விவாதமேடை

"ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய முதுநிலை மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்திருப்பது ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 நியாயமற்றது
 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய முதுநிலை மருத்துவர்கள்மறுப்பு தெரிவிப்பது சற்றும் நியாயமற்றது. கிராம மக்களின் ஆரோக்கியம்தான் ஒரு நாட்டின் ஆரோக்கியம் ஆகும். மக்களின் உயிர் காக்கும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், இந்த இடத்தில் பணிபுரிவோம், இந்த இடத்தில் பணிபுரிய மாட்டோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. உயர்தர மருத்துவ சேவை, கிராமப்புற மக்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன்தான் முதுநிலை மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய வேண்டும் என்று அரசு வற்புறுத்துகிறது.
 கே. விஸ்வநாதன், கோயம்புத்தூர்.
 நோக்கம்
 முதுநிலை மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. மருத்துவப் படிப்பில் சேரும்போது கிராமப்புறங்களில் பணிபுரிய மாட்டேன் என்று கூறியிருப்பார்களா? அனுபவம் மிக்க முதுநிலை மருத்துவர்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவம் கிடைத்தால்தான் மக்களுக்கு நன்மை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதுநிலை மருத்துவர்கள் பணியாற்றினால் மேம்பட்ட சிகிச்சை ஏழை மக்களுக்கு கிடைத்து அவர்கள் நகர்ப்புற மருத்துவமனைகளை நாடி வருவது கணிசமாகக் குறையும். ஏழை மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
 உ. இராசமாணிக்கம், ஜோதி நகர்.
 கடமை
 அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் கிராமப்புறங்களில்தான் அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு தரமான மருத்துவத்தை வழங்குவது அரசின் கடமையாகும். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வகை மருந்துகளும், மருத்துவக் கருவிகளும் பெரும்பாலும் இருப்பதில்லை. குறிப்பாக நாய்க்கடிக்கான மருந்து, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுப்பதற்கான வசதிகள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை இருப்பதில்லை. அதனால்தான், முதுநிலை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மறுக்கின்றனர். அங்கெல்லாம் அந்த வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 கண்கூடு
 முதுநிலை மருத்துவர்கள் மறுப்பு தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அனுபவத்திற்கும் நகர்ப்புற மருத்துவமனைகளில் பணிபுரிவதுதான் நல்லது. அப்போதுதான் அவர்கள் நவீன மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தி பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். அவர்களும் மேலும் மேலும் அனுபவம் பெறவும் முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகளோ, நவீன மருத்துவக் கருவிகளோ
 இருப்பதில்லை என்பது கண்கூடு. எனவே, அங்கெல்லாம் மருத்துவப் படிப்பு முடித்து வரும் இளம் மருத்துவர்களை பணியில் அமர்த்தலாம்.
 கலைப்பித்தன், கடலூர்.
 எதிர்மறை விளைவு
 முதுநிலை மருத்துவர்களை கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அரசு எதிர்பார்ப்பதற்கு மாறாக எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இலநிலை மருத்துவர்களின் பொறுப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒப்படைத்து அவற்றின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் முதுநிலை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகை தருவதற்கும் ஏற்பாடு செய்யலாம். முதுநிலை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று இளநிலை மருத்துவர்கள் அங்கு பணியாற்றுவதே சிறந்தது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 மனிதநேயம்
 மருத்துவப் படிப்பில் இளநிலை, முதுநிலை என வேறுபாடு இருந்தாலும் மக்களின் பிணி நீக்குவதில் பாகுபாடு காட்டாத உயரிய உள்ளத்தினர் அவர்கள். மருத்துவப் படிப்பிற்காக அரசும் வேண்டிய நிதிவுதவியை வழங்கி வருகிறது. இத்தகைய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் மறுப்புத் தெரிவிப்பது மனிதநேயத்திற்குப் புறம்பானது. இவர்களுக்குத்தான் மருத்துவம் பார்ப்பேன், இவர்களுக்கு மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று கூறுவது அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதாகும். மனித உயிர்கள் அவ்வளவு மலினமானதல்ல.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 நல்ல வாய்ப்பு
 கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் முழுமையாக சென்று சேரவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். பயிற்சியும் அனுபவமும் பெற்ற முதுநிலை மருத்துவர்கள், நகர்ப்புற மருத்துவமனைகளில் பணிபுரிவதைவிட கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தால் அவர்களை கிராமப்புற ஏழை எளிய மக்கள் தெய்வமாகவே பார்ப்பார்கள். அவர்களுக்கும் மன நிறைவு கிட்டும். முதுநிலை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவதை ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையாற்றுவதற்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பாக எண்ண வேண்டும்.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 துரோகம்
 முதுநிலை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மறுப்பு தெரிவிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏழைகளுக்கும் சாமானிய மக்களுக்கும் மறுக்கப்படும் மருத்துவ சேவை நாட்டிற்கு செய்யப்படும் துரோகம் ஆகும். மருத்துவம் என்பது தொழில் அல்ல. சேவை. மக்களின் வரிப்பணத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் அம்மக்களுக்கு சேவை செய்ய மறுப்பது மன்னிக்க முடியாத குற்றம். அரசு முதுநிலை மருத்துவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்து தந்து அவர்களை அங்கு பணிபுரியச் செய்ய வேண்டும்.
 த. முருகவேள், விழுப்புரம்.
 ஏற்புடையது
 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய முதுநிலை மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்திருப்பது ஏற்புடையதுதான். இங்கு பணிபுரிய புதிதாக மருத்துவம் படித்து வந்திருப்பவர்களை பணி நியமனம் செய்யலாம். இதனால் புதியவர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் அனுபவம் கிடைக்கும். முதுநிலை மருத்துவர்கள் நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் பணியாற்றுவதன் மூலம் தான் அவர்களின் சேவை மக்களுக்கு முழுமையாக கிடைக்கும். கல்வித் தகுதியுடன் அனுபவ அறிவும் பெற்ற முதுநிலை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவது பலன் தராது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 புனிதமான தொழில்
 முதுநிலை மருத்துவர்கள் இப்படி சொல்வது நியாயமே இல்லை. பள்ளிக் குழந்தைகள் கூட தாங்கள் டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவுக்கு மக்களால் விரும்பக்கூடிய தொழில் மருத்துவத் தொழில். மருத்துவர்கள், நாட்டு மக்களால் போற்றப்படும் நிலையில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புனிதமான தொழிலை செய்யும் ஒருவர் நான் இங்கு பணி புரிய மாட்டேன் அங்குதான் பணி புரிவேன் என்று சொல்வது சரியல்ல. குழந்தைகள் அடம் பிடிப்பது போல மருத்துவர்கள் நடந்துகொள்ளக் கூடாது. மக்களின் உயிரை காப்பது மருத்துவர்களின் கடமை, அது எந்த இடமாக இருந்தாலும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 அவசியம்
 முதுநிலை மருத்துவர்கள் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்த காலத்திற்காவது பணிபுரிய வேண்டும். அது அவர்களுக்கு மன நிறைவை அளிப்பதோடு, கிராமப்புறத்தில் மட்டுமே காணப்படும் சில நோய்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடியும். கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சேவை அவசியம் தேவை. முதுநிலை மருத்துவர்கள் அனுபவம் உள்ளவர்கள். அதிகம் படித்தவர்கள். அவர்களிடமிருந்து சிக்கலான நோய்களுக்கும் சரியான மருத்துவம் கிடைக்கும். எனவே முதுநிலை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய வேண்டியது அவசியம்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 தேச சேவை
 முதுநிலை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்து சேவை அளிப்பதுதான் உண்மையான தேச சேவையாகும். அறியாமை மிகுந்திருக்கும் கிராமப்புற மக்களிடையே முதுநிலை மருத்துவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் நோய்கள்குறித்தும் தடுப்பு முறைகள்குறித்தும் சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும். அவர்களது அனுபவ அறிவும் விரிவடையும். அது பின்னாளில் அவர்களுக்குக் கைகொடுக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதால் கிராமப்புறங்களுக்கு சென்று வருவதிலும் பிரச்னை ஏற்படாது.
 முகதி. சுபா, திருநெல்வேலி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT