விவாதமேடை

ஓ. பன்னீர்செல்வமும் டி.டி.வி. தினகரனும் கம்யூனிஸ்ட் கட்சிகள்போல் இணைந்து செயல்படுவர் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில

DIN

 சாத்தியமற்றது
 ஓ. பன்னீர்செல்வமும் டி.டி.வி. தினகரனும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் இணைந்து செயல்படுவார்கள் என்று, அரசியல் அனுபவமிக்க பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. இவர்கள் இருவரும் கம்யூனிஸ்டுகளைப் போல் கொள்கை முரண்பாட்டால் தனித்தனியாகப் பிரிந்தவர்கள் அல்ல. இருவருமே மக்கள் பிரச்னைகளுக்காக, போராடியது கிடையாது. இவர்களின் அரசியல் பின்னணியைப் பொறுத்தவரை, ஒருவர் இடைக்கால முதல்வராய் இருந்தவர், மற்றவர் முன்னாள் முதல்வருக்கு நெருக்கமாக இருந்தவரின் உறவினர். எனவே, இவர்கள் மக்கள் செல்வாக்கைப் பெறுவதோ, இணைந்து செயல்படுவதோ சாத்தியமற்றது.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 தவறு
 தனிப்பட்ட லாப நட்டங்களுக்காக கட்சி எனும் பெயரில் நிறுவனம் நடத்துவோருடன் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒப்பிடுவது தவறு. மக்கள் நலனில் அக்கறையற்ற சுயநலவாதிகள் தனியாக செயல்பட்டாலும், பிறரோடு கூட்டாக இணைந்து செயல்பட்டாலும் மக்கள் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். இவ்விரு அணிகளையும் இணைப்பது எது என்பதை மக்கள் அறிவர். இவ்விரு அணிகளும் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வண்ணம் தங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் அரசியலில் நிலைப்பது குறித்து சிந்திக்கலாம். மக்களின் ஆதரவைவிட சிறந்த செல்வம் வேறேதுமில்லை என இவர்கள் உணர்வது நல்லது.
 த. முருகவேள், விழுப்புரம்.
 நகைப்புக்குரியது
 தென்மாவட்டங்களில் இருக்கும் தங்கள் வாக்குவங்கியை தக்கவைக்கவே இந்த கூட்டணி வியூகம். இருவருக்கும் இனி அ.இ.அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டதால், அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தகுந்த வாய்ப்பைத் தேடுகின்றனர். அதற்கான முன்னோட்டமே இருவரும் கம்யூனிஸ்ட்கள் போன்று செயல்படுவர் என்ற வாதம். இது நகைப்புக்குரியது. செல்வாக்கான பதவிகளை வகிக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர, இருவருக்குமே பெரிய அளவில் கொள்கை எதுவும் இல்லை. மக்கள் நலப்பிரச்னைகளைப்பற்றிய சிந்தனை இல்லாதவர்களை கம்யூனிஸ்டுகளோடு ஒப்பிட்டது பொருத்தமற்றது.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 ஒரே சித்தாந்தம்
 தன்னை நம்பியுள்ள கட்சித் தொண்டர்களை தக்கவைத்துக் கொள்ள ஓ.பி.எஸ். கடுமையாக முயன்று வருகிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் இருவரும் இணைந்து செயல்படுவதில் தவறு ஒன்றுமில்லை. எனவே, அவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் இணைந்து செயல்படுவர் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது சரியானதே. ஒரே சித்தாந்தம் கொண்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என்று குரல் எழுந்துள்ள நிலையில் இவர்கள் இணைந்து செயல்படுவதையும் வரவேற்கலாம். அவர்கள் இணைந்ததை மக்கள் ஏற்றார்களா இல்லையா என்பதை தேர்தல் முடிவு காட்டிவிடும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 ஐயமே
 எடப்பாடி பழனிசாமி நீதிமன்றம் சென்று வெற்றி கண்டிருக்கிறார் எனலாம். ஆனால் வரும் தேர்தல்களில் இது பலனளிக்குமா என்பது ஐயமே. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளைக் காப்பாற்ற தினகரனையும்,அவர் மூல மாக சசிகலாவையும் ஏற்க ஓ.பி.எஸ். தயாராகி விட்டார் என்பதன் எதிரொலிதான் பண்ருட்டி ராமச்சந்திரனின் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன ஒப்பிட்டிருப்பது. யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும்அடுத்த தேர்தல் வந்தால் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரிந்துவிடும். கடந் த தேர்தலில் தோற்ற கட்சியே இன்று இரண்டாகப் பிரிந்து கிடப்பது ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கட்டாயம்
 ஓ. பன்னீர்செல்வம், தற்போது அ.இ.அ.தி.மு.க.விலிருந்து ஓரம் கட்டப்பட்டு, என்ன செய்வதென்று தெரியாத பரிதாபகரமான நிலையில் உள்ளார். கட்சியில் தனதுஅணி பலம் வாய்ந்தது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இழந்த தன் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம். இந்த செயல்பாடுகளுக்கு தன்னுடன் இணைந்து செயல்பட அவருக்கு ஓர் உதவிக்கரம் தேவைப்படுகிறது. அது டி.டி.வி. தினகரனாகவே இருப்பது ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமே. கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதே.
 கே. ராமநாதன், மதுரை.
 தாக்கம்
 இன்றைய நிலையில் அ.இ.அ.தி.மு.க. என்றால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.இ.அ.தி.மு.க. மட்டுமே. மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியும் அதுவே. ஓ. பன்னீர்செல்வமும் டி.டி.வி. தினகரனும் இணைந்து செயல்படுவதால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறமுடியாது. மாநில அரசியலில் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. இன்றைய ஆளும் கட்சிக்கு சரியான போட்டி என்றால் அது எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வே. மற்ற கட்சிகள் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வரக்கூடிய வாக்குகளை வேண்டுமானால் ஓரளவு பிரிக்கலாம். எனவே, பண்ருட்டி ராமச்சந்திரனின் கருத்து தவறானது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 வேடிக்கை
 சித்தாந்தமே இல்லாத இருவர் சித்தாந்த ரீதியாகச் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல இணைந்து செயல்படுவர் என்று மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை. அன்றைக்கு ஓ. பன்னீர்செல்வம் எதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் மேற்கொண்டார் என்பதையும் எதற்காக "தர்ம யுத்தம்' தொடங்கினார் என்பதையும் மக்கள் மறக்கவில்லை. இப்போது அந்த செயல்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக டி.டி.வி. தினகரனுடன் கை கோக்கத் தயாராகிவிட்டார். அரசியல்வாதிகள் மக்கள் மறதியை நம்புகிறார்கள். மக்கள் மறந்துவிட்டார்களா இல்லையா என்பதை தேர்தல் முடிவு காட்டும்.
 முகதி. சுபா, திருநெல்வேலி.
 வேறு வழியில்லை
 ஓ. பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் இணைந்து செயல்படுவர் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது சரிதான். ஏனெனில் தமிழகத்தில் வலிமையான ஆளும் கட்சியாக தி.மு.க.வும் ஓரளவு வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க வும் உள்ளன. ஏனைய கட்சிகள் அனைத்துமே சிறிய அளவிலான வாக்குவங்கியுடன்தான் இருக்கின்றன. எனவே இந்த இருபெரும் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமானால் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது போல் ஓ. பன்னீர்செல்வமும், டி.டி.வி தினகரனும் இணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, அவர்கள் இணைந்து செயல்படுவதை வரவேற்போம்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 நிர்ப்பந்தம்
 அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தை முன்னிலைப்படுத்தியவர்கள் சசிகலாவும் டிடிவி. தினகரனும்தான். ஆனால், ஓ. பன்னீர்செல்வம் ஒரு காலகட்டத்தில் அவர்களை எதிர்த்தே தர்மயுத்தத்தைத் தொடங்கினார். அதே ஓபிஎஸ், இன்று டிடிவி. தினகரோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார். அதிமுக முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் வசம் சென்றுவிட்டதால், வேறு வழியின்றி நிர்ப்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது. இவ்விருவரும் இணைந்து செயல்படுவர் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது சற்றும் பொருத்தமற்றது. இவர்கள் இணைவதால் தமிழக அரசியலில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
 பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
 முரண்பாடு
 அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஓ.பி.எஸ். பல மாதங்களாகக் கூறிக் கொண்டிருந்தாரே தவிர, தொண்டர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய எந்த செயலிலும் இறங்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவருக்கு மக்கள் செல்வாக்கு கூடியது. ஆனால், அதையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளே தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது அதை உதாரணம் காட்டியது முரண்பாடாக உள்ளது. நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடுவதை விட்டுவிட்டு தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முயன்றால் ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 பெரிய சக்தி
 பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது மிகவும் சரியே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவை தொண்டர்கள் முன்பு கொண்டுவந்தவர் டி.டி.வி. தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி அதன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர். ஓ. பன்னீர்செல்வம் ஏற்கெனவே முதல்வர் பதவியில் இருந்து அனுபவம் பெற்றவர். இருவரும் இணைந்தால் அது அதிமுகவின் பெரிய சக்தியாக அமையும். மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்டுகள் போல் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இவர்கள் செயல்பட்டால் மக்களின் அங்கீகாரம் கிடைக்கும். மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் கணிப்பு மிகவும் சரியானதே.
 நா.ஜெயராமன், பரமக்குடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT