த வீடு 
வென்று  வருவாய் உன் தாய்வீட்டு
பெருமையினை............
உன்னை காணாது எங்கும் 
என் உள்ளம் புரிந்து
கண்டுபிடிக்கப்பட்டதுதான் அலைபேசியோ!
கிரஹாம்பெல் என்ற விஞ்ஞானியின் 
அயரா     உழைப்பில்  உன் 
குரலில் உன் முகம் கண்டு மகிழ்ந்தேன்!
நீ ஆடிய ஊஞ்சல் 
நீயில்லாமல் ஆட தயங்குகிறதே!
நீ ஓடிய சாலை 
நீ இல்லாமல் தோகையிழந்த 
மயில் போல காட்சியளிக்கிறதே!
மகளே...... என்னுடைய இந்த 
மடலில் என் ஆசையினை எழுதி 
கடலில் வரும் அலைபோல 
உன் நினைவுகளுக்கு   நங்கூரம்
போடுவது ஒன்றுதான் தீர்வு!

- பிரகதா நவநீதன், மதுரை

**


மடல் வரைந்தேன் இன்றுனக்கு
மகள் நீயும் வளர்வதற்கு 
கடல் சூழ்ந்த உலகினிலே
புகழ் உடனே வாழ்வதற்கு

பூமகளே நீ வரமே
பூமியிலே நீ தவமே 
வையகமே பெருமை கொள்ள
பிறப் பெடுத்த மரகதமே!

ஆன்றோர்கள் அருள்  உரைத்த 
நன்நெறிகள் மனதில் வைத்து  
சான்றோர்கள் எழுதி வைத்த 
நன்நூல்கள் நாளும் கற்பாய்

கல்வியொன்றே குலத்தைக்  காக்கும்
கல்வியொன்றே நலத்தைப்  பேணும் 
கல்வியொன்றே தீதை  வெல்லும் 
கல்வியொன்றே வாகை சூட்டும்

உரத்த சிந்தனை உள்ளம்வைத்து
ஊக்கம் என்றும்  கையில்கொள்க 
உறுதியுடன் நன்மை செய்து
ஊரார்மெச்ச என்றும் வாழ்க!

- கு. இராமகிருஷ்ணன்

**
மணநாளை நினைத்துநானும் மகிழ வில்லை
……….மறக்காத நாளென்றும் சொல்ல வில்லை.!
குணத்தாலே மனையாளும் கிடைத்த போதும்
……….கொண்டாடிப் பெரிதாக அலட்ட வில்லை..!
இணக்கமான குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க
……….இருவருக்கும் ஓர்மகளாய்ப் பிறந்தாய் நீயும்.!
குணவதியாய் குலம்விளங்க வந்து தித்தாய்
……….குடும்பமாகச் சொந்தமதைச் சேர்த்து வைத்தாய்.!
.
மதிகொண்ட பெண்பிள்ளை பெறுவா யென்று
……….மறக்காமல் சோதிடத்தில் ஒருவன் சொன்னான்.!
மதிக்காதோர் மதித்தார்கள் உன்னைப் பார்த்து
……….மங்காத புகழ்தந்தாய் பெற்றோ ருக்கு.!
பதிநாறும் பெற்றுநீயும் பெருவாழ் வென்பார்
……….பதிநாறை ஒன்றாகப் பெற்றுத் தந்தாய்.!
விதியென்றால் என்னவென்று உணர வைத்தாய்
……….வெல்லவழி சொல்வதற்கே மகளாய் வந்தாய்.!
.
ஆண்டாளை வேண்டிப்பெற் றவரம் நீயே
……….அண்டத்தில் யாம்செய்த தவமாய் நீயே.!
தூண்போல அனைவரையும் தாங்கி நின்று
……….துயரத்தை நீக்குபவள் பெண்ணாம் என்று.!
நாண்போல நற்குடும்பம் காக்க வந்து
……….நானிலத்தில் பெற்றோரை மதிக்க வைத்தாய்.!
ஆண்மகவே வேண்டுமென்ற நினைவ கற்றி
……….அன்பான பெற்றோர்க்கு அறிவு தந்தாய்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

புகுந்த வீடு புகழுடன் சென்ற மகளே!
தகுந்த மொழி யான்உரைப்பேன் கேள்..
கற்று தருதலால் கணவன்அவன்
பற்றுக்கொண்டு செழித்து வளமாய்
இல்லறம் நல்லறமாய் செய்வாய்.
மாமன் ,மாமி,மைத்துனர், நாத்தனார்
தாமாகவே அவர் பணி செய்வது உன்கடனே
உணவு அனைவருக்கும்நிறைவாய் வழங்கு.
பணம் கஞ்சம்செய்தல் குடும்பத்தில் வேண்டாம்.
தானத்தில்சிறந்த அன்னதானம் செய்து
மானம் காத்து குலம்காத்துநீயும்
வானவர்போற்றும் வாழ்வு நடத்துவாய்.
சுற்றம் போற்றி நட்புபோற்றி
மற்றும் தெய்வம் போற்றி வாழ்வாய்.
மக்கள் செல்வம் மழலைச் செல்வம்
தக்கதோர் செல்வம் அடைவாய் கண்ணே
மாசில்லாகுணக்குன்றாக குடும்பத்தில்
பாசமுடன் இருந்து பல்கிப்பெருகுவாய்.

- ராணி பாலகிருஷ்ணன்

**

என் வாழ்க்கையின் அா்த்தம்
சொல்ல பிறந்த என் மகளே
முதுமையின் வலிககளை சொல்லி விட
முதியோர் இல்லத்திலிருந்து
வரைகிறேன் ஓா் மடல் உனக்கு

கடவுள் என்னிடம் கனவில் வந்து
உன் கடைசி ஆசை எது என கேட்டாா்
என் ஆசை மகளே என் மகளே.
நான் கடவுளிடம் என் மகளுக்கும்
என் நிலை வந்து வந்து விடக் கூடாது என
பிரார்த்தனை செய்வதாய் கடவுளிடம்
வேண்டுவதாய் கடவுளிடம் கூறினேன்
ஆசை மகளே என் மகளே.

- ஈழநங்கை

**

அன்பு மகளே - அதிகாரம் ஆட்டிப் படைக்கும் உலகமிதில்
இயல்பை மீறி எவரும்
ஈன்றவரை மறப்பர்
உயர்த்தியவரை உதறுவர்
ஊட்டி வளர்த்தவரும்
எவரோ - ஆவர்,
ஏணி க்களும் கேணியாகும்
ஐந்திறம் அறிவாகும்
ஒற்றுமை அன்னியமாகும்
ஓதுவது - கசப்பாகும்
ஒளவியம் தவிர்க்காமல்
ஆய்தம் தரிப்போர் - நடுவில்
குணமெனும் குன்றேரி
நில்
குவலயம் நமதாகும்,
வாட்ஸாப் அல்ல வாழ்க்கை
முகநூலல்ல மனிதம்
மனிதர்களின் முகங்களை வாசி,
பிறப்பின் பயனை யோசி,
பக்தியால் இறையிடம் யாசி,
பகைவர் தமையும் நேசி,
கல்வி கேள்வியில் ஞானம் பெருக்கு
மோனம் கொள் -
உயர்வாய் நீ - இதுவே இந்த தந்தை சொல்லம்மா - என் செல்ல மகளே

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்றுசொன்னேன் அன்னை
விலைபோட்டு வாங்கவா முடியும் விரும்பி நீ சென்றால்தான் அது முடியும் அன்று நான் உனக்கு உரைத்தது உன் நினைவில் இருகிறதா ? கண்ணே! !
தோளுக்கு மேல்வளர்ந்துவிட்டாய் நீ !உன்னிடம் தோழமையோடு ஒன்று சொல்ல துணிகின்றேன் இன்று துவங்கட்டுமா கண்ணே என் உரையை நங்கு கவனி !

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே ! ஏன் படித்தோம் என்பதை மறந்திடாதே
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றாள் அவ்வை அன்று !அதுபோல்
அன்னை மொழியும் ஆம்! ஆங்கிலத்தைக் கற்றுவிட்டாய், பாங்குறவே மகிழ்ச்சி
அது போல் தமிழையும் நீ கசடற கற்கவேண்டும் கடினமில்லை மனம் வேண்டும்,

ஆங்கிலத்தில் கால்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, வியப்புக்குறி, கேள்விக் குறி அர்த்தத்தோடு நீ அமைத்து எழுதிடுவாய் நானறிவேன் அதுபோலவே தமிழிலும் அமைத்து எழுதினால் நன்று!“வேறு வேறு பாஷைகள் கற்பாய் வீட்டு பாஷை கற்கிலாய் போ! போ!’ என்றநம் பாட்டன் பாரதி சொன்னனே! நினைவுண்டா? நினைவு நான் ஊட்டுகின்றேன் மீண்டும் இன்று நீ கேட்டிடுவாய் என நம்பி! தாய்மொழி நமக்கு தாய்போன்றது அதுபோல் ஆங்கிலம் அகிலமொழி ரெண்டும் தவறின்றி நீ அறிதல் நன்று, எண்ணும் எழுத்தும் கண்ணென வாழும் உயிர்க்கு தமிழையும், ஆங்கிலத்தையும் இரண்டு கண்களென நீ போற்றிடுவாய் கண்ணே ! உன் பிள்ளைகளுக்கும் இதை உணர்த்திடுவாய் பெண்ணே! நீ வாழ்க நீடு! என் பேரன் பேத்திகள் என்னிடத்தில் தமிழில் த்தான் பேசவேண்டும் என்பேன்!

உனக்கு உன்னுருமைவாழ்க்கைத் துணையை தேர்வுசெய்வது  உணர்வாய்!
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு நீ ஆசை படலாகாது பெண்ணே!  
நாம் உயர்வு என்று நாமே சொல்லிக்கொள்ளக்கூடாது அடுத்தவர் கூற வேண்டும் உனக்கு உன் அம்மா, அப்பா எப்படியோ அப்படித்தான் உன் கணவனுக்கும் அவர்களுடன் பழக நீ! அனுமதிப்பாய், ஒருபோதும் இதை மறுக்காதே அதுதான் அம்மாவுக்கு நீ செய்யும் நன்றி யாகும் அம்மாவுக்கு செய்யும்பெருமையாகும்! பிறர் போற்றும்படியாய் பிறர்க்கு உவமையாகி நீ வாழ வேண்டும், எனதாசை!

பறவைகளில் எனக்கு பிடிக்காதது குயில்! குயிலுக்கு சுகம் வேண்டும் பிற
பறவைகள் போல் கூடுகட்டிவாழாது, அதே போல்தான் மேலை நாட்டுப் பெண்மை கிழக்கு நாடுஅதாவது நமது நாட்டில் பெண் சமத்துவமாய் நடத்தப்படுவதற்கு கீழை நாடுகள் உத்தரவாதம் வரவேண்டும் அது மேலை நாட்டைப்போல் மேலை நாட்டுப்பெண்ணுருமை என்பது குயில் வாழ்க்கை போல் அமைந்துள்ளது கீழைநாடு பெண் பொறுப்பு குழந்தைகள் பராமரிப்பு குடும்பம் சமூகம் பேணுவது மேலைநாட்டு சமத்துவமும் நமது நாட்டு சமூகப்பொறுப்பும் உனக்கு வேண்டும் உன்அன்னை  என்ஆசைகளை நீ பின்பற்ற வேண்டி படைக்கிறேன், தொடரும்,

-  கவிஞர் ஜி.சூடாமணி, இராஜபாளையம்

**

தவமாய் தவமிருந்து எம் தாயின் உருவில் பெற்ற
தேவதையே ! கண்ணே.! கண்ணின்  ஒளியே !

நீ பிறந்த அன்று
ரோஜாப் பூவாய் உனைக் கையில் ஏந்தி ஒரு 
ராஜாவாக உணர்ந்தேன்  உலகையே வென்றவனாய்.!
ப்  .. பா.. என முதன் முதலாக நீ
பவழ வாய் திறந்து 
தித்திக்கும் தமிழில் பேசியதும்
தத்தித் தவழ்ந்து நடை பழகியதும் உன்னை
ஈ ன்ற பொழுதின் பெரிதுவந்த
இனிய தருணங்கள்  .
இன்று நினைத்தாலும்
இதயம் சிலிர்க்கிறது .!

வண்ணங்களால் இழைத்த
வானவில்லே !
கண்ணுக்குத்தெரியாத 
சிறகுடன் காலம் பறந்து கொண்டிருப்பதை அறிவாயா! 
வளர வளர நீ
வாழ்க்கையின் நிலைகளை
அறிய வேண்டும்.கண்ணம்மா!
மேடு பள்ளம் நிறைந்தது தான்
வாழ்க்கை.!
ஏட்டுக் கல்வி தவிர
வாழ்க்கைக் கல்வி யையும் நீ
கற்றிட வேண்டும் !
உலகம் அழகானது தான்.
உன்னைச் சுற்றியுள்ள
இயற்கையை நீ நேசித்தால் !
உலகம் சுவாரசியமானது தான் .
உயிர்கள் அனைத்தையும் 
உவகையுடன் நீ நேசித்தால் !

நம்பிக்கையுடன் நீ வாழ
நல்ல நூல்களை நாளும்
வாசிப்பாயாக .!
நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையுமாக
பாரதியின் புதுமைப்பெண்ணாக
பாரினிலே நீடூழி நீ வாழ வாழ்த்துகிறேன்
உன்னை என்றும் எனது
உயிரில் சுமக்கும் உனது அன்புத்தந்தை !

- வெங்கட் ஜெயா

**

பனிக் காற்றின் பரவசமாய் 
என்னில் நீ ஜனிக்க,
பாதியாய் இருந்த நான்
பூரணமாய் ஆனதுன்னால்,
பக்குவமாய் பள்ளி சென்று
பாராட்டும் படி நீயும் பாடம் பல 
கற்று கல்லூரி சேர்ந்த பின்னே
கண்ணே - வாதும் சூதுமாய்
வகைவகையாய் மாந்தர்களும்
வந்திடுவார் நின் வாழ்வில்
எத்தனை இடர்கள் - எதிர் வந்தாலும் 
தாமரை இலையின் தண்ணீராய் இரு,
சந்தைக்குள் நீ இருந்தாலும் 
சிந்தை இருக்கட்டும் விழிப்புணர்வோடு, 
மூச்சும் பேச்சும் பயிர்சியாக்கு,
இவை இரண்டும் உன் பேச்சைக் கேக்கட்டும்,
ரெளத்திரம் பழகு
அகந்தை தவிர்,
உனக்கிட்டபடி என்றென்றுமிரு - 
மகளே உனக்கெந்தன் சொல் இதுவே

- கவிதா வாணி

**

என் அன்பு மகள் நீ ...என்னை விட்டு 
சென்று விட்டாய் வெகு தூரம் ! அயல் நாட்டில் உன் மேல் 
படிப்பு உன்னை சிகரத்தின் உச்சியும் தொடவைக்கும் !
உன் அம்மா நான் உன் மின்னஞ்சல் படிக்கும் 
வழி தெரிந்துகொண்டேன் உனக்காக ! ஆனால் உன் மின் அஞ்சல் 
எல்லாம் உன்  மொழியில் ! அது எனக்கு கிரேக்க மொழி!
அம்மாவின் என் மொழி இப்போ உனக்கு வேற்று மொழியா 
பெண்ணே?  மாற்றி யோசித்து  புது உச்சம் நீ தொட்டாலும் 
அம்மா நானும் பெண் நீயும் பேசிக்கொள்ள நடுவில் ஒரு 
மொழிபெயர்ப்பாளர் உதவி தேவையா நமக்கு ?
மாற்றிக் கொண்டாய் நீ உன்னை சாதனை பல 
ஆற்றிட ...என் மடலையும் நம் மொழியில் படித்து 
பதிலும் எனக்கு என் மொழியில் கொடுக்கும் 
ஆற்றல் இல்லையா என்ன உன்னிடம் ?
இந்த வயதில் உன் மின்னஞ்சல் மொழி  நான் 
கற்கும் போது உன் வயதில்  அம்மா மொழியில் ஒரு 
மின்னஞ்சல் எனக்கு நீ அனுப்ப முடியாதா என்ன ? 
அந்த உன் ஒரு சாதனை தீர்த்து வைக்கும் என் 
நீண்ட நாள் வேதனையை ! உன் பதில் என்ன என்று 
"கூகுளில் தேடு " நீ  என்று மட்டும் சொல்லிவிடாதே 
என் அருமை பெண்ணே !

- K.நடராஜன் 

**

சுறுசுறுப்புடன் எழுதத் தொடங்கினேன்.

"பெண்ணா" ?? 
சோகத்தை வேகமாய் முழுங்கி 
சந்தோஷச்சாயத்தை 
உதட்டில் பூசிய உன் தந்தை!! 

பொட்டையா ?? 
வெறுப்புச்சொற்களால் 
சறுக்க வைத்த பாட்டி !!

நீ கற்பூரம் - -- இருந்தும்
 கான்வென்ட் கல்வியா ? 
காசு போகுமே ? 
தூசு படிந்த வாயுடன் மாமன் !! 

உன் ஆரோக்கியத்தை அடகு வைத்து 
மனம் குளிர்ந்த அத்தை !! 

இப்படிப்பலர் --- 

விழ மறுத்த அழுக்குச்சொற்கள் --
காகிதத்தின் வெள்ளை மாறவில்லை !!
ஆம் !
மகளுக்கு எழுதிய மடல் 
தொடக்கத்திலேயே  முடங்கியதே  ?? 

- Dr எஸ். பார்த்தசாரதி

**

சீவிச் சிங்காரித்துச்
சின்னவட்டப் பொட்டிட்டு
மேவியுச்சி மோந்து
வாவென்ற வருகணைந்து
தாவியெனை யணைக்கும்
என் தாயுமானவளே!
ஆவி சோர்கையில்வந்து
அவி சொரிந்திவ்வாயில்,
போவியோ? அன்றேல்
ஏவியவோர் சொல்கேட்டுச்
சாவிதரு பொம்மையதாய்
ஆவியோ? அறிகிலேன் யான்..!          

- குகதர்சனி, ஐக்கிய இராச்சியம்.

**

என் அம்மே! என் ஆருயிரே!
தவமாய் தவமிருந்து நான் பெற்ற மகளே!
தந்தையாய் யான் பிறக்கச் செய்தவளே!
அழகே அழகிற்கு அழகானப் பேரழகே!
அமுதே நினைவினில் ஊறும் பேரமுதே!
உயிரே எந்தனுயிரினில் பூத்த தேவமலரே!
உலகே என்னுலகினைச் சுற்றிடும் முழுநிலவே!
பல்லாயிரம் மையிலுக்கு அப்பால் நீயும்
எல்லாமான நீயிங்கு இல்லாமல் நானும்
சொல்லொண்ணாத் துயரில் நின் பிரிவில்
சொல்லவும் முடியாது பொய்நகைப் புனைவில்
கண்டங்கள் கடந்த காணொளி பேச்சில்
கண்டுன்னை கசிந்துருகிப் போகின்றேன்
ஒருசில மணித்துளிகளே ஆயினும் தினமும்
ஓயாதப் பணிச் சுமையிலும் மறவாது
என்னை அழைத்திடு எனதருமை மகளே
நின்பிரிவின் காயத்திற்கது அருமருந்தாகுமே!

- கோ. ஹாலாஸ்யம். சிங்கப்பூர். 

**

மகளே உன் ஜனனம் எங்களை
தாய் தந்தையாக்கியது
உன் வருகை
சித்தி சித்தப்பா பெரியம்மா பெரியப்பா 
அத்தை மாமா 
இப்படி உறவுகள் வந்தது தந்தது
நீ வளரும் போது எங்களுக்கு
தினமும் புலரும்பொழுது
நல்ல விடியலாய்
உன்னை இறைவன்
எங்களுக்கு கொடுத்தது
அன்று மகளே
உனது அழுகுரல்
கேட்டாலே
உன் அம்மா
எங்கிருந்தாலும்
ஓடி வருவாள்
ஒருபோதும்
உன்னை அவள்
அழவிடவில்லை
உன் முகம் அறிந்து
உன் அகத்தையும்
அறிந்தவள் உன் அன்னை
இப்படிவளர்ந்தாய்
பள்ளிக்கு துள்ளிக் கொண்டு செல்வாய்
அதன் பிறகு
மகளே
பருவமாற்றம்
உன் உருவமாற்றம்
எங்களுக்கு வயது ஏற்றம்
தடுமாற்றம் வரும்
நேரம்
மனதை தாலாட்டும்
உன் முகத்தின் வசீகரம்
மகளே இன்று
உனக்கு திருமணம்
ஒரு பக்கம் மகிழ்ச்சி
மறுபடியும் 
கடந்த கால நினைவுகள் நடக்குமா? 
என்ற ஏக்கம்
அன்று முதல் இன்று
வரை நான்
தெருமுனை வரும்
போதே 
என் வரவை தெரிவிக்க
இனி ??? 
நெஞ்சம் கலங்குது
என் செய்வது
பெண்ணாக பிறந்து
விட்டால்
பயணம் என்றுமே
தொடர்ந்து
பிறந்த வீடு தொடங்கி
புகுந்த வீடுவரை
தொடருமே
மகளே
எங்கு சென்றாலும்
நீசரியான முடிவு எடுப்பாய் 
அங்கும் சரியாக இருப்பாய்
அம்மாதான்
எப்படிஇருப்பாள்
என்று தெரியவில்லை
மடலில் எழுத வார்த்தைகள் இல்லை
மனதில் எழுதிய
உறலல்லவா?
மரனித்தாலும் மரணிக்காது
இந்த மடல்
இதயத்தின் வருடல்
உனக்கான தேடல்
அன்புடன்

- களக்காடுவ.மாரி சுப்பிரமணியன்

**

சுவாசம் கொடுத்த என்னை 
நேசத்துடன்  பார்த்து 
பாசத்துடன் கைகோர்த்து  
வேஷமில்லா  அன்பு காட்டிய 
என்னருமை  புதல்வி நீ!
வாழ்ந்த,  வாழும்,  வாழப்போகும்  வாழ்க்கை  
என்ற முக்காலத்திலும் 
உன் நினைவுகளை என்னிடம் தந்து 
தன்னிலை மறக்க வைத்த 
நீ மகிழ்ச்சியாக  புகுந்த வீட்டில் 
அடியெடுத்து வைத்தாய்!
பெண்ணை பெற்றால் நம் 
கண் மூடும்  நாள் வரை 
என்னை காப்பாய் என்ற 
நம்பிக்கை கொடுத்த  
ஆல மரம் போன்றவள் நீ!
உனக்கு மடல் வரையும் 
எனக்கு நீ அனுப்பும் பதில் மடல் 
அதுதான் "என் எனர்ஜியின்" ரகசியம்!
காத்திருப்பேன் உன் அன்பு மடலுக்காக!

- உஷாமுத்துராமன், மதுரை

**

மகளைப் பெற்ற தகப்பனெல்லாம்
தன் வாழ்வில் கூடுதலாய்
ஒரு கவிதையும் எழுதியவன் தான்.
ஆக 
கவிதைக்கு ஒரு கவிதை மடல்..

என் முத்தத்தில் குறுகுறுக்கும் 
உன் சிரிப்பால்
நரைக்கும் என் மீசையையும் 
அழகாக்குபவள் நீ.

கனவுகளைச் சுமக்கும் பெட்டகம்
கதைகளும் சொல்லக் கேட்டு
கதைகளாலே மெல்லக் கனவுகளைத்
தூவப்பார்த்தேன்.

தானாய் முகிழும் உன் கனவுகளிடம்
நானாய்த் தூவும் என் கனவுகள்
மெல்லத் தங்கி மெதுவாகவே வளர‌
எனக்குப் புரிந்தது.
விளைநிலங்களும் முடிவு செய்யும்
விதையின் வாழ்வை
அது விளைந்து நிற்கும் உயரத்தை.

ஆக 

இந்த மடலில் 
எதுவுமே சொல்லாமல்
ஆனாலும் சொல்ல வேண்டும்.

எனவே
ஒரு கதை மட்டும் சொல்வேன்.

ஒரு பரந்து விரிந்த உலகம்.
ஆயிரமாயிரம் பறவைகள்.
பல்லாயிரமாயிரம் மரங்கள்.
எல்லாம் எதுவோ எவரோ
என்றோ விதைத்தது.
பறக்கும் தொலைவே பறவையின் வலிமை. 
பறவையின் விழைவே பழங்களின் வகைகள்.
பசியோ கனவோ எதுவோ
அதுவே பறவையின் வேகம்.
பறவைகள் அள்ளித் தின்னலாம்.
கூட்டினில் குவித்தும் கொள்ளலாம்.
தேடி மகிழ்ந்து தின்னலாம்.
தேடாமல் சலித்தும் போகலாம்.
வலியும் மகிழ்வும் நிறைந்தும்
பறவையின் வாழ்விலும் இருக்கலாம்.
உலகம் பறவைக்குச் சொல்லும் உயரங்கள்
பறக்கச் சொல்லும் தூரங்கள்
எதுவோ ? 
பறவை கண்ட உயரங்கள்
பறந்து சென்ற தூரங்கள்
எதுவோ ? 
எனினும்.. ஆங்காங்கே
விதைகளைத் தூவித்திரிந்தன‌ பறவைகள்.
இன்றும் தூவித்திரிகின்றன பறவைகள்.
பல்லாயிரமாயிரம் மரங்கள்
பலப்பல‌கோடி ஆயின பரந்து விரிந்த உலகில்.
அதனால் மேலும்
பரந்து விரிந்து பரந்தது உலகம்.

கதையில்
என்ன சொல்கிறது பறவைகள் ?

உன்னிடம்
இந்த கவிதை மடல் விழையும் 
பதிலும் அதுவே !!

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com