விவாதமேடை

"இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவுவதால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோருவது ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

நியாயமற்றது
எதிர்க்கட்சியினர் கோருவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே கரோனா தீநுண்மிப் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு, இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் கற்றல்-கற்பித்தல் மிகவும் தொய்வடைந்ததால் பெற்றோரும் ஆசிரியரும் மிகவும் கவலையடைந்தனர். இப்போதுதான் மெல்ல மெல்ல நிலைமை சீரடைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்ப்ளுயன்சா காய்ச்சலைக் காரணம் காட்டி, பள்ளிகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் கோருவது நியாயமற்றது. அரசின் சுகாதாரத்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது. விடுமுறை விட வேண்டிய அவசியமில்லை.
பா. திருநாவுக்கரசு, சென்னை.
ஏற்புடையதல்ல
ஏற்கெனவே கரோனா தீநுண்மிப் பரவல் அச்சம் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு இப்போதுதான் ஓரளவு மீண்டு வருகிறோம். இந்த நேரத்தில் பள்ளிகளை மூடச்சொல்வது ஏற்புடையதல்ல. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பதிலாக, நோயினால் பாதிக்கப்பட்ட மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு விடுப்பு அளிக்கலாம். மேலும், குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் முழுமையாக குணமான பின் அனுப்பலாம். மிகமிகக் குறைந்த விழுக்காட்டினரே இன்ப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை.
உ. இராசமாணிக்கம், கடலூர்.
தேவையற்றது
தற்போது தமிழகத்தில் பரவி வரும் இன்ப்ளுயன்சா காய்ச்சல், தொற்றும் தன்மை உள்ளது அல்ல. வழக்கமாக பருவகால மாற்றத்தின்போது வரும் காய்ச்சலே. இதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தேவையற்றது. இரண்டு ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு தற்போதுதான் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்கும் முயற்சியில் ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களை பழைய நிலைக்கு கொண்டுவர ஆசிரியர்களும் தங்களால் இயன்றவரை வகுப்பறை செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இப்போது மீண்டும் விடுமுறை என்பது முன்னேற்றத்தில் தொய்வை ஏற்படுத்தும். எனவே விடுமுறை என்பது தேவையற்றது.
கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
மிகவும் தவறு
கரோனா காலகட்டத்தில் பள்ளிகள் ஏறக்குறைய இருவருடங்கள் மூடியே கிடந்தன. அதனால் பள்ளிப்படிப்பைத் தொலைத்தவர் பலர். இடைநின்றவர்பலர். இன்றுகாலச் சூழல் காரணமாக பல்வேறு நோய்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறிந்து தடுப்பது நல்லது. அதை விடுத்து நோய் வரும்பொழுதெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட வண்ணமே இருந்தால் பள்ளிப் படிப்புப் பயனற்றுப் போகும். அரசியல் ஆதாயத்திற்காக இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருவதால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோருவது மிகவும் தவறு.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
பாதிப்பு
இன்ப்ளூயன்சா காய்ச்சல் இருப்பது உண்மைதான். ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு தீவிரமான பரவல் இல்லை. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இது தேர்வு காலம். விடுமுறை விட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். காய்ச்சலின் பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் முகாம் நடத்தி வருகிறது. மேலும் சுகாதாரத் துறை மூலம் தகுந்த ஆலோசனைகள் வழங்கி தீவிர பரவல் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்தாலே போதுமானது. பெற்றோரும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வந்த பின்னர் வருந்துவதை விட வருமுன் காப்பதே மேலானது.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
கவனம்
இன்ப்ளூயன்சா காய்ச்சல் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது என்பதால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். அரசு பெற்றோர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பல இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறது. பெற்றோர்களும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போல கல்வி இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். இந்நோய் பருவநிலை மாற்றத்தின் விளைவு என்பதால் விரைவில் கட்டுப்படுத்தப் பட்டு விடும். இதைத் தடுப்பதில் பொதுமக்கள்அரசுடன் ஒத்துழைத்தால் போதும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
நல்லதல்ல
இப்போது பரவுவது சாதாரண காய்ச்சல் என்பதும், இரண்டு, மூன்று நாட்கள் மருந்து சாப்பிட்ட பின், குணமாகி விடுவதும் கண்கூடு. ஒரு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் என்பதால், பள்ளிக்கே விடுமுறை என்பது கூடாது. இது போல சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் விடுமுறை விட ஆரம்பித்தால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்படும். ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் கரோனாவினால் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டுதான் பள்ளிகள் பழையபடி இயங்கத் தொடங்கியுள்ளன. வீண் அச்சத்தினால் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது நல்லதல்ல.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
மாற்றம்
ஏற்கனவே கரோனா தீநுண்மிப் பரவலால் பாதிக்கப்பட்ட கல்வித்துறையும், மாணவர்களும், ஏன் ஆசிரியர்களும்கூட இப்போதுதான் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை என்பது மாணவர்களின் கல்விமுறையில் மட்டுமல்ல, வாழ்க்கை முறையிலும், மனநிலையிலும்கூட விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடும். இப்போது அவர்களைப் பள்ளிக்குத் தொடர்ந்து வரச்செய்வதன் மூலம் ஆரோக்கியத்தின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தலாம். கல்வியைத் தொடர்வது அவசியம் என்பதையும் புரிய வைக்கலாம்.
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
சரியல்ல
இன்ப்ளூயன்சா காய்ச்சல் மட்டுமல்ல எந்தவொரு நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், அந்தப் பள்ளி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்காக பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறுவது சரியல்ல. ஒரு சில மாணவர்களின் காய்ச்சலால் ஒட்டுமொத்த மாணவர்களின் கற்றலில் தடை ஏற்படுத்துவது நியாயமல்ல. பெற்றோர்களும் இதை விரும்பமாட்டார்கள். எனவே வீண் கவலை வேண்டாம். மாணவர்கள் கல்வியைத் தொடர பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதைத் தவிர்ப்போம்.
சி. இரத்தினசாமி, திருப்பூர்.
தாக்கம்
இந்தக் காய்ச்சல், பெரியவர்களைவிட குழந்தைகளுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். பள்ளிகளில் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக நேரிடுவதால் நோய்தொற்று எளிதில் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலம் விடுமுறை அளிப்பதே சிறந்தது. பள்ளிகள் இயங்கினால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது. பள்ளிகள் மூடப்பட்டால்தான் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். மாநில அரசு எல்லா இடங்களிலும் காய்ச்சல் சோதனைக்கான சிறப்பு முகாம் நடத்துவதிலிருந்தே நோயின் தாக்கத்தை நாம் அறியலாம்.
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
வரைமுறை தேவை
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் வரைமுறை வேண்டும். மழைக்கு விடுமுறை, வெயிலுக்கு விடுமுறை என எதற்கெடுத்தாலும் விடுமுறை விடுவது சரியல்ல. கரோனா நோய்த்தொற்றையே சிறப்பாக எதிர்கொண்டு சமாளித்த தமிழகம், அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இன்ப்ளூயன்சா காய்ச்சலையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தேவையற்ற பள்ளி விடுப்பு மாணக்கர்களின் கல்வி கற்கும் திறனை வெகுவாகக் குறைக்கும். போதிய பாதுகாப்புடன் கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும். அதனை அரசு கண்காணிக்க வேண்டும்.
நா. குழந்தைவேலு, மதுரை.
விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது என்பது உண்மைதான். இது ஒருவரிமிருந்து மற்றவருக்குத் தொற்றக்கூடியதல்ல. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கோருவது ஏற்புடையதல்ல. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. நோயின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்த நடமாடும் சுகாதார மையங்களை அமைக்கலாம். மாவட்டந்தோறும் மருத்துவக் குழுக்களை அமைத்து பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளலாம். பெற்றோரிடம் நோய் பற்றிய அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதும்.
வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT