கவிதைமணி

கண்ணால் காண்பதும்:   கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

27th Aug 2017 03:04 PM | கவிதைமணி

ADVERTISEMENT
கண்ணாலே காண்பதுவா கடவுள்; இல்லை
  காதாலே கேட்பதுவா வேதம்; பாடும்
பண்ணாலே இசைப்பதுவா கீதம்; போற்றிப்
  பாடுவதால் கிடைப்பதுவா நல்லூழ்; எண்ணும்
எண்ணாலே நீள்வதுவா ஆயுள்; என்றும்
  இல்லாமல் இருப்பதுவா வாழ்வு; நல்ல
கொண்டாட்டம் ஆனதுவா கோவில்; இங்கே
  கோடானு கோடிமனக் கேள்வி யன்றோ!

இணைகின்றார் சுயநலத்தால், எண்ண வில்லை
   இங்கிருக்கும் மக்களினைப் பேண வில்லை
பிணைகின்றார் சுயலாப நோக்கங் கொண்டு
   பேசுகிறார் பித்தலாட்ட ஊழல் கொண்டு
முனைகின்றார் நாடதனை மொத்த மாக
   முழுதாகக் கொள்ளையிடும் ஆசைஂகொண்டு
அணைக்கின்றார் கரங்களுக்குள் கத்தி வைத்தே
   அடடாவோ இவர்நடிப்பு காணப் போமோ

வெள்ளையுடை உடுத்துகின்ற கறுப்புள் ளங்கள்
   வெட்கமின்றிச் சிரிக்கின்ற வினைநெஞ் சங்கள்
அள்ளுதற்கோ இருகைகள் போதா தென்னும்
   ஆசையிலே பலகோடி கொள்ளை கொள்ளும்
கொள்ளையர்கள் நம்பிக்கை மோசஞ் செய்யும்
   கூட்டுக்க ளவாணிகளாய்க் கூடும் கூட்டம்
கள்ளமனங் கொண்டவர்கள் இவரை இங்கே
   கண்ணாலே காண்பதற்கோ படைத்தான் ஏனோ!   
ADVERTISEMENT
ADVERTISEMENT