கவிதைமணி

கடல் பயணம்: பெருவை பார்த்தசாரதி

7th Aug 2017 06:01 PM | கவிதைமணி

ADVERTISEMENT

தெம்பிருந் தாலுடலில்..தேர்கூடத் தனியேயிழுக்கலாம்..
      தெம்புடனுறுதியும் வேணும்..செல்லவே கடல்பயணம்.!
கொம்புபோல சீவிய கட்டுமரமதைக் கடலில் செலுத்த..
     கையிரண்டில் கம்புகொண்டு கடல்நீரைத் தள்ளினால்..
அம்புபோலச் சீறிப்பாயும்...ஆங்கே கடல்வெளியில்.!
     அப்போதே வீசிச் செல்வோம் மீன்பிடிவலையை.!
வெம்பிய மனதுடன்தான் மீன்பிடிக்கச் செல்கிறோம்..
     எம்முயிர் உடைமைக்கே உத்திரவாத மில்லையப்பா.!

ஓடும் மரக்கலம்தான் அதொருவழியேது மில்லாத..
     கடல்பயணம்..வழிதவறிச் சென்றால் கரைசேராது.!
ஆடுகின்ற பாய்மரத்தில் சிலசமயமெம் வாழ்க்கை..
    ஆட்டம்கூட பாதியிலே முடிந்துவிடு மவலமுண்டு.!
ஓடும் ராட்சதலை நடுவேகடும் கடல்பயணமதில்..
     ஓயாது உழைத்தால்தான் ஒருவேளை பசியடங்கும்.!
தேடுகின்ற மீன்களெலாம் ஓரிடத்தில் கிடைத்தாலும்..
      தீராதெம் வாழ்வாதாரப் பிரச்சினை கடலுளவரை.!
 
கப்பலிலே சீறிவரும் சிறீலங்கா கடற்படையது..
     கபடமில்லா மீனவனை அடித்துக் கைதுசெய்யும்.!
தப்பேதும் செய்யாதெங்கள் மீனவ நண்பனை..
     தப்பாமல் படகிலேற்றி பலநாட்கள் சிறைவைக்கும்.!
எப்போதுமெங்கள் கடல் வாழ்வே சூனியம்தான்..
     எதற்குமே எங்களுக் காரும்துணை நிற்பாரில்லை.!
உப்பு நீரின் மேலெங்கள் கடல்பயணம்...அது..
    உண்ணாமல் உறங்காமல் பலநாள்கூட நீடிக்கும்.!

ADVERTISEMENT
ADVERTISEMENT