விவாதமேடை

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை அளிப்பது கள்ளச்சாராய விற்பனையை அரசே ஊக்குவிப்பதாகி விடும் என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில

DIN

 மிகவும் சரியே
 கள்ளச்சாராயம் குடித்து இறந்தோர் குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பது கள்ளச்சாராய விற்பனையை அரசே ஊக்குவிப்பதாகிவிடும் என்கிற கருத்து மிகவும் சரியே. எதிர்பாராமல் நிகழும் விபத்து மற்றும் இயற்கைப் பேரிடரால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை வழங்கலாம். குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்தே சாராயத்தை, அதிலும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது நியாயமா? கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததற்காக அவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பது கூடாது.
 வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
 பேருதவி
 அரசு நிவாரணத்தொகை கொடுப்பது மிகவும் சரியே. பெரும்பாலான மது விரும்பிகள் அளவுக்கு அதிகமாக கள்ளச்சாராயத்தைக்குடித்துவிட்டு வந்து ஒரு பாவமும் அறியாத மனைவி, பிள்ளைகளுடன் சண்டை போட்டு அவர்களுக்கு மிகந்த தொல்லை கொடுக்கின்றனர். கள்ளச்சாராயத்தால் அவர்கள் அகால மரணமடையும்போது அவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்கதியாக நின்று கண்ணீர் வடிக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் அரசு தரும் பத்து லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அவர்களின் மனைவி, மக்கள் வாழ்க்கை நட்ததுவதற்குப் பேருதவி புரியும். அரசு நிவாரணத் தொகை வழங்க கடமைப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 தேவையானது
 அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படுவது சரியான செயலே. இறந்து விடுவோம் என்று தெரிந்து யாரும் கள்ள சாராயத்தை குடிப்பது இல்லை. தற்கொலை செய்து கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். உயிரிழப்பு என்பது எதிர்பாராமல் எப்போதோ நிகழ்வது. குடும்பத்தலைவரையோ, குடும்பத்துக்கு வருவாய் ஈட்டித்தருபவரையோ இழந்து பரிதவிக்கும் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் மிகவும் தேவையானது. முதியோர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும், விதவைகளுக்கும், நலிவடைந்தோருக்கும் உதவித்தொகை வழங்குவது போலஇதுவும் ஒரு வகையில் அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டமே ஆகும். எனவே, அரசின் நடவடிக்கை சரியே.
 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
 கருணைத்தொகை
 நிவாரணத் தொகை வழங்குவது கருணையின் அடிப்படையில் என்பதால், இதனால் கள்ளச்சாராய விற்பனையை அரசே ஊக்குவிப்பதாகி விடும் என்ற கருத்து ஏற்புடையது அல்ல. பிகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. அதே சமயம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கள் உணவுக்கான உரிமை மறுக்கப்படாமல் கள்ளுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டி தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் பிகார் மாநிலத்தைப் பின்பற்றி கள் விற்பனைக்கு அனுமதி வழங்கினால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும்; கள்ளச்சாராய விற்பனையும் தடுக்கப்படும்.
 ஆர். தீனதயாளன், காரமடை.
 விழிப்புணர்வு குழு
 கள்ளச்சாராயத்தைக் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு நிவாரணம் வழங்குவதை கள்ளச்சாராய விற்பனையை அரசு ஆதரிப்பதாகவே கருத முடியும். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய விழிப்புணர்வு குழுவை அரசு அமைக்க வேண்டும். குழுவின் அறிக்கையைப் பெற்று கள்ளச்சாராய விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத் திற்கு நிவாரணத் தொகை கொடுப்பதை நிறுத்திவிட்டு விழிப்புணர்வு குழுக்களுக்கு அரசு நிதியுதவி செய்யலாம்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 ஏற்கவியலாது
 அரசின் மதுக்கடைகள் எல்லா இடங்களிலும் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்காக அரசு பரிதாபப்படுவது ஏன்? தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பதை ஏற்கவியலாது. அரசு பணம் என்பது மக்களின் வரிப்பணமே ஆகும். அதனை நல்ல திட்டங்களுக்கு செலவிட வேண்டியதே அரசின் பணியாகும். மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது. இத்தகைய செயல்பாடுகள் மக்களிடையே அரசின் மீது அதிருப்தியையே உருவாக்கும். இனிமேலாவது அரசு இதுபோன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
 கே. அனந்தநாராயணன்,
 கன்னியாகுமரி.
 விதிமுறைகள்
 கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது குடிப்பதை ஊக்குவிக்கும் செயலாகும். நிவாரணத் தொகை வழங்குவதிலும் எந்தவொரு விதிமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது அரசின் செயல்பாட்டை சந்தேகப்பட வைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு விதிமுறைகளை வகுக்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணிவாய்ப்பு வழங்கலாம். அதுதான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உண்மையான உதவியாகும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 என்ன நியாயம்?
 பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப்பணத்தை குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வாரி வழங்குவது என்ன நியாயம்? அரசு, இப்படி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது ஏற்புடையதல்ல. மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு அரசு பணத்தை செலவிடுவது ஏற்புடையது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உடலையும் கெடுத்துக்கொண்டு, குடும்பத்திற்கும் பலனின்றி, சமூகத்திற்கும் பலனின்றி இறந்துபோவோரின் குடும்பத்திற்கு மக்களின் வரிப்பணத்தை நிவாரணத் தொகையாக வாரி வழங்குவது, அரசு கள்ளச்சாராய விற்பனையை ஊக்குவிப்பதாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
 பா. திருநாவுக்கரசு, சென்னை.
 சன்மானம்
 கள்ளச்சாராயம் குடித்து இறந்ததை எதிர்பாராத சம்பவம் என வரையறுக்க முடியாது. ஏனெனில் விபரீதம் தெரிந்தேதான் குடிவெறி மோகத்தால் கள்ளச்சாராயத்தை நாடிச் சென்று, குடித்து பலியாகின்றனர். கள்ளச்சாராயம் தயாரிப்பதும், விற்பதும், குடிப்பதும் சட்டவிரோதச் செயல் என்றால் இச்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டியதுதான் அரசின் கடமை. அதை விடுத்து, அவர்களுக்கு சன்மானம் தருவது தவறு. குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி, எளிதில் கிடைக்கும் குறைந்த விலை கள்ளச்சாராயத்தை நாடி உயிரை விடும் ஏழை மக்களுக்கு பணத்தாசை காட்டுவது போல நிவாரணத் தொகை அளிப்பது அமையலாம்.
 கே. ராமநாதன், மதுரை.
 காலத்தின் கட்டாயம்
 அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவால் கள்ளச்சாராய விற்பனை நிகழ்ந்து இருக்கும் நிலையில், இந்த மரணத்திற்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து இழப்பீடு வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குற்றவாளிகளை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டியது முக்கியம். இழப்பீட்டுத் தொகையை குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு அதிகாரிகளை பலிகடா ஆக்காமல் குற்றவாளிகளை ஒடுக்க மாவட்டந்தோறும் தனிப்படையை நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 சிவ. கோமதிநாயகம், தென்காசி.
 கடமை
 கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை அளிப்பது கள்ளச்சாராய விற்பனையை அரசே ஊக்குவிப்பதாகி விடும் என்கிற கருத்து தவறு. காரணம் எதுவாக இருந்தாலும் பொதுமக்களின் எதிர்பாராத இழப்பை அரசு கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் துயரத்தை போக்குவதன் ஒரு பகுதிதான் அக்குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அளிப்பது. ஏதாவது ஒரு வகையில் அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காகவே இப்பயெல்லாம் விமர்சனங்கள் எழுகின்றன. மக்கள் நல அரசு தன் கடமையைதான் செய்கிறது. அதில் தவறு காண முடியாது.
 ந. கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
 வாக்குறுதி
 இளவயதில் மதுப்பழக்கத்தால் உடல்நலம் கெட்டு பலியாவோரின் குடும்பம் படும் துயரம் சொல்லி மாளாது. இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி உயிரிழப்பதால், பெண்கள் இளமையிலேயே விதவையாகி, பிள்ளைகளை வளர்ப்பதற்கு, சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். மதுவை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த அரசு அதை ஒழிக்காததோடு, கள்ளச்சாரயத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையும் அளித்து மது விற்பனையை ஊக்குவிக்கிறது. இதனால் புதிதாக ஒரு தலைமுறை மதுவிற்கு அடிமையாகும் நிலை உருவாகும். அரசின் நோக்கம் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக இருக்க வேண்டும்.
 கே.பி. ராஜன், மேட்டுப்பாளையம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT