விவாதமேடை

"மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க வேண்டுமானால் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

பயனில்லை
 பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வைச் சந்தித்த மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வை சந்திப்பதோடு, மீண்டும் பிளஸ் 2 }விலும் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டியிருக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வின் மதிப்பெண்ணை வைத்து அவர்களை பிளஸ் 2- விற்கு அனுப்பாமல் வடிகட்டவும் செய்கிறோம். மேலும், பிளஸ் 1 மதிப்பெண்ணால் எந்தப் பயனும் இல்லை. பிளஸ் 2 முடித்த பின்னும் உயர்கல்வி பயில பல்வேறு நுழைவுத் தேர்விற்கும் மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளது. இதனால் பொருட்செலவும் அதிகமாகிறது. இவையெல்லாம் மாணவர்களின் இடைநிற்றலுக்கே வழிவகுக்கும். எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வதே சரி.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 நியாயமாகாது
 ஒரு சில தனியார் பள்ளிகளில் ஒரு வருட பாடத்தை விட்டுவிட்டு பன்னிரண்டாம் வகுப்புபாடத்தை மட்டும் இரண்டாண்டுகள் நடத்தும் குறைபாட்டைக் களையவே பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வு பொதுத்தேர்வாக மாற்றப்பட்டது. நீட்தேர்வை மனதில் கொண்டு பெரும்பான்மை மாணவர்களை அச்சுறுத்துமளவிற்கு பாடச்சுமை ஏற்றப்பட்டதால் இனிப்பாக இருந்த மேல்நிலைக்கல்வி கசப்பாக மாறிவிட்டது. எளியவருக்கும் ஏற்றம் என்பதை மனதில் நிறுத்தி பாடச்சுமையைக் குறைத்து போதுமான ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டுமே தவிர பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்வது நியாயமாகாது.
 த. முருகவேள், விழுப்புரம்.
 சரியல்ல
 மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க வேண்டுமானால் பிளஸ் 1 தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கூறுவது சரியல்ல. கல்லூரியில் மூன்றாண்டுகளும் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பிளஸ் 2 படிக்கும் போது இடையே நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம். இரண்டாம் ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வில் முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெறாத பாடங்களையும் சேர்த்து எழுதவும் வாய்ப்பு உண்டு. எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்பது தவறான கோரிக்கையாகும். மாணவர்களின் இடைநிற்றலுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 சாலச்சிறந்தது
 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது. ஆனால் தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு வைப்பதால் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூட மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் ஒரு சில பள்ளிகள் பிளஸ் 1 பாடங்களைப் புறந்தள்ளிவிட்டு இரு ஆண்டுகளும் பிளஸ் 2 பாடங்களையே
 நடத்துகின்றன. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பே. எனவே மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்வது சாலச்சிறந்தது.
 ஈ.எஸ். சந்திரசேகரன், சென்னை.
 இடர்ப்பாடு
 தேர்வு நடத்தப்படுவது மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காகத்தான். மேலும் பிளஸ் 1 பாடங்களை நன்கு பயின்று தேர்ச்சி பெற்றால்தான் பிளஸ் 2 பொதுத்தேர்வை அவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ள முடியும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதே மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும். பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால் மாணவர்கள் அந்த வகுப்புக்கான பாடங்களை சரிவர படிக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்வதில் மிகப்பெரிய இடர்ப்பாடு உருவாகும். எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்.
 கலைப்பித்தன், கடலூர்.
 மாற்றம்
 இக்கருத்து ஏற்கவியலாதது. அரசுப் பள்ளிகளில்தான் மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை சரிசெய்து பள்ளிகளை மாணவர்கள் விரும்பும் வகையில் மாற்ற வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை தனித்தனியாக கவனித்து அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கல்வி கற்பிக்க வேண்டும். கீழ் வகுப்புகளிலேயே இடை நிற்றல் மாணவர்களைக் கண்டறிய வேண்டும். அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான வழிவகைகளை பள்ளி நிர்வாகம் கண்டறிய வேண்டும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 அளவுகோல்
 மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்கான காரணங்களை கள ஆய்வு மூலம் பள்ளி கல்வித்துறை கண்டறிய வேண்டும். அதற்கு முனையாமல் பிளஸ் 1 தேர்வை ரத்து செய்துவிட்டால் இடைநிற்றல் இருக்காது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப் பார்த்தால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்தால் இடைநிற்றலே இருக்காது என்று சொல்ல முடியுமா? மாணவர்களின் இடைநிற்றலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. தேர்வு ஒன்றுதான் மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல். எனவே, பிளஸ் 1 தேர்வை ரத்து செய்ய தேவையில்லை.
 மா. பழனி, கூத்தப்பாடி.
 கடமை
 மாணவர்களின் இடைநிற்றலுக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு காரணமல்ல. அதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது பள்ளி கல்வித்துறையின் தலையாய கடமை. மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றலில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை அறிய உதவுவது தேர்வுதான். அதனைக் கூடாது என்று கூறுவது கல்வியே கூடாது என்று கூறுவது போன்றதாகும். பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்தால் பிளஸ் 2 தேர்வில் மாணவர்ளின் தேர்ச்சி விகிதம் அதலபாதாளத்திற்கு சென்று விடுவது தவிர்க்கமுடியாதது. எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடரட்டும். அதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 கேலிக்கூத்து
 மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது நகைப்புக்குரியது. இந்தக் கோரிக்கை ஆபத்தானது. இதே கோரிக்கை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு இவற்றிலும் எழுந்தால் என்ன ஆகும்? நமது கல்வி முறையை கேலிக்கூத்தாக மாறிவிடும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் தேர்வு நடத்தப்பட வேண்டியது இன்றியமையாதது. தேர்வு இல்லாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை மதிப்பீடு செய்வது எங்ஙனம்? இடைநிற்றலுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டியது அவசியம். ஆனால் அதற்கான காரணம் பிளஸ் 1 பொதுத்தேர்வு அல்ல.
 ப. கணேசன், கோட்டுச்சேரி.
 கண்கூடு
 கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு, வேலைக்கு போட்டி தேர்வு என்றெல்லாம் இருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அரசு பொதுத்தேர்வு என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பது கண்கூடு. பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, தொடர்ந்து கல்வி கற்பதில் ஆர்வமின்றிப் போய்விடுகிறது. அதனால் இடைநிற்றல் உருவாகிறது. எனவே, மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே.
 புஷ்பா குமார்,
 திருப்போரூர்.
 சலிப்பு
 பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு முதல், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வை எதிர்கொள்வதால் சலிப்பும் பதற்றமும் அடைகின்றனர். நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வை சந்திப்பது சிரமத்தையே ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான், பல மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு, படிப்பையே நிறுத்தி விடுகின்றனர். மேலும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதைக் கொண்டு அவர்கள் பிளஸ் 2 }வைத் தவிர வேறு எந்தப் படிப்பிலும் சேர இயலாது. ஆகவே, பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்து விடலாம்.
 வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
 அவசியம்
 இக்கருத்து தவறு. ஒவ்வொரு மாணவனுக்கும் தேர்வு என்பது மிகவும் அவசியமானது. இப்பொழுது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருவதால் கல்வியினுடைய தரம் குறைந்து இருக்கிறது. தமிழை சரியாக படிக்க தெரியாதவர்கள் கூட ஒன்பதாம் வகுப்பில் இருக்கிறார்கள். மாணவர்களின் கற்றல் திறனை அறிவதற்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு அவசியம். எந்தக் காரணம் கொண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் மாணவர்கள் கற்றதன் பயனை அடைய முடியாது. எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடரட்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT