விவாதமேடை

"தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அரசு விதித்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சுகாதாரக் கேடு
 வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் வந்து பணிபுரிய ஆரம்பித்ததால் ஏற்பட்ட தீமைகளில் முக்கியமானது குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாடு. இவை விலைகுறைந்த போதைப்பொருளாக இருப்பதால் பெரும்பாலோர் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டனர். கனரக வாகன ஓட்டிகள் இந்தப் புகையிலைப் பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதும் பல நேரங்களில் விபத்துகளுக்குக் காரணமாகிறது. மேலும், இவற்றைப் பயன்படுத்துவோர், கண்ட இடங்களிலும் எச்சிலைத் துப்பி வைப்பது பொது சுகாதாரத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கிறது.
 ஆர். ராஜாராமன், பட்டுக்கோட்டை.
 வேதனை
 இது சரியான முடிவல்ல. தமிழகத் தொழிலாளர்கள் ஏற்கெனவே, மது எனும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் கணிசமான பகுதியை டாஸ்மாக் நடத்துபவர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியைத்தான் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த நிலையில் குட்கா, பான் மசாலாவுக்கும் தடை இல்லா நிலை ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் செலவு அதிகரிக்கும்; உடல்நலமும் விரைவில் கெடும். இப்படிப்பட்ட சமூக சீர்கேட்டுக்கு நீதிமன்றமும் துணைபோவதுதான் வேதனையளிப்பதாக உள்ளது. உயர்நீதிமன்றம் தடையை ரத்து செய்தது தவறு.
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 கண்கூடு
 புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் ஏராளமாக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது கண்கூடு. பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருப்பது புகையிலைப் பொருள்கள்தான். புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாக புகையிலைப் பொருள் பயன்பாடு இருப்பது மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அரசு புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்தது. தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது என்பதே உண்மை.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 புரியாத புதிர்
 ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளால் சீரழிந்து போயிருக்கும் நமது மாநிலத்தின் நடுத்தர வர்க்க குடும்பங்கள் இன்னும் இழிநிலைக்கு போவதற்கு இந்த நீதிமன்ற ரத்து உத்தரவு வழிவகுக்கும். எத்தனையோ வழக்குகளில் தானே முன்வந்து சமுதாய நலனுக்காக வழக்கு பதிவு செய்யும் நீதிமன்றம், கண்முன்னே தெரிகின்ற இதுபோன்ற மோசமான சமூகச் சூழலை மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து இருப்பது புரியாத புதிராக உள்ளது. அதிலும் குட்கா, பான் மசாலா போன்றவற்றை நுகர்வது பெரும்பாலும் மாணவர்கள்தான். இந்த தடைநீக்கம் சமுதாயத்தை மோசமான நிலைக்கு இட்டு செல்லும்.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 நிரந்தரத் தீர்வு
 அரசு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது மனிதநேய நோக்கில் சரியல்ல. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தில் புகையிலை உ ணவுப்பொருளாகச் சுட்டப்படவில்லை என்று காரணம் கூறி ரத்து செய்துள்ளது கவலைக்குரியது. இனி இப்பொருட்கள் வெளிப்படையாக விற்கும் போக்கு அதிகரித்தால் இளையோரின் வாழ்வியல் சிதைய வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்ற ரத்து ஆணைக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதன் மூலமும், சட்ட ஓட்டைகளைத் திருத்துவதின் மூலமும் மக்களின் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காணலாம்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 சரியன்று
 அரசு விதித்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது சரியன்று. ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சில வழ்க்குகளைப் பதிவு செய்கிறது. குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்திக் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் கெட்டுப் போவது பற்றிய செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உயர்நீதிமன்றம் இதனை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. குட்கா, பான் மசாலாப் பொருள்களுக்கு தடை விதித்த மாநில அரசை நீதிமன்றம் பாராட்டியிருக்க வேண்டும்.
 வளவ. துரையன், கடலூர்.
 ஆதாரங்கள்
 அரசு விதித்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது சரிதான். அவை போதைப்பொருள்கள் என்பதற்கான சரியான ஆதாரங்கள் இருக்க வேண்டும். புகையிலைப் பொருள்களை போதைப் பொருள்கள் விற்பனைத் தடைச்சட்டத்தில் இதுவரை கொண்டு வரப்படவில்லை என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அதற்கானத் தடையை சட்டப்பேரவையில் தீர்மானமாகக் கொண்டு வந்து அதை சட்டமாக்கினால்தான் புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க முடியும். அதுவரை வியாபாரிகள் புகையிலைப் பொருள்களை விற்றுக்கொண்டுதான் இருப்பார்கள்.
 க. கருணாமூர்த்தி, செவிலிமேடு.
 குழப்பம்
 உணவுப் பொருள்கள் கட்டுப்பாட்டின் கீழ் தடை விதித்திருப்பது சரியல்ல என்று உயர்நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது. இது வழக்குமன்றத்தில் வாதாடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பம். அதைக் குறிப்பிட்டு நீதிமன்றம் அரசை அறிவுறுத்தியிருக்லாம். அதை விடுத்து அரசு விதித்த தடையை நீக்கி மீண்டும் போதைபொருள் நடமாட்டம் உருவாக உதவி இருக்கும் நீதிமன்றத்தின் செயல் வருந்ததக்கது. இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் விளையாடும் போதைப்பொருள்களின் நடமாட்டத்தை மீண்டும் உயிர் பெறச் செய்த செயல் நல்லதல்ல. அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 எச்சரிக்கை
 தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்களை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவோரின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்தப் பழக்கம் புற்றுநோய், மனநோய் போன்ற கொடிய நோய்களுக்குக்கூட வித்திடும் என்ற மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு இந்தப் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்தது. இவை உணவுப் பொருள்கள் பட்டியலில் வராததால் மாநில அரசின் தடை உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கிறது.
 கே. ராமநாதன், மதுரை.
 நல்ல நோக்கம்
 உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது சரியான நடவடிக்கையே. எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே, போதைப்பொருள்களை எவரும் நாடமாட்டார்கள். போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் வாழ்க்கை சீரழிந்து போகும் என்கிற உண்மையை உணர்ந்தவர்கள் இலவசமாகக் கொடுத்தால்கூட போதைப்பொருள்களை நாடிச் செல்ல மாட்டார்கள். அரசின் நோக்கம் நல்ல நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் நீதிமன்றம் தடையை விலக்கினாலும் மக்கள் மனத்தடையோடு இருந்தால் போதும். அது ஒன்றுதான் போதைப்பொருள் ஒழிப்புக்கான சிறந்த வழியாக இருக்கும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 தடை தேவை
 தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அரசு விதித்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது தவறான முன்னுதாரணம் ஆகும். போதைப்பொருள் பயன்பாடு மக்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இவை தடைசெய்யப்பட்டிருந்போதே ஏராளமானோர் இதற்கு அடிமையாகி உள்ளனர். இதற்கான தடையை நீக்கி, மற்ற பொருள்களைப் போல விற்பனை செய்யத் தொடங்கி விட்டால் சிறுவர்கள், இளைஞர்கள் வாழ்வு சீரழிவது உறுதி. இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றக்கூடிய போதைப்பொருள்கள் கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 துரதிருஷ்டவசமானது
 தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அரசு விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது. போதைப்பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நிலைமாறி இன்று எங்கும் பரவி வருவதால்தான் அரசு அதைத் தடைசெய்ய சட்டம்கொண்டு வந்துள்ளது. அதற்குரிய சட்டத்தையே காரணம் காட்டி நீதிமன்றம் தடையை ரத்து செய்திருப்பது, அதை வணிகமாகக் கொண்டவர்களை ஊக்குவிப்பதாகிவிடும். அரசு இக்குற்றச் செயலில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத்திருத்தம் செய்யவேண்டும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT