விவாதமேடை

"உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சரியானதே
 உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுவதே மிகவும் சரியே. அரசியல் சாசனத்தில் நீதிமன்றங்களால் திருத்தம் செய்ய இயலாது. அதை நாடாளுமன்றம் மட்டுமே செய்ய முடியும். உச்சநீதிமன்றம் தனது எல்லையைத்தாண்டி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது சரியானதல்ல. நீதிபதிகளை தாங்கள்தான் நியமிப்போம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஏற்கக் கூடியதாக இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பலவும் விமர்சிக்கப்படும் நிலையில், கொலீஜியம்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
 உ. அமிர்தநேயன், உடுமலை.
 புரியாத புதிர்
 நீதிபதிகள் நியமன விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டதால்தான் கொலீஜிய முறை கொண்டுவரப்பட்டது. தற்போது கொலீஜிய முறையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, புதிதாக தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்கியுள்ளனர். நீதிபதிகளை நியமிக்கும் குழுவில் அரசின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனை மத்திய சட்ட அமைச்சரே வழிமொழிவது புரியாத புதிராக உள்ளது. தற்போது உயர்நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. போதுமான நீதிபதிகள் இல்லாததே இதற்குக் காரணம். கொலீஜியம் நடைமுறையில் குறை ஏதேனும் இருந்தால் அதனை நீக்குவதற்கு முயற்சி எடுப்பதுதான் சரி.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 நம்பிக்கை
 நீதித்துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். நீதிபதிகள் நியமனத்தில் அரசியல்வாதிகளோ, ஆட்சியாளர்களோ செல்வாக்கு செலுத்துவது மிகவும் தவறான அணுகுமுறையாகும். அரசியல்வாதிகள் மூலம் நீதிபதியாக நியமனம் பெறுவோர், அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடும். அதிகார வர்க்கத்தால் பதவி கிடைக்கப்பெற்ற நீதிபதிகள் தங்களை பதவியில் அமர்த்தியவர்களுக்கு கட்டுப்பட்டே நடப்பார்கள். இது நீதித்துறையின் சுதந்திரப் போக்கை சிதைத்து விடும். ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போவதற்கான வாய்ப்பாக அமையும்.
 உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
 ஏற்க இயலாது
 கொலீஜியம் நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டியது அவசியமாகும். நாட்டில் எந்தவொரு துறையில் இருப்பவர்களும் தங்களைத் தாங்களே நியமித்துக்கொள்வதில்லை. குடியரசு நாட்டில் உயர்ந்த அமைப்பு என்பது மக்களவை மட்டுமே. நாடாளுமன்றம் மேற்கொள்ளும் சட்டத்திருத்தத்தை நீதிமன்றம் ரத்து செய்வதை ஏற்க இயலாது. ஆட்சி முடிந்து அடுத்து வரும் அரசு ரத்து செய்யலாம். நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்துகொள்ளும் கொலீஜியம் அமைப்பை ரத்து செய்துவிட்டு, அரசின் பிரதிநிதிகள், நீதிபதிகள் அடங்கிய புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே நீதிபதிகள் நியமனம் நடைபெற வழிவகை செய்யப்படவேண்டும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 ஜனநாயக விரோதம்
 ஜனநாயக நாட்டில் இறுதி அதிகாரம் மக்களுக்கே. இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் தாக்கம், ராணுவம் மற்றும் உளவுத்துறை உட்பட நாட்டின் அனைத்து முக்கியத் துறைகளிலும் எதிரொலிக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீதித்துறையின் தலைமைப் பொறுப்பான நீதிபதிகளை, நீதிபதிகளே நியமனம் செய்துகொள்வதென்பது சரியானதல்ல. கொலீஜியம் நடைமுறை ஜனநாயக விரோதமான நடைமுறையாகும். இந்த கொலீஜியம் நடைமுறையால் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளில் கைகளை விட்டுப் போய்விடும். எனவே, கொலீஜியம் நடைமுறை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பது சரிதான்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 தவறான கருத்து
 இது தவறான கருத்து. கொலீஜியம் என்பது நீதித்துறையில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதிகள் அடங்கியக் குழு. அனுபவம் வாய்ந்த இந்த குழுவினால்தான் தகுதியுள்ள நீதிபதிகளை தேர்ந்தெடுக்க முடியும். திறமையுள்ள இந்த குழு தேர்ந்தெடுக்கும் நீதிபதிகள் முந்தைய தீர்ப்புகள் குறிந்து அறிந்திருப்பதால், எப்படிப்பட்ட வழக்கினையும் எளிதில் கையாள்வர். சிறந்த நீதிபதியாக மற்றவர்களுக்கு முன்னுதாரண நீதிபதியாக இருப்பர். உண்மையில் இந்த கொலீஜியம் நடைமுறை என்பது நீதித்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். இதை ரத்து செய்தால் நீதிபதிகளை நியமனம் செய்வது ஒரு போராட்டமாகவே இருக்கும். கொலீஜியம் நடைமுறை தொடர்வதே நல்லது.
 உஷா முத்துராமன், மதுரை.
 காரணம் இல்லை
 மிகுந்த அனுபவமும், ஆழ்ந்த சட்ட ஞானமும் உள்ள மூத்த நீதிபதிகள் அடங்கியுள்ள குழுவான கொலீஜியம், நீதிபதிகளை நியமிப்பதில் என்ன தவறு? மத்திய அரசு இந்த நடைமுறையை ஏற்க மறுப்பதற்கு வலுவான காரணம் எதுவும் இல்லை. அரசு ஊழியர்களை அரசு அமைப்புகள் தேர்ந்தெடுப்பது போன்ற நடைமுறைதான் இது. இதனை மாற்ற மத்திய அரசு முற்படுவது சரியல்ல. மத்திய அரசு நீதிபதிகளை நியமனம் செய்யும்போது விமர்சனங்கள் எழ வாய்ப்புள்ளது. கொலீஜியம் நீதிபதிகளை நியமனம் செய்யும்போது சர்ச்சை எழுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, கொலீஜியம் நடைமுறையை மத்திய அரசு மாற்ற முனைவது தேவையற்றது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 மிகவும் தவறு
 தற்போது நடைமுறையில் உள்ள கொலீஜியம் முறை தொடர்பாக, மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதற்கான காரணம், மத்திய அரசு தனது பிரதிநிதியை கொலீஜியத்தில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்ததுதான். மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்றும் வகையில் முன்பு தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை இயற்றியது. அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதிகள் நியமன குழப்பத்தால் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலீஜியம் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால், நீதித்துறையை மத்திய அரசு பணிய வைக்க எண்ணுவது மிகவும் தவறு.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 நல்லதல்ல
 உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியே. அரசு - நீதித்துறை இடையிலான மோதல் போக்கு நீடித்தால் நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படக்கூடும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆகவே இதற்கென ஒரு தனி ஆணையம் நிறுவப்பட்டு, அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தலைமை நீதிபதி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கலந்து பேசி நீதித்துறை நியமனங்களுக்கு விரைந்து முடிவு காண வேண்டும். மத்திய அரசு நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 ச. சுகந்த், திருப்பூர்.
 என்ன சிக்கல்?
 ஆற்றலும் அனுபவமும் நிறைந்த நீதிபதிகள் அடங்கிய குழுதான் கொலீஜியம். அது பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று புரியவில்லை. கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பின்புலத்தை ஆராய்வது என்ற பெயரில் தேவையற்ற தலையீடுகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதனால், நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுகிறது. நீதி கிடைப்பதில் தாமதமும் நீதிபதிகளை நியமிப்பதில் தாமதமும் ஜனநாயகத்தின் தூண் எனப் போற்றப்படும் நீதித்துறையை பலவீனப்படுத்திவிடும். இதனை மத்திய அரசு உணர வேண்டும். எனவே கொலீஜியம் வேண்டாம் என்பது சரியான முடிவல்ல.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 சர்வாதிகாரம்
 இக்கருத்து சரியே. நீதிபதிகள் குழுவே நீதிபதிகளைத் தேர்நதெடுத்து நியமிக்கும் முறை சரியானதாகக் கூட இருக்கலாம். ஆனால் அம்முறையில் நம்பகத்தன்மை குறைவு. அதோடு அந்த முறையில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அரசே நீதிபதிகளை நியமிக்கும் எதேச்சதிகார அணுகுமுறையை நீதித்துறை ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சுதந்திரம் கிடைத்ததும் நீதித்துறை கொலீஜியம் முறையைக் கொண்டு வந்தது மற்றொரு வகையான சர்வாதிகாரமே. எனவே நீதிபதிகளும், சட்ட வல்லுநர்களான அரசு பிரதிநிதிகளும் அடங்கிய குழு நீதிபதிகளைத் தேர்வு செய்வதே சிறந்ததாக இருக்கும்.
 முகதி.சுபா, திருநெல்வேலி.
 காலத்தின் கட்டாயம்
 மத்திய அரசு - நீதித்துறை இடையிலான மோதல் போக்கிற்கு மிக முக்கியக் காரணம் நாடாளுமன்றத்தை விட அதிக அதிகாரம் கொண்டதாக அரசியல் சாசனம் இருப்பதே ஆகும். அரசு நிறைவேற்றும் சட்டங்களை நொடிப்பொழுதில் செல்லாததாக்கும் சக்தி நீதிமன்றத்திற்கு இருக்கிறது. அதனால்தான் அரசு - நீதித்துறை இடையிலான விரிசல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நீதித்துறை சார்ந்த சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், திறமையான நீதிபதிகளை நியமிப்பதில் திறனுடன் செயலாற்றும் கொலிஜியத்தின் செயல்பாடுகள் பாராட்டும்படி இருப்பதும் உண்மை. எனவே, கொலீஜிய முறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT