விவாதமேடை

"கரோனா காலத்தில் இடைக்காலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது என்று தமிழக அரசு கூறுவது ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

19th Jan 2023 02:56 AM

ADVERTISEMENT

நியாயமானது
 கரோனா தீநுண்மி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, தன்னலம் கருதாது இடைக்காலப் பணியாளர்களாக சேவை செய்ய முன்வந்த செவிலியர்களை மனிதாபிமான அடிப்படையில் பணி நிரந்தரம் செய்வதே நியாயமானது. செவிலியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். நோய்த்தொற்று காலத்தில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் நல்கிய செவிலியர்களுக்கு வாழ்வியல் உத்தரவாதம் அளிப்பதே தமிழ்நாடு அரசிற்கு அழகு.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 ஏற்புடையதல்ல
 தமிழக அரசு கூறுவது ஏற்புடையதல்ல. கரோனா காலத்தில் செவிலியர்கள் தங்களது உயிரைத் துச்சமென மதித்து மருத்துவ சேவையாற்றினர். அவர்களில் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. தீநுண்மித் தொற்று குறித்து முழுமையாகத் தெரிந்திடாத நிலையில் தங்கள் உயிருக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலையில் செவிலியர்கள் சிறப்பாகப் பணியாற்றினர். நோய்த்தொற்று காலத்தில் எத்தனையெத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டதற்கு செவிலியர்கள் முக்கியக் காரணம். செவிலியர்களின் சேவையைப் பாராட்டி அப்போது அரசும் நன்றி தெரிவித்தது. எனவே, அவர்களை பணிநிரந்தரம் செய்வதே ஏற்புடையதாகும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 அறம் ஆகாது
 கரோனா காலகட்டத்தில் முன்களிப் பணியாளர்களாக தங்களை முன்னிறுத்தியவர்களில் முதன்மையானவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும்தான். அப்படிப்பட்ட பெருந்தொற்று காலத்தில் தம் உயிரையும் பொருட்படுத்தாது மக்கள்பணி செய்தவர்கள் அவர்கள் என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுதல் என்பது நன்றி மறந்த செலாகிவிடும். அன்று உயிர் காக்கும் தேவதைகளாகத் தெரிந்தவர்களை இன்று தேவையற்றவர்களாக எண்ணுவது அறம் ஆகாது. அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர்களை பணிக்கு அமர்த்தும்போது இவர்களுக்கு முன்னுரிமைஅளிக்க வேண்டும்.
 உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
 கைவிடக் கூடாது
 தமிழக அரசு கூறுவது ஏற்புடையதல்ல. சுகாதாரத் துறையில் செவிலியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. அப்படியிருக்க அப்பணியிடங்களில் கரோனா காலத்தில் அஞ்சாமல் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிய செவிலியர்களை நியமித்து அவர்களை பணிநிரந்தரம் செய்வதுதான் முறை. இக்கட்டான கரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய இந்த செவிலியர்களை அரசு கைவிட்டுவிடக் கூடாது. எந்த ஒரு அரசுத் துறையானாலும் நியமிக்கப்படும் நியமனங்கள் நிரந்தரப் பணியிடங்களாகவே இருக்க வேண்டும்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 அவசியம்
 கரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செவிலியர் பணியில் சேர்ந்தவர்கள் இவர்கள். இது கிட்டத்தட்ட இருநாடுகளுக்கு இடையேயான போர் உச்சகட்டத்தில் இருக்கும்போது, ராணுவத்தில் சேருவதற்கு சமமாகும். கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பலரே கூட நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டிருந்தனர். அத்தகைய காலகட்டத்தில் உயிருக்குத் துணிந்து பணியில் சேர்ந்த இந்த செவிலியர்களை, மனிதாபிமான அடிப்படையில், பணிநிரந்தரம் செய்ய வேண்டியது அவசியம். தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 கருணை
 கரோனா கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் இடைக்காலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க மருத்துவ சேவையை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. ஊதியத்திற்கான பணி என்பதையும் தாண்டி, மிகுந்த அக்கறையோடு பணியாற்றிய இவர்களிடம் அரசு கருணை காட்ட வேண்டும். விதிகளை காரணம் காட்டியோ, வேறு காரணங்களைக் கூறியோ இவர்களை பணி நிரந்தரம் செய்வதைத் தவிர்க்கக் கூடாது. இவர்களை போன்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள்தான் மருத்துவத் துறைக்குத் தேவை. அப்போதுதான் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்கும்.
 மு. அய்யூப் கான், கும்பகோணம்.
 மருத்துவப் பணி
 கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து மக்களுக்கு மருத்துவப் பணியாற்றியவர்கள் செவிலியர்கள். மக்கள் பணியே முக்கியம் என்று எண்ணி இடைக்காலப் பணியில் சேர்ந்தவர்கள் இவர்கள். கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ய, இரவு பகல் பாராமல் பணியாற்றியவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் என்கிற காரணத்தைக் காட்டி பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று அரசு கூறுவது ஏற்புடையதல்ல. அப்போதுபோல் இப்போது நோய்த்தொற்றுப் பரவல் தீவிரமாக இல்லை என்று கூறுவது மனிதாபிமானமற்றதாகும்.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 சரியல்ல
 கரோனா காலகட்டத்தில் இடைக்காலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது என்று அரசு கூறுவது தவறு. கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்வர்களுக்கு மருத்துவப் பணியினை செய்ய மருத்துவர்களே தயங்கிய நிலையில், தங்களது உயிரையும் துச்சமென மதித்து பணியாற்றியவர்கள் இந்த இடைக்காலப் பணியாளர்கள்தான். இவர்களது தன்னலமற்ற சேவையை மட்டும் பெற்றுக் கொண்டு விதிமுறைகளைக் காரணம் காட்டி இவர்களை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது சரியல்ல. விதிகளைத் தளர்த்தி இவர்களைப் பணிநிரந்தரம் செய்வதுதான் அரசுக்குப் பெருமை தரும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 ஏற்புடையதே
 கரோனா காலத்தில் இடைக்காலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செலியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று தமிழக அரசு கூறுவது ஏற்புடையதுதான். ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் பிரசவத்திற்காக ஆறு மாத காலம் விடுப்பில் சென்றால் அந்த பணியிடத்தை நிரப்ப தற்காலிக ஆசிரியையாக ஒருவர் நியமிக்கப்படுவார். விடுப்பில் சென்ற ஆசிரியை தன் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய பின்ன்ர அந்த தற்காலிக ஆசிரியை பணியிலிருந்து விலகிச் செல்லத்தான் வேண்டும். அவர் தனக்கு நிரந்தரப்பணி வேண்டும் என்று கேட்பது முறையல்ல. செவிலியர்களும் இதைப் புரிந்து கொண்டு விலகுவதுதான் சிறந்தது.
 உஷா முத்துராமன், மதுரை.
 சாத்தியமல்ல
 பல்வேறு காலங்களில் அவசரத் தேவைக்காக அரசு தற்காலிகமாக பணியாளர்களை நியமிக்க நேரிடும். இந்த பணியாளர்கள் ஆறு மாதத்திற்கு மட்டுமே முதலில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் தேவைக்கேற்ப நீட்டிப்பு செய்யப்படும். தேவை முடிந்த பின்னர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது வழக்கமான நடைமுறைதான். அவர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பது சாத்தியமல்ல. அரசின் ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற நியமனங்கள் உண்டு. துறையில் உள்ள பணியிடங்களை நிரந்தரம் செய்ய அதற்கென தேர்வு வாரியம் உள்ளது. அதன் மூலமே செய்யவேண்டும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 கண்கூடு
 கரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இடைக்காலப் பணியில் சேர்ந்தவர்கள் இந்த செவிலியர்கள். தங்கள் குடும்பத்தை விட்டு நோயாளிகளுடனே தங்கள் நேரத்தை செலவிட்டவர்கள். மிகவும் கனிவுடன் நோயாளிகளிடம் நடந்துகொண்டனர் என்பது கண்கூடு. கொள்ளை நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் குணமடைந்து வீடு திரும்ப செவிலியர்களின் சேவையே காரணமாகும். அவர்களின் தன்னலமற்ற சேவையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் அங்கீகரிக்கும் விதமாக அரசு அவர்களைப் பணிநிரந்தரம் செய்வதே நியாயமாகும். அரசுக்கு இதனால் பெருமைதான் ஏற்படும்.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 மறக்க முடியுமா?
 கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காலகட்டத்தில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அற்புத சேவை அளித்தவர்கள் இந்த செவிலியர்கள்தான். அவர்களை மறக்க முடியுமா? முந்தைய அரசின் காலத்தில் தற்காலிகப் பணியில் அமர்த்திய காரணத்திற்காக அவர்களுக்குப் பணிநிரந்தரம் செய்ய மறுப்பது தவறு. மீண்டும் கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டால் இதே செவிலியர்கள்தான் கைகொடுக்கப் போகிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தில் அரும் பணியாற்றியவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம்.
 கே. ராமநாதன், மதுரை.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT