விவாதமேடை

"மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க எலி மருந்து விற்பனைக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

21st Sep 2022 02:58 AM

ADVERTISEMENT

 கட்டாயம்
 மாணவர்களின் தற்கொலை முடிவுக்கு அவர்களின் குடும்பச் சூழல், பயிலும் பள்ளியின் கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களுக்கு விருப்பம் இல்லாத துறையில் பயில வேண்டும் என்று பெற்றோர் கட்டாயப்படுத்துவதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை, கூச்ச சுபாவம், தேர்வு பயம் போன்றவற்றைக் களைய பெற்றோரும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும். குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்புதான் சிறந்தது என்கிற எண்ணத்தைப் பெற்றோர் மாற்றிக்கொள்ள வேண்டும். இவற்றைச் செய்யாமல் எலி மருந்து விற்பனைக்குக் கட்டுப்பாடு விதிப்பது பலன் தராது.
 வி. சரவணன், சிவகங்கை.
 பயனில்லை
 மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்குவதுதான் சரியாக இருக்கும். எலி மருந்தைத் தடை செய்வதால் பயனில்லை. தற்கொலை முடிவை எடுப்பவர்கள் எலி மருந்தை மட்டும் நம்பி அந்த முடிவை எடுப்பதில்லை. வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. மாணவர்கள் மனதில் உள்ள பயத்தையும் பதற்றத்தையும் போக்கி அவர்களுக்கு துணிவை ஊட்ட வேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதுதான் மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க சிறந்த வழியாகும்.
 பா. திருநாவுக்கரசு, சென்னை.
 வேறு வழிகள்
 அரசின் கட்டுப்பாடு தவறு. தற்கொலை எண்ணம் வரும் எல்லா மாணவர்களும் எலி மருந்து குடித்து தங்கள் உயிரைப் போக்கிக்கொள்வதில்லை. வேறு எத்தனையோ வழிகளை நாடுகிறார்கள். எனவே, எலி மருந்து கிடைக்காமல் செய்தால் தற்கொலைகள் நிகழாது என்று அரசு எண்ணுவது தவறு. உணவு தானியங்களை வீணாக்குவதில் எலிகளின் பங்கே அதிகம். வீடுகளில், கடைகளில் உள்ள எலிகளை அழிப்பதற்கு இந்த எலி மருந்தைப் பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாகும். எனவே, எலி மருந்து விற்பனைக்குக்
 கட்டுப்பாடு விதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
 மு. தனகோபாலன், திருவாரூர்.
 நன்னெறி
 மன அழுத்தம், தேர்வில் தோல்வியை ஏற்க முடியாமை, பிடித்த துறையில் படிக்க முடியாத விரக்தி, ஆசிரியரோ, பெற்றோரோ திட்டுதல் போன்ற பல காரணங்களால் மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்கின்றன. வகுப்பில் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பாடத்தைக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். நன்னெறி, உடற்பயிற்சி வகுப்புகள் தொடங்க வேண்டும். அரசு மாணவர்களுக்கு ஏராளமானவற்றை இலவசமாக வழங்குகிறது. அத்துடன் அவர்களுக்குப் பொறுப்புணர்வு ஊட்டும் நடவடிக்கைகளும் தேவை. மாணவர்கள் தற்கொலைக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தற்கொலையைத் தடுக்க எலிமருந்து விற்பனைக்கு அரசு கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 தடுக்க முடியாது
 தற்கொலை முடிவு எடுத்தவர்கள் எலி மருந்து கிடைக்கவில்லை என்றால் வேறு வழியை நாடுவார்கள். அரசு உடனடியாக செய்ய வேண்டியது, தற்கொலை எண்ணத்தை மாணவ செல்வங்களின் மனதிலிருந்து முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே. அதற்கு, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்புகள் வாரம் ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கை கொள்ளும் வகையில் விழிப்புணர்வு விளம்பரங்களை அரசியல் பிரமுகர்கள், நடிகர்களைக் கொண்டு உருவாக்கி அதை அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும்.
 ஆர். ஹரிகோபி, புதுதில்லி.
 நம்பிக்கை
 ஒருவரின் உயிரை போக்கிக் கொள்ள எலி மருந்து மட்டும்தான் பயன்படுமா? எலி மருந்து கிடைக்காவிட்டால் வேறு வழியை யோசிப்பார்கள். மாணவர்களின் தற்கொலை முடிவைத் தடுக்க, அவர்களுக்கு அந்த எண்ணம் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று அரசு யோசிப்பதுதான் சிறந்தது. மாணவர்களின் பெற்றோர் அவர்களை அன்புடன் பார்த்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். இப்படி சிந்திக்காமல் எலி மருந்து மட்டுமே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று எண்ணி அதை விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிப்பது நிரந்தரத் தீர்வாகாது.
