விவாதமேடை

வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதன் மூலம் அதிக நேரம் பணிபுரிந்து அதிக நேரம் ஓய்வு கொடுக்கப்படுவதால் பணித்திறன் அதிகரிக்கும் என்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 ஏற்கத்தக்கதல்ல
 தொழிலாளர்கள் நாள்தோறும் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்வதால் பணித்திறன் அதிகரிக்கும் என்கிற வாதம் ஏற்கத்தக்கதல்ல. தினமும் எட்டு மணி நேர வேலை என்பதுதான் தொழிலாளர்களுக்கு நலன் தரும்; உற்பத்தியையும் சீராக உயர்த்தும். இந்த நடைமுறையை மாற்றுவதால் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்படும். எதிர்ப்பு காரணமாக தற்போது தொழிலாளர்களுக்கு பன்னிரண்டு மணி நேர வேலை என்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதை நிரந்தரமாக நீக்கிவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 மிகவும் தவறு
 தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதன் மூலம் பனித்திறன் அதிகரிக்கும் என்று கருதுவது மிகவும் தவறு. தொழிலாளர்கள் நீண்டநாள் போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது ஏற்புடைய செயல் அல்ல. 12 மணி நேரம் பணிபுரிந்து அதன் பிறகு ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் 12 மணி நேரம் பணி புரிவது என்பது உழைப்பாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தாகும். இப்போது இருப்பது போல் வேலை நேரம் எட்டு மணி நேரமாகவே இருக்க வேண்டும். 12 மணி நேர மசோதாவை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 உத்திகள்
 தொழிலாளர் விருப்பத்தின் பேரில்தான் பன்னிரண்டு மணி நேர வேலை என்று கூறுவதும், இதனால் அவர்களுக்குக் கூடுதல் ஓய்வு கிடைக்கும் என்று கூறுவதும் உழைப்புச் சுரண்டலை மூடி மறைக்கும் உத்திகளாகும். மே தினம் என்றாலே போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலையைத்தான் குறிக்கும். அதைக் கொண்டாடவே முன்னாள் முதல்வர் கருணாநிதி மே தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அன்றைய சட்டப்பேரவை உறுப்பினர் உ.ரா. வரதராஜன் கோரிக்கையை ஏற்று சென்னை நேப்பியர் பூங்காவின் பெயரை மே தின பூங்கா என்று மாற்றினார். மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 அறமன்று
 தொழிலாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணியிலிருந்து 12 மணியாக உயர்த்துவதால் அவர்களின் ஓய்வு நேரம் அதிகரிக்கும் என்று கூறப்படுவது வெறும் மாயை. உலக அளவில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலைத்திட்டத்தைக் காரணமின்றி மாற்றுவது அறமன்று. எட்டு மணி நேர உழைப்புதான் தொழிலாளர்களின் பணித்திறனை அதிகரிக்கும். இதை விடுத்து, நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு என்று மாற்றுவது தொழிலாளர்களின் உடல்நலத்தையும், மனநலத்தையும் கடுமையாக பாதிக்கும். இம்மசோதாவை அரசு நிரந்தரமாகத் திரும்பப் பெறுவதே தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும்.
 என்.ஆர். ஸத்யமூர்த்தி, கோண்டூர்.
 வீண்கனவு
 எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் பிற பணிகள் என்பதுதான் உலகம் முழுக்க உள்ள நடைமுறை. நம் நாட்டிலும் அதே நடைமுறையைப் பின்பற்றி வரும்போது, தேவையின்றி ஏன் இந்தப் புதிய நடைமுறை? இந்தத் திட்டத்தால் பணித்திறன் அதிகரிக்கும் என்பது வீண்கனவு. உலகமே ஏற்று க்கொண்ட தொழிலாளர் உரிமைகளை இழப்பதும் சரியன்று. இப்போது உள்ள எட்டு மனி நேர வேலை நடைமுறையால் சிக்கல் ஏதுமில்லாத நிலையில் இந்த மாற்றம் தேவையற்றது. எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கும் எட்டு மணி நேர வேலை நடைமுறை தொடர்வதே நல்லது!
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 பாதிப்பு
 வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதால் அவர்களின் பணித்திறன் மேம்படாது. மாறாக வெகுவாக பாதிக்கப்படும். தொடர்ந்து 12 மணி நேரம் ஒருவர் பணிபுரிந்தால் நிச்சயம் உடலில் சோர்வும், மனதில் சலிப்பும் உருவாகவே செய்யும். மூளையின் செயல்திறனும் பாதிக்கப்படக்கூடும். தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கு ஏற்றவாறு ஓய்வும் முக்கியமாகும். தொடர்ச்சியான உழைப்பு எவ்வாறு உடல்நலத்தை பாதிக்குமோ அவ்வாறே தொடர்ச்சியான ஓய்வும் உடல்நலத்தை பாதிக்கும். எனவே, 12 மணி நேர வேலை திட்ட முடிவை அரசு நிரந்தரமாகக் கைவிடுவதுதான் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும்.
 எல்.ஆர். சாலமன், மயிலாடுதுறை.
 நிதர்சனம்
 தொழிலாளர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம்தான். அதற்குப் பிறகு அவர்களால் அந்தப் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய இயலாது என்பதே நிதர்சனம். எட்டு மணி நேரம் வேலை என்பதுதான் உலகம் முழுதும் நடைமுறையில் உள்ளது. அந்த நேரத்தை நீட்டித்தால் அவர்களுக்கு வேலையில் ஈடுபாடின்மை ஏற்பட்டுவிடும். இதனால் அவர்களின் பணித்திறன் குறையுமே தவிர நிச்சயமாக அதிகரிக்காது. தொடர்ந்து அதிக நேரம் வேலை பார்த்துவிட்டு, அதிக நேரம் ஓய்வெடுத்தாலும், மீண்டும் பணிக்கு வரும்பொழுது அவர்களுக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டு விடும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 அவமதிப்பு
 உலகம் முழுதும் எட்டு மணி நேர வேலை என்பதே நடைமுறையில் உள்ளது. 12 மணி நேர வேலை என்பது இந்த நடைமுறையைப் போராடிப் பெற்றவர்களை அவமதிக்கும் செயலாகும். இப்போதும் சில வணிக நிறுவனங்களில் எட்டு மணி நேர ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு 12 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு உள்ளது. இந்த நிலையில் 12 மணி நேர வேலை திட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதுதான் நடக்கும். பணித்திறன் நிச்சயம் மேம்படாது. எனவே, இந்த புதிய யோசனையை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது.
 குரு. பழனிசாமி, கோயம்புத்தூர்.
 இயந்திரங்களா?
 பல ஆண்டுகளாக போராடி எட்டு மணி நேரம் வேலை என்பதை நடைமுறையாக்கிய பின் மீண்டும் 12 மணி நேர வேலை நேரம் என்பது சரியல்ல. மனிதர்கள் என்ன இயந்திரங்களா? அவர்களின் உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்குமோ அந்த அளவுக்குத்தான் அவர்களால் பணி செய்ய இயலும். அப்படியிருக்க, உடலுழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவதால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதும் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக கிடைக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். வேலை நேரம் அதிகமாகும் போது தொழிலாளர்களின் பணித்திறன் குறைவதற்கே வாய்ப்புள்ளது.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 சாத்தியமல்ல
 இந்த மசோதா தொழிலாளர் நலனுக்கு எதிரானது. எட்டு மணி நேரமே வேலை என்பதை நிர்ணயிக்க அன்று சிகாகோவில் எத்தனையோ பேர் ரத்தம் சிந்தியுள்ளார்கள். வேலைக்குச் செல்ல பயண நேரம் திரும்ப வீட்டுக்கு வரும் நேரம் பணி நேரம் எல்லாவற்றையும் கணக்கிட்டால் ஒரு தொழிலாளி ஒரு நாளில் 14 மணிநேரம் வேலைக்காக செலவிடுவது சாத்தியமல்ல. எட்டு மணிநேர உழைப்பு என்பதே சரியானதாகும். 12 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் உத்தியாகும். இந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது; ரத்துசெய்யவேண்டும்.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 தியாகம்
 ஒரு தொழிலாளி தொடர்ந்து எட்டு மணி நேரம் பணிபுரிவதே மிகுந்த சிரமமானது. இதில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதால் தொழிலாளியின் பணிச்சுவை கூடுமே தவிர நிச்சயமாகக் குறையாது. அதனால்தான், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, எத்தனையோ பேர் செய்த தியாகத்தால் உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலை என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர்களின் தியாகத்தைப் புறந்தள்ளிவிட்டு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிப்பது கூடாது. எனவே, அரசு இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும்.
 ப. சிவபாதம், சோளிங்கர்.
 கொடுமை
 மே தினம் உருவான நூற்றாண்டில் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாதது. இது சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும். தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்தால் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படையும். ஒரு நாளின் பாதிக்கும் மேற்பட்ட நேரம் வேலை செய்வதால் அவர்கள் ஆரோக்கியம் கெடும். அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடும். உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள எட்டு மணி நேர வேலை என்பதையே தொடர வேண்டும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT