விவாதமேடை

ம.தி.மு.க.வில் உள்ள இளைஞர்கள் நலன் கருதி கட்சியை தி.மு.க.வுடன் இணைத்துவிட வேண்டும் என்று அவைத்தலைவர் எஸ். துரைசாமி கூறியிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

உரத்த குரல்
 ம.தி.மு.க.வில் உள்ள இளைஞர்கள் நலன் கருதி கட்சியை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று அவைத்தலைவர் சு. துரைசாமி கூறுவது முற்றிலும் சரியே. ஆனால், இது காலம் கடந்த கருத்துரை. தி.மு.க.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க.வைத் தொடங்கி, செயல்பட்டு வந்த சில ஆண்டுகளில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த போதே அவரது லட்சியம் தோற்றுப் போய்விட்டது. இன்று உரக்கக் குரல் கொடுக்கும் அவைத்தலைவர் அன்றே இது குறித்து முழங்கியிருந்தால் அது கட்சியின் மீதுள்ள அக்கறைக் குரலாக இருந்திருக்கும்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 வருங்காலம்
 தி.மு.க.விலிருந்து ம.தி.மு.க.பிரிந்தது கொள்கை வேறுபாட்டால் அல்ல. இரண்டாம் கட்டத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்ததால்தான். தற்போது தி.மு.க.வில் அன்று இருந்த தலைவர் இன்று இல்லை. ம.தி.மு.க.வும் பிரிந்து வந்த பின் தேர்தல்களில் தனித்து நின்றும், இடது சாரிகளுடன் கூட்டணியாகவும், ஏன் பா.ஜ.க.வுடன்கூட இணைந்து போட்டியிட்டு தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்குவங்கியை இழந்தே வந்துள்ளது. வருங்காலம் இனி அவர்கள் கரங்களில்தான். எனவே, கெளரவம் பார்க்காமல் ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைப்பது நல்லது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 முதிர்ச்சியின்மை
 தி.மு.க. முழுபலத்துடன் ஆட்சியில் உள்ள இன்றைய சூழலில் இணைப்பு தேவையற்றது. கட்சியின் செயற்குழுவில் கூறவேண்டிய ஒரு கருத்தை பொதுவெளியில் கூறியிருப்யது அவைத்தலைவரின் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. மக்கள் நலத்திற்காக தேர்தல் நேரத்தில் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது இயல்பான ஒன்று. அதற்காக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த கட்சியுடன் தனது கட்சியையும் இணைந்து கட்சியைக் காணாமல் போகச் செய்வது சற்றும் விரும்பத்தக்கதல்ல.
 த. முருகவேள், விழுப்புரம்.
 போர்க்கொடி
 முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், தி.மு.க.வில் உருவான வாரிசு அரசியல் பிடிக்காமல் அக்கட்சியிலிருந்து வெளியேறி ம.தி.மு.க. எனும் தனிக்கட்சி கண்டார் வைகோ. இன்று ம.தி.மு.க.வில் உருவாகியுள்ள வாரிசு அரசியல் பிடிக்காம ல் அக்கட்சியின் அவைத்தலைவர் போர்க்கொடி தூக்கி உள்ளார். கட்சித்தலைவர் வைகோவும், அவைத்தலைவர் எஸ். துரைசாமியும் கலந்து பேசியிருக்க வேண்டும். அன்று வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ இன்று வாரிசு அரசியலை ஊக்குவிப்பது சரியா என்று கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால், ம.தி.மு.க. வை தி.மு.க.வோடு இணைத்துவிடலாம் என்று கூறியிருப்பது மாபெரும் தவறு.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 வாக்குவங்கி
 ம.தி.மு.க உருவானபோது, தி.மு.க. நிர்வாகிகள் பலர் வைகோவை நம்பி தி.மு.கவில் இருந்து வெளியேறி ம.தி.மு.க வில் இணைந்தனர். ஆனால், வைகோ ஒரு சில இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக, கட்சியை அடகு வைத்ததால் முக்கிய நிர்வாகிகள் பலரை ம.தி.மு.க இழந்தது. தனது வாக்குவங்கியையும் படிப்படியாக இழந்த நிலையில் இன்று வாரிசு அரசியலில் வந்து நிற்கிறது. ம.தி.மு.க. எப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதோ அப்போது அது தி.மு.க.வில் இணைந்து விட்டது.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 சமரசங்கள்
 அவைத்தலைவரின் கருத்தில் தவறில்லை. வைகோ தி.மு.க.விலிருந்து பிரிந்து ம.தி.மு.க.வை உருவாக்கியபோது பெரும் மக்கள் செல்வாக்கோடு இருந்தார். தி.மு.க.வின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் தங்களை ம.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். வைகோ அந்த ஆதரவைப் பயன்படுத்தி தன்னை ஆளுமை மிக்கத் தலைவராக நிலைநிறுத்திக்கொள்ளத் தவறிவிட்டார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ம.தி.மு.க, வைகோவின் சமரசங்களால் நீர்த்துப்போனது. எனவே, ம.தி.மு.க.வை தி.மு.க.வோடு இணைப்பதில் தவறு இல்லை.
 சோம. உலகநாதன், உச்சிப்புளி.
 எதிரொலி
 அவைத்தலைவரின் கருத்து ஏற்புடையதுதான். எந்த செயல்பாட்டை எதிர்த்து வைகோ தி.மு.க.விலிருந்து விலகி ம.தி.மு.க.வை உருவாக்கினாரோ அந்த செயல்பாடுதான் இப்போது ம.தி.மு.க.வில் நிலவிக்கொண்டிருக்கிறது. தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று கூறி அக்கட்சியிலிருந்து கோபத்தோடு வெளியேறி தனிக்கட்சி கண்டவர் வைகோ. தனது மகனை மறைமுகமாக கட்சிக்குள் நுழைத்து பொறுப்பாளராகவும் ஆக்கிவிட்டார். அதன் எதிரொலிதான் அவைத்தலைவரின் அறிவுரை. அரசியல் கட்சி என்பது சொத்துகளை காப்பதற்காக மட்டுமே என்கிற நிலைப்பாடு ஏற்புடையதல்ல.
 பி. பாலசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம்.
 முரண்பாடு
 தி.மு.க.விலிருந்து பிரிந்து ம.தி.மு.க. தோன்றியதற்கு ஏதாவது கொள்கை ரீதியான முரண்பாடு காரணமாக இருந்ததா? இல்லையே. தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டி அக்கட்சியிலிருந்து வெளியேறி ம.தி.மு.க.வைத் தொடங்கினார் வைகோ. இன்று அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் துரை வைகோ யார்? அவருடைய வாரிசுதானே? வைகோ, தி.மு.க.விலிருந்து வெளியேறியபோது அவருடைய பேச்சாற்றலால் கவரப்பட்ட இளைஞர்கள் ம.தி.மு.க.வில் இணைந்தனர். இப்போது அந்த நிலையும் மாறிவிட்டது.
 ஆர். கனகராஜ், இடிகரை.
 தேவையற்றது
 ஒரு சில கொள்கைகளில் இரு கட்சிளும் ஒத்துப்போகின்றன என்றாலும் இருகட்சி இணைப்பு தேவையற்றது. ம.தி.மு.கவில் உள்ள இளைஞர்கள் தங்கள் சொந்த நலனைக் கருதினால், அவர்களே தி.மு.க.வில் இணைந்துவிடுவார்கள். ம.தி.மு.க.வின் அடிப்படை கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் தங்களது நலனை கருதாமல் அதே கட்சியில் தொடர்ந்து நீடிப்பார்கள். இவர்கள்தான் உண்மையான ம.தி.மு.க. தொண்டர்கள். தி.மு.க.வுடன் இணைவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆகவே அவைத்தலைவரின் கருத்து தவறு.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 ஏமாற்றம்
 இளைஞர்களை தி.மு.க.விலிருந்து ஈர்த்து ம.தி.மு.க.வை உருவாக்கினார் வைகோ. ஆனால், காலப்போக்கில் தனது கொள்கைக்கு முரணாக அவர் செயல்பட்டதால், கட்சியில் குழப்பங்கள் உருவாகவும் காரணமாகிவிட்டார். ஒரு உறுதியான, அரசியல் தலைவரை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அக்கட்சியினர் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி, தங்களின் தாய்க்கழகமாகிய தி.மு.க,விற்குச் சென்றுவிட்டனர். வைகோ தனது பேச்சாற்றலையும், திறமையான செயல்பாடுகளையும் சரியான முறையில் உபயோகப்படுத்திட வேண்டுமானால், ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைத்திட வேண்டும்.
 கே. ராமநாதன், மதுரை.
 நூற்றுக்கு நூறு
 தி.மு.க.வில் தனது வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் கருணாநிதி தனது வாரிசுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்று வைகோ கூறினார். அதனை எதிர்த்துத்தான் அவர் கட்சியிலிருந்து வெளியேறி ம.தி.மு.க.வைத் தொடங்கினார். ஆனால் அதே வைகோ, தனது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களைப் புறக்கணித்து தனது வாரிசை கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு நியமித்தார். நிச்சயமாக இது ஒரு தவறான செயல்பாடுதான். எனவே ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைத்துவிடலாம் என்கிற அவைத்தலைவரின் கருத்து நூற்றுக்கு நூறு சரிதான்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 பொறுப்பு
 ம.தி.மு.க.வில் பொறுப்பில் இருப்பவர்கள் தி.மு.க.வில் இணைந்தால் அவர்களுக்கு பொறுப்பு எதுவும் கிடைக்காது. உறுப்பினராக மட்டுமே இருப்பர். இளைஞர்கள் சுயநலன் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். தி.மு.க.வைவிட ம.தி.மு.க. சிறிய கட்சியாக இருப்பதால் பல இளைஞர்களுக்கு கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து ம.தி.மு.க.விலேயே செயல்படுவதற்குத்தான் விரும்புவார்கள். ஆகவே அவைத்தலைவரின் கருத்து தவறானது; ஏற்கவியலாதது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT