விவாதமேடை

கோயில்களில் யானைகள் வாங்கக்கூடாது என்கிற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

28th Jun 2023 03:48 AM

ADVERTISEMENT

 மிகவும் சரி
 கோயில்களில் யானைகள் வாங்கக்கூடாது என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது மிகவும் சரி. திருவிழா காலத்தில் இறைவனுக்கு முன்பாக வரும் யானையைப் பார்த்து குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் மகிழ்வர். கோயிலில் வளர்க்கப்படும் யானை அந்தந்த கோயில் இறைவன் அல்லது இறைவி பெயராலேயே ஊர்மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் யானைக்குப் பழம் முதலியவற்றைத் தந்து ஆசி பெறுகின்றனர். ஊர் மக்களை மகிழ்விக்கும் கோயில் யானைகளால் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவதில்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை சரியே.
 பா. சிதம்பரநாதன், கருவேலங்குளம்.
 பரிதாபம்
 யானை ஒரு காட்டு விலங்கு. காட்டில்தான் அது மற்ற யானைகளோடு சேர்ந்துகொண்டு சுதந்திரமாக சுற்றித் திரியும். அதனை கோயில்களில் வாங்கி வளர்ப்பது தேவையற்றது. அதற்கான செலவு மிகமிக அதிகம். அந்தத் தொகையில் நலிந்த கோயில்களை புதுப்பிக்கலாம். பல ஊர்களில் கோயில் யானைகளை அவற்றின் பாகன்கள் கடைவீதிக்குக் கூட்டிவந்து பிச்சை எடுக்க வைப்பதைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மனிதர்களுக்கு சுதந்திரம் இருப்பதுபோலவே, யானைகளுக்கும் சுதந்திரம் உள்ளது. அவற்றை சுதந்திரமாக காட்டில் உலவ விடுவதே சரி. கோயில்களில் யானைகள் தேவையில்லை.
 குரு. பழனிசாமி, கோயம்புத்தூர்.
 சுதந்திரம்
 விலங்குகள் இயற்கைச் சூழலில் வளர்வதுதான் நல்லது. அதுவும் யானை காட்டு விலங்கு. காட்டில் கிடைக்கும் சுதந்திரம் அதற்கு நாட்டில் கிடைக்குமா? கோயில்களில் யானைகளை வளர்ப்பதும், ஆண்டுக்கு ஒருமுறை அவற்றுக்குப் புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படுவதும் தேவையற்ற செயல்பாடுகள். கோயில் யானைப் பாகன்கள் யானைகளை வைத்துப் பொருள் ஈட்டுகின்றனர். கோயில் திருவிழாவின்போது, சில யானைகள் மிரண்டு கூட்டத்தில் புகுந்துவிடுகின்றன. அதனால் உயிர்ச்சேதம் கூட ஏற்பட்டுவிடுகிறது. எனவே, கோயிலில் யானை வளர்ப்பது கூடாது. இடைக்காலத் தடை தவறு.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 கனிவு
 கோயில் யானைகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவதில்லை. மிகவும் கனிவோடுதான் பராமரிக்கப்படுகின்றன. அவற்றைப் பராமரிப்பதற்காகவே பாகன்கள் நியமிக்கப்படுகிறார்கள். கோயில்களில் யானை வளர்க்கப்படுவது புதிதாக உருவான வழக்கமல்ல. பழங்காலம் தொட்டே முக்கியமான கோயில்களில் யானை வளர்க்கும் நடைமுறை உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானையை தெய்வமாகவே எண்ணி வழிபடுகிறார்கள். கோயில்களில் யானை இருப்பது திருவிழாக்களுக்கு சிறப்பு சேர்க்கும். அதனால் கோயில்களில் யானை வாங்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதை விலக்கிக்கொள்ள வேண்டும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 பாதுகாப்பு
 ஏற்கெனவே பல கோயில்கள் நிதி நெருக்கடியால் திணறிவருகின்றன. யானையைப் பராமரிக்க விசாலமான இடம் வேண்டும். ஒவ்வொரு நாளும் அதற்கு அதிக தொகை செலவழிக்க வேண்டும். இவற்றையெல்லாம்விட முக்கியம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானையால் துன்பம் நேராமல் கண்காணிப்பது மிகவும் சிரமமான பணி. திருவிழாக் காலங்களில் கோயில் யானைகள் மதம் பிடித்தும், வெடிச்சத்தம் கேட்டு மிரண்டு தறிகெட்டு ஓடி மக்களைத் துன்புறுத்திய நிகழ்வுகள் பல உண்டு. பராமரிப்பதில் உள்ள சிரமம் கருதியானையை கோயில்கள் வாங்கக்கூடாது.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 செலவு அதிகம்
 பொதுவாக கோயில்களில் உள்ள யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. யானைகளுக்காக செய்யப்படும் செலவும் மிக அதிகம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுவதில்லை. கோயில்களில் உள்ள யானைகளால் பக்தர்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. வெளியே அழைத்துச்செல்லப்படும் யானைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றன. பக்தர்கள் கொடுக்கும் உணவுப் பொருள்களால் யானைகளுக்கு நோய்களால் பாதிக்கவும் வாய்ப்பு உண்டாகும். வன
 விலங்கு சட்டத்தின்படி யானைகளை சரணாலயங்களில் பாதுகாப்பதே சிறப்பானது.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 அவசியம்
 கோயில்களில் யானைகள் வாங்கக் கூடாது என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான். மேல் முறையீட்டின் மூலம் இத்தடை நீக்கப்பட வேண்டியது அவசியம். விலங்குகளையும் பறவைகளையும் காப்பதற்காக இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்புச் சட்டம் கோயில் யானைகளை மட்டும் கண்டுகொள்வதில்லை. யானைகள் இருக்க வேண்டிய இடங்களை எல்லாம் மனிதர்கள் ஆக்கிரமித்துவிட்டனர். மனிதர்கள் இருக்கும் இடங்களில் யானைகளைக் கொண்டு வந்து சங்கிலியால் கட்டி கொடுமைப்படுத்துகின்றனர். பறவைகளை கூண்டிற்குள் அடைத்து வைப்பதே குற்றம். எனவே, யானைகளை கோயில்களில் வளர்ப்பது தவறு.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 மகிழ்ச்சி
 கோயில் விழாக்களின்போது அம்பாரியுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள் வருவோர் போவோரை தும்பிக்கையை ஆட்டி வரவேற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மைசூரு தசரா திருவிழாவின்போதும், கேரள மாநில கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின்போதும் யானைகள் தங்களது கம்பீரமான தோற்றத்துடன் முதலில் நடந்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கோயில்களில் யானைகளை வாங்கி வளர்ப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. யானைகள் துன்புறுத்தப்படாமல் பராமரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தால் மட்டுமே போதும்.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 கொடுமை
 காலங்காலமாக உள்ள வழக்கம் என்ற பெயரில் கோயில்களில் யானைகளை வளர்த்துவருகின்றனர். காட்டில் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த யானையைக் கோயிலில் ஒரே இடத்தில் கட்டிவைப்பது கொடுமையானது. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காக அவற்றை பிச்சை கேட்க வைப்பது அதைவிடக் கொடுமை. இது யானையின் இயல்புக்கு மாறானது என்று உயிரியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கோயில்களில் யானைகள் வாங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல.
 உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
 ஏற்புடையதல்ல
 கோயில்களில் யானைகள் வாங்கக்கூடாது என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது சரியே. கோயில்களில் யானைகள் வளர்க்கப்படுவது காலங்காலமாக நடந்து வருவதுதான். கோயில் நிர்வாகத்தினர் அவற்றை அன்போடு பராமரிக்கிறார்கள். சில கோயில்களில் யானைகளுக்கு வழிபாடு செய்யப்படுவதும் உண்டு. பக்தர்களும் யானையைக் கடவுளாகவே பார்க்கிறார்கள். யானைகள் துன்புறுத்தப்பட்டாலோ, முறையாகப் பராமரிக்கப்படாத நிலையிலோ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அதை விடுத்து கோயில்களில் யானைகளை வளர்ப்பதற்கே தடை என்பது ஏற்புடையதல்ல.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 கட்டாயம்
 நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வன விலங்குகளைப் பாதுகாக்கும் தார்மிகக் கடமை அரசுக்கு உள்ளது. தற்போது பெரும்பாலான கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் தகுந்த பராமரிப்பின்றி பல்வேறு துன்பங்களுக்கும் ஆளாகின்றன. யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த அபூர்வ விலங்கை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அதற்கு ஒரே வழி யானைகளை விலங்குகள் சரணாலயத்தில் வைத்துப் பராமரிப்பதுதான். இல்லையேல் அவற்றை காடுகளிலேயே விட்டுவிடுவது நல்லது.
 கே. ராமநாதன், மதுரை.
 பொறுப்பு
 முற்காலத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாமலிருந்ததால் யானையை வாங்கி வைத்துப் பராமரிப்பது எளிதாக இருந்தது. அவற்றைக் குளிப்பாட்ட எல்லா ஊர்களிலும் நீர்நிலைகளும் இருந்தன. இப்போது எல்லாக் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. யானைகளால் பக்தர்களுக்கு எதுவும் இடையூறு ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கோயில் நிர்வாகத்திற்கு உள்ளது. திருவிழா நேரத்தில் யானை மிரண்டு கூட்டத்துக்குள் புகுந்த செய்தியை நாம் ஊடகங்களில் பார்த்தோம். எனவே கோயிலில் யானைகள் வாங்குவது தடை செய்யப்பட வேண்டும்.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT