விவாதமேடை

"ஆதார் அட்டை போல தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

ஏற்புடையதல்ல
இத் திட்டம் ஏற்புடையதல்ல. தமிழ்நாடு உட்பட அகில இந்தியா முழுவதும் செல்லுபடியாகக்கூடிய, ஆதார் அட்டை திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. மேலும், அஞ்சல் அலுவலகம் மூலம் தனிநபர்கள் தங்கள் இருப்பிட முகவரி அடையாள அட்டை பெற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையும் உள்ளது. அப்படியிருக்க எதற்காகத் தமிழகத்தில் உள்ளவர்களுக்குத் தனியாக இன்னொரு அடையாள அட்டை? இது தமிழகத்தைத் தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்திவிடும். வளர்ச்சிப் பணிகளுக்கே நிதி ஆதாரம் இல்லாமல் அரசு திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த அடையாள அட்டைத் திட்டம் தேவையில்லை.
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
ஆவணம்
இத்திட்டம் ஏற்புடையதே. நிரந்தரமாக தமிழகத்தில் வசிப்பவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி அவர்களுக்கெனதனி அடையாள அட்டை தருவதை தவறென்று கூற முடியாது. மேலும் அவ்வப்போது அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்ட உதவிகள் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு சென்று சேரவேண்டும். சில வருடங்கள் தமிழகத்தில் வசித்துவிட்டு சிலர் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிடுகின்றனர். ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இவற்றோடு தனி அடையாள அட்டையும் இருப்பது கூடுதல் ஆவணமே.
உ. இராசமாணிக்கம், கடலூர்.
குழப்பம்
ஏற்கெனவே அட்டைகளின் எண்ணிக்கைப் பெருகி வரும் நிலையில் தமிழகத்தில் வசிப்பவர்க்குத் தனிஅடையாள அட் டை என அறிவித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. இனி மாவட்ட அட்டை, ஊர்அட்டை, வீதி அட்டை, வீட்டு அட்டை எனப் பெருகிக்கொண்டேபோனால் அட்டைகளைப் பராமரிப்பது சிரமமாகிப் போகும். அரசு மக்களிடத்தில் நம்பிக்கை இழந்ததால் இப்படி அட்டைமேல் அட்டை கொண்டுவருகிறதா? ஒருவர் தமிழ்நாட்டுக் குடிமகன் என்பதை நிரூபிக்க குடும்ப அட்டை ஒன்றே போதுமானது. ஏற்கெனவே, அட்டைகளால் குழம்பிப் போயிருக்கும் மக்களை அரசு மேலும் குழப்பாமல் இருப்பது நல்லது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
அறிவுடைமையல்ல
ஏற்கெனவே நம்முடைய கைரேகை மற்றும் விழித்திரை ஆகியவற்றைப் பதிவு செய்து நமக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அனைத்து எண்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை அவசியமற்றது. ஒருவேளை தமிழக மக்களைப் பற்றிய தரவுகள் தேவைப்படும் பட்சத்தில் அதனைஆதார் அட்டை வழங்கும் அமைப்பிடமிருந்து தமிழக அரசு பெற்றுக்கொள்ளலாம். மீண்டும் ஆதார் அட்டை எடுப்பது போன்று அடையாளச் சான்றுக்காக நேரத்தைச் செலவிடுவது அறிவுடைமையல்ல. இத்திட்டம் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
நல்ல நோக்கம்
தரவுகள் அடிப்படையில் தேவையுள்ளவர்களை இனம்கண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினால் உரியவர்களுக்கு உதவிகள் சென்றுசேர்வதை உறுதிப்படுத்தமுடியும்; அரசின் உதவிகள் தேவைப்படாதவர்களுக்கு சென்றுசேர்வதை தடைசெய்யவும் முடியும். நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு நிமிரவும் முடியும். தற்போதுள்ள ஆதார்எண் தரவுகள் உரிய திட்டம் வகுக்க போதுமானவை அல்ல. எனவே அரசின் நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு அனைத்துத் தரப்பினரும் உரிய ஒத்துழைப்பை நல்க வேண்டும். இத்திட்டம் மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் முன்னேற்றத்திற்கும்அவசியமானது.
த. முருகவேள், விழுப்புரம்.
தேவையற்றது
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மத்திய அரசால் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு செயல்பாடுகளுக்கும் அடிப்படைத் தேவையாக ஆதார் அட்டைப் பயன்பட்டுவரும் நிலையில் மற்றுமொரு அடையாள தேவையற்றது. மக்கள் அடையாள அட்டையை உருவாக்கி, அதன் மூலம் செயல்படுத்த உத்தேசித்திருக்கும் திட்டங்களை தற்போது உள்ள ஆதார் அட்டை மூலமே நடைமுறைப்படுத்தலாமே! மாநில அரசின் தனி அடையாள அட்டைத் திட்டம், தேவையற்ற குழப்பங்களுக்கும், நடைமுறைச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்பதே
நிதர்சனம்.
கே. ராமநாதன், மதுரை.
வரவேற்புக்குரியது
ஆதார் அட்டை போல தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் அதிக அளவில் வடமாநிலத்தவர் குடியேறி வருகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டவரைப் போலவே அரசின் சலுகைகளைப் பெற ஆரம்பித்து விட்னர். இது நம் மாநில மக்களின் நலனை பாதிக்கும் செயலாகும். எனவே வெளிமாநிலத்தவர்களை அடையாளம் காண தனி அடையாள அட்டை மிகவும் உதவும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்பதால் அரசின் நலத்திட்டங்களை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே பெறுவார்கள் என்பது உறுதியாகும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
மன உளைச்சல்
ஆதார் அட்டை போல தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை திட்டம் எதற்காக என்று புரியவில்லை. எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு அட்டையின் பெயரை அறிவிப்பது, பிறகு அந்த அட்டையின் எண்ணை குடும்ப அட்டையுடன் இணை, மின்னட்டையுடன் இணை, வங்கிக் கணக்குடன் இணை என்றெல்லாம் வற்புறுத்துவதால் மக்கள் அடிக்கடி அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஒரு மனிதனின் அடையாளமாக பல்வேறு ஆவணங்கள் வந்த பிறகும் மீண்டும் மீண்டும் புதிய புதிய ஆவணங்களை உருவாக்கி வருவது சாமானிய மக்களின் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
மா. பழனி, தருமபுரி.
விபரீத முடிவு
மத்திய அரசின் ஆதார் அட்டை போல தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கத் திட்டமிட்டிருக்கும் தமிழக அரசின் செயல்பாடு வியப்பளிக்கிறது. ஒரு குடிமகனுக்கு இரண்டு அடையாள அட்டைகள் என்பது வீண் குழப்பத்தையே ஏற்படுத்தும். தமிழக அரசின் திட்டப் பயன்களுக்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல்? எதற்கு இந்த வேண்டாத வேலையும் வெட்டிச் செலவும்? தமிழகம் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது? இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ஆதார் அட்டை போதுமே. தமிழக அரசு இந்த விபரீத முடிவைக் கைவிடுவது நாட்டுக்கு நல்லது.
முகதி. சுபா, திருநெல்வேலி.
கணக்கெடுப்பு
இத்திட்டம் ஏற்புடையதே. மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் உண்மையான பயனாளிகளுக்குச் சென்றடைய இத்திட்டம் உதவும். எடுத்துக்காட்டாக, பொங்கல் தொகுப்பு, மழைவெள்ள நிவாரணம் போன்றவை சரியான கணக்கெடுப்பு இல்லாததால் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனால் பெரும் செலவு ஏற்படுகிறது. தமிழக மக்களுக்கு தனி எண் இருந்தால் உரியவர்களுக்கு மட்டும் அரசின் உதவிகள் சென்று சேரும். இந்த அடையாள அட்டை வழங்குவதன் மூலமாக வேறு பல தகவல்களையும் பெற முடியும். மேலும், பிற மாநிலத்தவர் இங்கு குடியேறுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அவர்கள் யார் யார் என கண்டறியவும் இது பயன்படும்.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
சிக்கல்கள்
தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வீம்புக்கு செயல்படுவது போல உள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை பயன்பாட்டில் உள்ளது. அதனைப் பயன்படுத்தி பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் தனி அட்டையை அறிமுகப்படுத்தினால் அதனால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். மேலும் நம் மாநிலத்திற்கு என தனி அடையாள அட்டை வழங்குவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் செலவுகள் அனைத்தும் தேவையற்ற வீண் செலவே. இதனால் பல குழப்பங்கள் ஏற்படத்தான் வாய்ப்பு உள்ளது.
அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
அவசியம்
மத்திய அரசு மானிய சலுகைகள் மக்களை நேரடியாக சென்று அடைவதற்கு ஆதார் அட்டை மத்திய அரசுக்கு தேவைப்படுவது போல மாநில அரசு மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்று அடைய மாநில மக்களுக்கு தனி அடையாள அட்டை அவசியம். தவறுகளையும் ஊழல்களையும் இதன் மூலம் களைய முடியும். தமிழகம் பிற மாநிலத்தவர்கள் வந்து அண்டிப் பிழைக்கும் மாநிலமாக வளர்ந்து விட்ட நிலையில் நம் மாநில மக்களுக்காக அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் பிற மாநிலத்தவர்கள் பெற்று பயனடைவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
தி. சேகர், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

உலக நடுக்குவாத விழிப்புணா்வு நாள் நிகழ்வு

1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

SCROLL FOR NEXT