அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1

ஆதாயம் தேடாத அரசியல் வேண்டும் அதுவும் தொண்டு செய்வதற்குமான முழு நிலை வேண்டும்
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1

அரசியல்

ஆயிரம் கட்சிகள் பிறந்தாலும்
மறைந்தாலும் ஒற்றுமையாய்
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு
ஒலிவு மறைவின்றி பளிச்சிட்டு
உங்களுக்காகவே நாங்கள் என்ற
இணக்கம் கொள்ளளே அரசியல்

மக்களை சார்ந்தது மக்களை போய்
சேர்ந்திடச் செய்தலே அரசியல்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுதல் இல்லாதிருத்தல்‌ அரசியல்
கொடுப்பதொன்றை மறைப்பது
இரண்டை ஆகாது என்று மரசியல்

உள்ளுக்குள்ளே குத்தல் குடைச்சல்
அதற்கு பெயரில்லை அரசியல்
இடத்திற்கு இடம் நிறம் மாரும்
பச்சோந்து போலில்லை அரசியல்

- வே. சகாய மேரி, திருக்க அரியலூர்

**

தாமரை மலர்ந்தது. அரசியல். சேற்றில்
வாமனன். உலகளந்து. நிமிர்ந்தது போன்று
தாமோதரனால் ஓங்கி உயர்ந்தது பாரதம்
நாமோ , “வாழ்க நமோ ! “ என்றனமே .

அன்றொரு நரேந்திரன் உள்ளம். நிறைத்தான் !
இன்றொரு நரேந்திரன் புண்ணியம் காத்தான் !
என மகிழ்வுற்று பாரத தாயும், “ வாழ்க , வாழ்க “
என வாழ்த்தினள் தவ புதல்வர்களையே .

பாரத அன்னைக்கு. கிரீடம் சூட்டினான்
பாரத முத்தன்ன நம் தலைவன் மோதி
எங்கும் வளர்ச்சி ! எங்கும் மகிழ்ச்சி !
சங்கு முழங்கி ஆனந்த கூத்திடுவோமே .

தங்கும் வளம் என்றும். பொங்கிட
ஓங்கும். புகழ் என்றும் நிலைத்திட
வாழ்க பாரதம். ! வளர்க. பாரதம் !
வாழ்க, வாழ்க ! எம் தாயே !

- ராணி பாலகிருஷ்ணன்

**

சமூகத்தின் வாழ்வாதாரங்களின் மேல் 
அக்கரை கொண்டு சேர வேண்டியதை 
சேர வேண்டியவரிடம் சேர்க்க குறுக்கே
நிற்கும் தடை முடையினை உடைத்து 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே 
சேர்த்திடும் மைய்யமே அரசியலாகும் 
மக்கள் உரிமை காக்கப்பட வரையப்பட்ட 
சாசனங்களில் நிறைவின்மை 
குறைபாட்டினை பாராளுமன்ற துணையோடு 
குறைவை திருத்தி ஷரத்தை மாற்றி 
வேண்டாததை அகற்றி புதிதாக தீட்டி 
மக்களிடம் சேர்ப்பது அரசியல் 
நோக்கர் அரசியல் நிகழ்வுகளை
கவனித்துக் கருத்துக் கூறுபவர் 
கூடும் நியாய ஆலயமே அரசியல் 
கரைபடா கரங்களங்கே தெய்வங்கள் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான் 

**
                          
அன்றைய அரசியல் அடிமைத் தளையொழித்து
அடிப்படை வசதிகளை அனைவரும் பெற்றிடவே
அறவழியில் போராடி அஹிம்சை துணைகொண்டு
உள்ளத்தால் பொய்யாது உத்தம வழிகளிலே
கடைக்கோடி மக்களுமே கண்ணியமுடன் வாழ
தன்னலங் கருதாத தருமமிகு தலைவர்களை 
கொண்டே இலங்கிற்று!கொடுப்போர் தாம்மட்டுமே
தலைவர்களாய் இருந்தார்கள்! தருமத்தைக் காத்தார்கள்!

ஓட்டுக்குப் பணமளித்து ஒட்டுமொத்த மக்களையே
தம்வலையில் வீழவைத்துத் தரணியாள வந்திட்டார்!
ஊழல் கமிஷனென்று ஒவ்வொன்றிலும் பணம் சேர்த்து
இயற்கை வளத்தையெல்லாம் இவர்வாழ்வு சிறப்பதற்கே
அரசியல் ஆயுதத்தை அற்புதமாய்ப் பயன்படுத்தி
நாட்டை அழித்திட்டார்!நலவாழ்வைக் கெடுத்திட்டார்!
மக்கள் விழித்திடணும்! மறுமலர்ச்சி வந்திடணும்!
தப்பைக் குறைத்திடணும்! தரணியை உயர்த்திடணும்!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

காட்டில் திரிந்து வேட்டையு மாடி
கழனி திருத்தி ஊராய்க் கூடி
உழவு புரிந்து உற்பத்தி செய்து
இல்லறம் நடத்தி இன்புற வாழ்ந்து
இனிய மொழியுடன் கல்வி பயின்று
இனிதாய் வாழக் கலைகளும்  கற்று
சீராய் நடக்கச் சிந்தனை செய்து
அறிவு விரித்து ஆற்றல் பெருக்கி
குற்றந் தடுக்கச் சட்டங்கள் இயற்றி
சதுரங்கம் ஆடிடும் ஆட்டம் இதையே
அரசியல் என்பார் அறிந்தவர் பலரும்
அதில் நீதிதுறந்து நெறிகள் தவறி 
ஊழலும் பிழைகளும் செய்திடு வோர்க்கு
அறமல்லாது வேறெவன்  கூற்று?

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

சிறுக விதைத்து
பெருக அறுக்கும்
இயந்திரமாம்,

மண்புழுவை வெறுத்து 
சாக்கடைப் புழுவை வைத்து
மீன் பிடிக்கும்
தூண்டில்;

முன்னோரைப் பழித்து 
இன்னோரைப் புகழ்ந்து
பையை நிரப்பும்
தஞ்சைத் தாலாட்டுகள்;

பாகு செய்த வீட்டில்
பாசானம் செய்யும் 
பங்காளிகள்;

சாதியும் மதமும்
தன் உயர்வுக்கு
மோதவிடும் மேதாவிக்
கூட்டங்கள்.......

- சுழிகை ப.வீரக்குமார்

**

கொள்ளை கோஷ்டிகளாய் களம் புகுந்து
வெள்ளை வேஷ்டிகளை தரிப்பது!
ஏசி காரில் ஊர் சுற்றி - வலம் வந்து 
ஓசி சோறில் உண்டு செரிப்பது!

ராக்கெட் செலவில் அடம்பரமாய்
பாக்கெட் மணிகளை எறிவது!
சட்டசபையில் தூங்கி விழுந்து
சுட்டபூரியாய் வீங்கி  திரிவது

ஊடகம் மெச்சும்படி -சேவை
நாடகம் ஒன்றை அரங்கேற்றுவது
போலி வாக்குறுதியில் வென்று-ஒரு
ஜாலி வாழ்க்கையை கரம்பற்றுவது!

புழுவையும் கல்லையும் சேர்த்து
புழுங்கல் அரிசி போட்டதை தவிர
இந்த அரசியல் என்ன செய்தது எங்களுக்கு?

-அ.அம்பேத் ஜோசப்

**

முன்னோர் வகுத்த
நெறிகளை மறைத்து
சின்னோர் பிரித்த
சிறு வணிகக் கூடாரம்;

உருட்டும் எலியா?
மிரட்டும் பூனையா?
தெரியாமல் திரியும்
விலங்கின சமூகம்;

நற் சிந்தனையுடைய
நல்லோர் தந்ததை
சிற் சிந்தனை கொண்டு

எல்லாம் கெடுக்கும்
காவலனாய் மாற்றும்
அசாத்திய பதவி தரும்
அரசியலால்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

**

பள்ளி வயதில் ஒரு கவிதை போட்டி –
சிறகுகள் மூளைக்குள் படபடக்க எழுதினேன் --
“எழுத்துக்குள் அமிழ்தத்தை கலக்கும் செயலா?
எழுத்திலிருந்து அமுதம் கடையும் செயலா ?
எட்டாக்கனி தான் எனக்கு” – முடித்தேன்.
இரண்டாம் பரிசு எனக்கு -- முதல் பரிசு
தலைமை ஆசிரியரின் தம்பி மகனுக்கு--
கல்லூரியில் முத்தமிழ் “மழை” என்று ஒரே வரியில்
மூழ்கி  எழச்சொன்னார்கள்—
“மரங்களுக்கெல்லாம் உடனுக்குடன்
பச்சை உடை தைத்து வழங்கும்
ஆயத்த ஆடையகம்” – என்றேன்.. இருந்தும்
வெற்றிக்கயிறை சுற்றி சொந்தமாக்கியது
ஆட்சியரின் மகள்.--- --இன்றோ
தொழில் பளுவிக்கிடையில் சொற்கம்பிகளுக்கு முறுக்கேற்றி
கொஞ்சம் மொழிக்கட்டிடத்தில் சேர்த்தேன் –
தமிழ் சங்கம் சொன்னது “ எங்கு தமிழ் படித்தாய் ??
உனக்கு இங்கென்ன வேலை” ??-  புரிந்தது
எல்லாம் மொழிக்குள் புகுந்த அரசியல்  என்று !!

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

அரசியல்தாம் வாழ்க்கையென ஆன பின்பு
----அரசியலே வாழ்க்கையாக ஆன தின்று
அரசியல்தாம் அனைத்திற்கும் முன்றே நின்று
----ஆட்டியிங்கே படைக்கிறது அனைவ ரையும் !
பரம்பொருளின் இசைவின்றி அசைந்தி டாது
----பார்தன்னில் அணுவொன்றும் எனும்க ருத்தாய்
அரசியல்தாம் தனிமனிதன் வீடு நாட்டை
----அதிகாரம் செய்கிறது இந்தி யாவில் !
சாக்கடையாய் அரசியலைச் சிலபேர் சொல்லச்
----சந்தனமாய் அரசியலைச் சிலபேர் சொல்ல
ஆக்கத்தை அழிவுதனைச் செயும்இ றையாய்
----அருங்கத்தி போலவன்றோ ஆன தின்று !
ஆக்கத்தைத் தந்திட்ட காம ராசர்
-----அண்ணாபோல் யார்வருவார் என்று கேட்கும்
ஏக்கத்தை விட்டெழுந்தே எழுச்சி பெற்றால
-----ஏமாற்றும் அரசியலோ நேர்மை யாகும் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

அறநெறியில் பொருள் சேர்த்து
நிறைவான விளைச்சல் செய்து
மறைமொழி வகுத்து
முறை செய்து காத்த அரசு
இறை எனப் போற்றினர் !
மன்னராட்சியில் அது 
அன்றைய அரசியல் !
குறை களைவேன் என
நிறைய வாக்குறுதி அளித்து
திறை பல வசூலித்து
முறை தவறிப் போன அரசு
சிறையான நீதிநெறி !
மக்களாட்சியில் இது
இன்றைய அரசியல் !

- ஜெயா வெங்கட்

**

அன்று 'படி'/இன்று 'குடி' ;
அன்று 'நேரான பாதை'/இன்று 'தள்ளாடுதே போதை'
அன்று பதவி 'கணம்'/இன்று பதவி 'பணம்' ;
அன்று உதவி 'சேவை'/இன்று உதவி 'விளம்பரத்துக்குத்தேவை'

அன்று எளிமை/இன்று பணவலிமை ;
அன்று தேர்தல் நிதி 'மக்கள் பணம்'/இன்று தேர்தல் நிதி 'பாண்டு பத்திரம்'
அன்று மரம்/இன்று கான்கிரீட் கட்டிடம்;
அன்று தண்ணீர் ஆறாக ஓடியது/இன்று தண்ணீர் பாட்டிலுக்குள் அடைபட்டது

இதற்குத்தீர்வுதான் என்ன?(மக்கள் புலம்பல்)
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்!(சிலப்பதிகாரம் சொல்கிறது)
அரசியல்வாதியே அறத்தோடு நடந்துகொள்;
அன்றேல்'ஊழ்வினையுருத்துவந்தூட்டும்'!

- ம.சபரிநாத்,சேலம்

**

அரசியலில் பிழைசெய்தல் ஆகா தென்றே
அன்றுரைத்த கண்ணகியின் காதை சொல்லும்
வரமென்றே இருந்தாலும் வாழ்வில் என்றும்
வழிமாறும் பிழையென்றால் வலிகள் ஆகும்
தரமென்றே வாழ்த்துகின்ற வழியில் சென்று
தன்னுழைப்பைத் தருவதுதான் தொண்டென் றாகும்
கரமென்றும் சிவந்திருக்கும் வள்ளல் போலே
கனிந்துதவும் “அரசியலே உலகை ஆளும்”

நாட்டுமக்கள் உயர்வினிலே நாட்டங் கொள்ளும்
நல்லவர்கள் இனியேனும் தோன்றல் வேண்டும்
ஓட்டுக்காய் பல்காட்டும் கூட்டம் இங்கே
ஒழியட்டும் ஓடட்டும் நாட்டை விட்டே
நோட்டுக்கள் சேர்த்திடத்தான் நேரம் என்றால்
நினைக்காதீர் பொதுச்சேவை வணிகம் அல்ல
ஆட்டங்கள் முடித்துவைக்கும் ஆற்றல் கொண்டோர்
அனைவருமே “அரசியலைத் தூய்மை செய்வோம்”

- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**

விளம்பரத்தின்   விலங்குகளாய்   அரசியல்பி  ழைப்போர், 
        வாழ்நாளும்  வேர்வரையில்  நாட்டினைச்சு  ரண்ட, 
அளவற்ற   வறுமையிலே  மக்களுமே   மாய, 
         ஆள்வோரும்   கோடியாகப்  பணம்சுருட்டிப்  பதுக்க, 
இளங்சிங்கப்  பட்டதாரி   இளைஞரெல்லாம்  நாளும்
         இல்லைவேலை   வாய்ப்பென்று   மாய்கின்றார்   நொந்து;
உளம்வெந்து   விவசாயத்  தொழிலாளி  ஏங்க
        உயருகின்றார்   அரசியலால்   பிழைப்போரு  மின்று! 

நச்சுமரம்   நட்டுவைத்து   மெச்சியது  போதும்;
       நச்சுமர  முட்களுக்கு   முடிச்சூட்டி  நாளும்
நச்சுமர  முட்களாலே   வாழையிலைப்  போல, 
       நாட்டுமக்காள்   கிழிபட்டு   வீழ்ந்ததினி  போதும்;
எச்சமினி  இல்லாமல்  அரசியல்முள்  தம்மை
       எரித்துவிட்டு,  நம்மைநாமே   ஆண்டிடவே  மக்காள்
உச்சத்தைத்   தொடுகின்ற  போர்த்தொடுத்து  நாட்டில்
       அச்சமின்றி  வாழவழிக்  கண்டிடுவோம்  வாரீர்! 

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு

**

செய்பவன் ஒருத்தன்
செய்ததாய் சொல்லிக் கொள்பவன் இன்னொருத்தன்
எவனோ செய்ததால் பயனடைபவன் மூன்றாபவன்
இது தான் கார்ப்பரேட் அரசியல்.

தான் சொல்ல நினைத்ததை
இன்னொருவர் சொன்னதாய் 
சொல்லும் மாமியார் அரசியல்.

இலக்கியத்திலும் சினிமாவிலும்
தொடரும் அரசியல் ...
விருதுகளில் தெரியும்...
அரைகுறை அவலங்களாய்...

மலம் அள்ளும் மனிதர்கள் மாமனிதர்கள்..
இங்கி அரசியல் செய்பவர்..
அற்பர்கள்...
கோமாளிகள்...

- கீதா சங்கர்

**

அரசியல்  இசைக்க வேண்டும் இணக்கமான 
ஒரு இசை... ஆனால்  அரசியலில்  அரங்கேறுவதோ 
தினம் ஒரு நாடகம் இன்று !
அரிசியில் ஆரம்பித்து  வரிசை கட்டி காத்திருக்கு 
அரசியல் மக்கள் மனதை தினம் உரசிப்பார்க்க !
அரிசியில் அரசியல், நதியில்  அரசியல், படிக்கும் 
படிப்பில் அரசியல் , எதில்  இல்லை அரசியல் ?
அரசியல் செய்யவில்லை என்றால் அரசியல் வாதிக்கு 
ஆட்சியில் இடமில்லை ! அரசியல் ஒரு சாக்கடை 
என்றார் ஒருவர் ஒருநாள் ! இன்று அரசியல் ஒரு 
சந்தைக்கடை ! 
வெறும் கல்லையும் வைரக்கல் என்று வாக்கு 
வங்கியில் விற்று தன் வங்கிக்கணக்கில் 
வெட்கமே  இல்லாமல் பணம் சேர்க்கும் 
ஒரு வியாபாரமே இன்றைய அரசியல் !

- கந்தசாமி நடராஜன் 

**
   

ஆதாயம் தேடாத அரசியல் வேண்டும் அதுவும்
    தொண்டு செய்வதற்குமான முழு  நிலை வேண்டும்
அங்கணம் தொண்டுசெய்தவர்களை கேவலமக
    நினைக்கும் நினைப்பு  அதை கைவிடவேண்டும்

தெளிவாகத்தெரிய வேண்டும் ,அதுதான் ஆரோக்கியம்
    சொல்வேறு வினை வேறு தவிர்த்தல் நன்று
அரசியலை திருத்துவதற்கு திரைப்படங்ககள் உதவின
   அந்தநாட்களில் , இந்தநாளில் கதாநாயகர்கள் எல்லாருமே

அரசியலுக்கு வரவேண்டும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை!
   அவர்க்ளுக்கு புரிகிறதோ இல்லையோ அறிக்கைவிடவேண்டும்
அண்ணா சொன்னார் காமராசரை வென்றவர்கலெல்லாம்
   காமராசர் ஆகிவிட முடியாது ! அனைவரும் வரவேற்றோம்
ஆரோக்கியமான அரசியல் கொண்டுவர அனைவரும் முயல்வோம் !      

- கவிஞர் அரங்ககோவிந்தராஜன், இராஜபாளையம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com