அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 2

இலக்கணத்தில் அணி வகையுண்டு அரசியலிலும் அணி வகையுண்டு 
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 2

அரசியல்! 

அன்று தொண்டுக்காக வந்தனர் அரசியலுக்கு 
இன்று துட்டுக்காக வருகின்றனர் அரசியலுக்கு !

அன்று நல்லவர்கள் பெருகி இருந்தனர்  அரசியலில்  
இன்று அல்லவர்கள் பெருகி உள்ளனர் அரசியலில் !

அன்று  மக்களுக்காக சேவை அரசியல் செய்தனர் 
இன்று தன் மக்களுக்காக அரசியல் செய்கின்றனர் !

அன்று சொந்தப் பணம் தந்து மகிழ்ந்தனர் 
இன்று சின்ன மீனை இட்டு சுறாமீன் பிடிப்பு !

அன்று காந்தி காமராசர் கக்கன் அரசியலில் 
இன்று அவர்களைப் போல ஒருவரும் இல்லை !

அன்று வாடகை  வீட்டில் வாழ்ந்தனர் தலைவர்கள் 
இன்று மாட மாளிகைகளில் வாழ்கின்றனர் 

அன்று அம்மாவிற்குக் கூட கூடப் பணம் தர மறுத்தார் 
இன்று வாரிசுகளுக்கு கோடிகளை வழங்குகின்றனர் !   

அன்று ஊழல் என்னவென்று அறியாது வாழ்ந்தனர் 
இன்று அரசியலில் எங்கும் எதிலும் ஊழலோ ஊழல்!

- கவிஞர் இரா .இரவி  

**

தகுதி எதுவும் தேவையில்லை
தன்னலம் ஒன்றே போதும்
சாதி மத பேதமுண்டு
சதிக்கும் இடமுண்டு
பழையவர் கழிதலும் உண்டு
புதியவர் புகுதலும் உண்டு
வாக்குகள் விற்பனை உண்டு
வாக்குறுதிகள் மறப்பதுண்டு
பணம் பதவி கண்டு
குணம் இழப்பதும் உண்டு 
வெற்றி தோல்வி உண்டு
கற்கும் கல்விக்கும் விலையுண்டு!
ஆள்பலம்  அதிகாரம் உண்டு
ஆடம்பரம்  விளம்பரமும் உண்டு 
பெண்ணே வாழ்க எனக்கூறி
கண்ணில் குத்துவதும்  உண்டு.
சுதந்திரம் பேச்சில் உண்டு
சுவாசிக்க தடையும் உண்டு
குடிபோதையில் ஆடும்
குடி மக்களும் உண்டு.
அரசியல் சாசனத்தில் இன்று
அரங்கேறிய விதிகள் இவை ?!

- கே.ருக்மணி.

**


ஆண்டானின் அரசியல் கால்கள்
நடுவர்க்கத் தட்டை 
அழுத்தி மிதிக்க...

இடை வர்க்கத் தட்டு
ஆண்டையால் மிதிப்பட்டு தவிக்க
கடை தட்டாய் இருக்கும் வறமைத் தட்டு
மேல்தட்டை இழுக்க முடியாமல்
துடித்தபடித் தொங்க...

ஏறவும் முடியாமல்
இருந்து கொள்ளவும் ஆகாமல்
கைக் கொடுக்கவும் விரும்பாமல்
நண்டுகளென இருக்கிறது
அவரவர் அரசியல்...

ஆணவ படுகொலை புரியும்
சிசுக்களையும் பெண்டிரையும் 
காமம் தீர்க்க
வன்புணர்ச்சி நிகழ்த்தும் 
வரிசையில்
சாதி மத அரசியல்...

தீர்வு காணும் அரசியல்
தெருத் தெருவாய் அலைந்து நாறி
திக்கு முக்காடுவதில் செய்வதறியாது
திகைக்கிறது தேசம்...

-கா.அமீர்ஜான்/திருநின்றவூர்

**

சேவையின் சிந்தனையில் உதித்த சிறப்பு
பூவைத்து பூசிக்கும் புனிதமாய் மலர்ந்து
நாவையடக்கி நல்லடக்கமாய் நடந்த ஒன்று
தேவைகள் குறைத்து சேவையான அரசியல்

நாளும் தேய்ந்து சுயநலத்தின் உருவமாய்
ஆளும் ஆசையில் காசு சேர்க்கும் பருவமாய்
தோளும் தொண்டும் கொடுப்பது குறைந்து
நாளும் ஊழலில் திளைப்பது என்றானதே

சாக்கடை என்கிற சொல் சர்க்கரையாவதா
கூக்குரலிடுவதால் குறை தீருமென இருப்பதா
தாக்குதல்களில் வீரம் காட்டி வாயாடுவதா
போக்கு காட்டி தீர்வுகளைத் தள்ளிப் போடுவதா

அரசியல் புனிதமென நினைக்கும் நினைப்பு
உரசலில்லா உத்தமமான செயல் முனைப்பென
சிரசிலிருந்து கால்வரை நல்மனம் வேண்டும்
மிரட்டலில்லா மனிதநேய அரசியல் மலரட்டுமே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

வள்ளுவன் காட்டிய
அரசியல்
வாழ்க்கைப் பாதைக்கு
உயரிய வழி!
அண்ணல் காந்தி
காட்டிய அரசியல்
உலக அரசியலுக்கு
முன்னோடி!
கர்மவீரர் காமராசர்
காட்டிய அரசியல்
உண்மைக்கு இலக்கணப்பாதை!
இன்றைய அரசியல்
சுயநல அரிதாரத்தை
வெளிக்காட்டி அழிவிற்கு
வித்திடும் நச்சுவிதை!
வருங்கால இளைஞர்களுக்கு
இனி பாடங்களில் மட்டும்தான்
காந்தி காமராசர் அரசியலா!
சாதி மதங்களை வேரறுத்து
அன்னியரிடம் இருந்து பெற்ற
விடுதலை போற்ற என்செய்வோம்

- பொன்.இராம்

**

தனக்குத் தானே நினைப்பது சுயநலம்!
தன்னைச் சார்ந்த  சமூகத்தை 
நினைப்பது பொதுநலம்!
அனைத்து நலத்தையும் 
கொடுக்க அரசியல் ஒன்றே ஆயுதம்! 
நல்லாட்சி செய்வார் எனில்
நாடு வீடு நலம் பெறும்!
இல்லையெனில் அழிந்துவிடும்!
எதிர்காலம் உண்டு இளைஞர் கையில்
உருவாகும் ஓர் அரசாட்சி! - அது
மலரும் மக்களாட்சி!

- மு.செந்தில் குமார், ஓமன் 

**

இலக்கணத்தில் அணி வகையுண்டு  
அரசியலிலும் அணி வகையுண்டு 
கூடி  இருந்தால் கூட்டணி  
ஒட்டி இருந்தால் ஒட்டணி   
எதிர்த்து இருந்தால் எதிரணி 
ஆட்சிக்கேற்ப  மாறினால் சந்தர்ப்பவாதணி  
நிழலாகவே தொடர்ந்தால் தொண்டரணி  
பொருளுக்காக தொடர்ந்தால் பொருளாற்றலணி  
பேசியே சாதித்தால் சொல்லாற்றலணி  
பேசாமல் சாதித்தால் மௌனபுரட்சியணி 
கட்டியாள்வது தலைமை அணி 
கூடயிருந்தே கழுத்தறுப்பது நயவஞ்சகயணி 
மக்கள் போராளிகளுக்கு சிறையணி  
மக்கள் வேண்டுவது உரிமையணி  
இனியிருக்கட்டும் நல்லவண்ணமாய் அரசியலணி  
இதனை பொதுவாய் சொல்வது என்கவிதைமணி!!!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

குற்றங்கள் செய்த போதும் குறுகிடார் நிமிர்ந்து நிற்பார் !
உற்றவர் தமக்கே என்றும் உதவுவார் உவகை பூப்பார் !
கற்றவர் தம்மைக் கண்டும் காணார்போல் கடிதே செல்வார் !
மற்றவர் நிலையைப் பற்றி மனந்தனில் நினைக்க மாட்டார் !

சாதியைச் சொல்லி தத்தம் சாதியை வளைக்கப் பார்ப்பார் !
நீதியைக் கூட தம்மின் நிதியினால் நெம்பிப் பார்ப்பார் !
சேதியை திரித்துக் கூறி சேர்ந்திடும் கூட்டம் காண்பார் !
வாதிட ஏதும் இன்றி வம்புகள் அளந்தே ஆர்ப்பார் !

கட்சிகள் தாவித் தாவி கடமையை முடித்துக் கொள்வார் !
வட்டம்மா வட்டம் எல்லாம் வளைத்துத்தம் கையில் வைப்பார் !
பட்டம்போல் பறப்பார் வானப் பந்திலும் கணக்கு வைப்பார் !
எட்டிடா அளவில் தாமே இருக்கிறார் எதற்கும் ஒப்பார் !

அரசியல் செய்த போதும் ஆண்டியாய்க் காம ராசர் !
அரசியல் 'சாக்கடை'யாம் என்றே  அறைந்தவர் அறிஞர் அண்ணா !
அரசியல் அதிலும் கூட அருந்தமிழ் வளர்த்தார் மு.க !
அரசியல்சீர் அமைக்க வேண்டி ஆர்ப்பரா இளையோர் நாளை !

- ஆர்க்காடு. ஆதவன்.

**

இல்லா ததையே இரட்டிப்பாய் இனிதே ஆக்கும் இரவுபகல் 
பொல்லா ததுவே புலர்கதிராய்ப் பொழுதும் விரிக்கும் புதுமலரர் !
கொல்லப் பாயும் கணையாகக் குறிபார்த் தெறிவார் வல்லவராய் !
நில்லா உலகில் நிலைத்திடவே நிலைக்கச் செய்வார் பற்பலவாய் !

செய்ய முடியாச் செயல்களையும் செய்து முடிப்போம் என்றறைவார் !
பொய்யும் புரட்டும் பொழுதுக்கும் பொன்பூச் சாக்கிப் பொலிவிப்பார் !
வெய்யில் மழையும் பாராமல் விரைந்தே சுற்றி வியந்துரைப்பார் !
உய்யத் தாமே உவந்தளப்பார் உண்மை அவர்போல் உலகிணை,யார் ?

கொடுத்துக் கொடுத்துக் கெடுத்திடுவார் கொள்கை பலவும் வகுத்திடுவார் !
அடுக்க டுக்காய் அத்தனையும் ஆகா என்றே அளந்திடுவார் !
படுத்துக் கொண்டும் வென்றிடுவார் பகட்டாய்ப் பலவும் பகன்றிடுவார் !
இடுக்கண் வந்தும் நகைத்திடுவார் இவர்போல் உலகில் எவருள்ளார் ?

கோடி வீட்டில் இருந்தவரே கோடி கண்டே கொழுக்கின்றார் !
வாடி வதங்கி இருந்தவரே வைய அளவில் உயர்கின்றார் !
நாடி வந்தே நலங்கண்டார் நாடின் காணார் நலஞ்செய்யார் !
ஓடி ஒன்றி அரசியலில் உயர்ந்தே ஓங்கி வருகின்றார் !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

**

சங்ககாலம் முதல் எங்க காலம் வரை 
தங்கமான அரசியலை அறிந்தேன்!
மாட்சிமையற்ற அரசியல் நடந்தது பொற்காலம்!
பாண்டிய அரசன் செய்த நீதி தாண்டிய அரசியலில் 
கண்ணகி பெற்ற அநீதி கேட்டு
மன்னருடன்  அரசியும் உயிர் துறந்தது 
கண்களில் நீரோடை வரவழைத்த அரசியல்!
அந்த அரசியல் இன்று இல்லை....
எந்த காலத்திலும் அரசியல் சொந்தமானால் அன்றி 
பந்துக்களுடன் ஒற்றுமையாக வாழ தோன்றாதே!
தேடுவோம் நல்லரசியல்! 
நாடுவோம் வளமான வாழ்வினை!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

அரசியல் 
இது
பலருக்கு பிழைப்பு
அது 
சிலருக்கு மட்டுமே
பொறுப்பு.
நேற்றைய அரசியல்
புனித கங்கை!
இன்றைய அரசியல்?

சுயநலம் தன்பலமாக
கொண்டு அரசியல்
ஆட்சி செய்யும் போது.
அங்கு
நேர்மை 
வாய்மை
தூய்மை
இந்த
மூன்றும் நம் அரசியலில்
இருக்கிறதா?
என்பதே 
அரசியல் அவசியம்
அதை மனம்பேசும்
மணம் வீசும்
பூக்கடையாக மாற்றுவதும்
எல்லோரும் வெறுக்கும்
சாக்கடையாக மாறவைப்பதும்
அரசியல் செய்பவர்களின் கையிலே!

- கவிச்சித்தர் களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்

**
அரசியல் நலமுரைத்தோர் இருந்தார் அன்று
அரசியல் தினம்பிழைத்தோர் உள்ளார் இன்று

அறங் கூற்றாவதில்லை அரசியல் பிழைத்தோர்க்கு
திறமெனச் சொல்லித் சிரம்மீது வைத்துக் கொண்டாடுவர்

ஊருக்குத் தெரியாமல் ஊழலைச் செய்பவர்
ஊரைக் கொள்ளையடித்துப் பையில் கொள்பவர்

யாருக்கும் இங்கே அரசியல் ஆசை உண்டு
ஆனாலும் சுரண்டத் தெரியாமற் காணமற் போவதுண்டு

அரசியல்வாதிகள் ஆகிப்போனார் தீரா வியாதிகளாய்
அவரைத் தேர்ந்தெடுப்போர் இருக்கின்றார் கோமாளிகளாய்

அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு
ஐந்தாண்டைப் பறிகொடுப்பர் பெரும் இம்சைப்பட்டு

முகத்தில் கரிபூசிக்கொள்ளும் ஒத்திகையாய்
தேர்தலில் பூசிக்கொள்வர் ஒருவிரலில் மையாய்

அரசியல் இங்கே சாக்கடையானது அதில் உழலும் பன்றிகள்
அரசும் ஆட்சியும் அவர்களை நம்பி விட்டமக்கள் ஏமாளிகள்.

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை

**

அழகான வெள்ளுடையில் அகமெல்லாம் காரிருளில்
பழகுதலில் பால்மதியாய் பாய்ச்சலிலோ எரிகதிராய்
உழல்கின்ற அரசியலில் ஒவ்வொன்றும் புதைகுழியாய்
விழலான இந்நிலைமை வீழுந்நாள் எந்நாளோ ?

அறவழியாம் போர்வையிலே அல்லலதை ஆளாமல்
புறவழியில் போயென்றும் புன்மைகளை விதைக்காமல்
சிறந்தவரின் சீர்பெற்றும் சிந்தையின்றி சிதைக்காமல்
மறமனந்தால் அரசியலார் மலரும்நாள் எந்நாளோ ?

பெருந்தலைவர் காமராசர் பேரறிஞர் நம்அண்ணா 
அரும்கக்கன் சீவாபோல் அப்துல் கலாமும்போல்
ஒருவருமா இங்கில்லை ? உண்டுண்டு என்றினிதே
வருகின்ற நாளதுவும் வாய்ப்பதுதான் எந்நாளோ ?

வெள்ளத்தில் அணையாக விதந்தோடும் ஆறாக 
வெள்ளிமலை விழிசிந்தும் வீழ்அருவிப் பெருக்காக
கள்ளில்லா நாடாக்கிக் கனிந்தமனப் பெருக்காக
கொள்ளுமுயர் அரசியல்சீர் கூடும்நாள் எந்நாளோ ?

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

மக்களை ஆளுகின்ற கருவியாகும்
.....மனிதன் படைத்த வழியாகும்
மக்களாட்சியை செதுக்கும் உளியாகும்
.....மனிதனின் கொள்கை மொழியாகும்
அரசாங்கத்தை அளக்கும் அளவுகோல்
.....அதிகாரத்தை எழுதும் எழுதுகோல்
அரசியல் என்னும் மந்திரக்கோல்
.....ஆட்சியை வழிநடத்தும் மந்திரசொல்
உதவிதேடி உன்னிடம் வந்தவருக்கு
.....உன்னால் முடிந்ததைச் செய்துவிடு
பதவியும் தேடிவந்து உன்னை
.....பாரினில் தலைவனாக்கும் இந்தநாடு
சிந்திக்க வைப்பதே அரசியல்புரட்சி
.....சமுதாயத்தில் ஏற்படும் புதுமலர்ச்சி
சிந்தித்தால்தான் புரியும் அரசியல்மாற்றம்
.....சிந்திக்காவிட்டால் நமக்கு ஏமாற்றம்

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

ஆதிகாலம் தொட்டு எம்மை ஆட்டுவிக்கும் அரசியல்
வேதனைக்குள் மக்கள்தன்னை விட்டுவிட்ட அரசியல்.
சாதியென்ற சகதியுள்ளே தாழ்ந்து விட்ட பேயரை
மோதவிட்டி  லாபம்காண முயலுகின்ற அரசியல்
 
கட்சியென்ற பேரில்சேரும் கள்வர்தம்மை ஆட்சியில்
எச்சரிக்கை ஏதுமின்றி ஏற்றிவைக்கும் மக்களை
உச்சநிலை வறுமைக்கேற்றி ஒன்றுமற்ற கையராய்
பிச்சையேற்க வைத்திடும் பெரும்துரோக அரசியல்
 
மதம்பிடித்த பொய்மைதன்னை வாய்மையென்று காட்டியே
நிதம்நிதம் கொலைக்களத்தில் நின்று ஆடும் நீசரை
வதம்புரிந்து உலகநீதி வாழ வைத்திடாமலே
அதர்மமே நிலைக்க வைக்கும் ஆற்றலற்ற அரசியல்

நடிகனுக்கு மிங்குதீய கொடியனுக்கு மரசியல்
நாட்டைவிற்று ஊழல்செய்ய நாடுவோர்க்கு மரசியல்
அடிமைவாழ்வைப் போக்கிமக்கள் அடையவேண்டி விடுதலை,
அரசியல் செய்வோர்க்கு மட்டும் ஆவதொன்று மில்லையே.

- சித்தி கருணானந்தராஜா. 

**
அன்றாட வாழ்வினிலே என்றும் போற்றும்
………..அன்றுவாழ்ந்த அரசியலார் பலரும் உண்டு.!
என்றும்நல் திட்டத்தைக் கொண்டு வந்தார்
………..எதிர்த்துநின்ற கட்சிகளை நாணச் செய்தார்.!
வென்றுவந்த தொகுதிக்குச் செல்லக் கூட
………..வழியில்லை இன்றைக்கு மனமும் இல்லை.!
அன்றுமின்றும் அரசியலில் மாற்ற மில்லை
………..அரசாங்கம் மாறுவதோ மக்கள் கையில்.!

தொண்டுநலம் செய்யவுமே வசதி இல்லை
………..தொண்டர்கள் ஒன்றுகூடும் காலம் இல்லை.!
அண்டைநிலம் ஆற்றுநீரைப் பகிர வில்லை
………..அரசியலும் அதற்காகச் சலிக்க வில்லை.!
துண்டுநில விவசாயி தூங்க வில்லை
………..தோண்டிமூடத் தயாராகும் கடனின் தொல்லை.!
கண்டதெல்லாம் வேதனைதான் மிச்சம் இங்கே
………..கல்விகூட விலையாகும் அவலம் இங்கே.!


இரவுபகல் பாராது உழைப்போம் என்பார்
………..ஏழையரின் கண்ணீரைக் களைவோ மென்பார்.!
அரசியலில் எல்லாமே சகஜம் என்பார்
………..ஆட்சிக்கு வந்தபின்னே பாரும் என்பார்.!
வரவிருக்கும் தேர்தலிலே ஓட்டுப் போட
………..வரிசையிலே நிற்போர்க்குக் குழப்பம் உண்டு.!
அரசியலைப் பேசாத மக்கள் உண்டோ.?
………..அன்றாட நிகழ்விலிது அங்க மன்றோ.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com