 உஷா முத்துராமன், மதுரை.
 அறிவுடைமையல்ல
 கல்விமுறையில் மாற்றம் தேவை. பெற்றோர் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். யாருக்காவது தற்கொலை எண்ணம் இருப்பதாகத் தெரிந்தால் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர் எண்ணத்தை மாற்ற முயல வேண்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு எலி மருந்து விற்பனைக்குக் கட்டுப்பாடு விதிப்பது அறிவுடைமையல்ல. தற்கொலைக்கான மாற்று வழிகளைத் தேர்வு செய்ய மாணவர்களைத் தூண்டுவதாகவே இது அமையும். நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வழியையும் நாடுவதே நல்லது.
 த. முருகவேள், விழுப்புரம்.
 நல்ல உறவு
 மாணவர்களின் தற்கொலையை தடுத்திட வேண்டுமானால், முதலில் அவர்கள் தங்கள் பெற்றோர், ஆசிரியர்களுடன் இணக்கமான நல்ல உறவை பேணும்படியாக அவர்களுக்கு உளவியல் ரீதியான ஒரு பயிற்சி தேவை. மாணவர்களிடையே தங்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க அவர்களைப் பழக்க வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் இவர்களுக்கு மாணவர்கள் குறித்த அழுத்தம் இல்லா சூழல் இருப்பதும் அவசியம். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் மாணவர்களின் தற்கொலை பிரச்னைக்குத் தீர்வாக அமையும்
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 ஆலோசனை வகுப்பு
 மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க எலி மருந்து விற்பனைக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்கொலை செய்ய வேண்டுமென்றால் எத்தனையோ ரசாயன பூச்சி மருந்துகள் உண்டு. வேறு வழிகளிலும் தற்கொலை செய்து கொள்ள முடியும். மாணவர்களோடு மனம் விட்டுப் பேசுவதே தற்கொலை எண்ணத்தை மாற்றும். இன்றைய தனிக்குடும்ப முறை, நகர வாழ்க்கை முறை போன்றவை பிள்ளைகளின் பிரச்னைகளை பெற்றோர் கேட்க முடியாமல் செய்து விடுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு மனநல வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை வகுப்புகளை நடத்த வேண்டும்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 முதல் காரணம்
 "நோய்நாடி நோய்முதல் நாடி' என்றார் திருவள்ளுவர். ஒரு மாணவன் தற்கொலைதான் தீர்வு என்ற முடிவுக்கு வர முதல் காரணம், அவனுக்கு தன்னம்பிக்கைத் தளர்வுதான். உலகம் போற்றும் அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசனில் இருந்து, இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவாக அடித்தளம் அமைத்துத் தந்த ராபர்ட் கிளைவ் வரை மிகப்பெரிய சாதனையாளர்கள் எல்லாம் ஆரம்பத்தில் தற்கொலைக்கு முயன்று, தோற்று, பின் மாபெரும் சாதனையாளர்களாக உயர்ந்தவர்கள்தான். ஒரு கதவு அடைத்தால் மறுகதவு திறக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மனதில் விதைத்தாலே, அவர்களின் தற்கொலை எண்ணம் மறைந்துவிடும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 துணிவு
 இது சரியான நடவடிக்கை அல்ல. ஒருவர் தற்கொலை செய்துகொள்ள பல வழிகள் இருக்கும் நிலையில், அதில் ஒன்றிற்கு கட்டுப்பாடு விதிப்பதால் எந்த பயனும் விளையப்போவதில்லை. மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். எந்த பிரச்னையும் எதிர்கொள்ளும் துணிவை அவர்களுக்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் அளிக்க வேண்டும். தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடையாது என்பதை மாணவர்களுக்கு நன்கு புரிய வைக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் ஆன்லைன் விளையாட்டை அரசு தடை செய்ய வேண்டும்.
 ந. அகிலா, கடலூர்.
 மாற்று வழிகள்
 தற்போதைய மாணவர்களுக்கு மனம் விட்டுப் பேசுவதற்கான நட்பு வட்டம் இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் மனதில் தேர்வுகளைப் பற்றி பயம் விதைக்கப்பட்டு இருக்கிறது. வாழ்க்கையே தேர்வுதான் என்பது போல பெற்றோர் மிகைப்படுத்திவிட்டனர். அவர்களின் அச்சம் மாணவர்கள் மீது சுமையாகும் போது அவர்கள் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க எலி மருந்து விற்பனைக்கு அரசு கட்டுப்பாடு விதித்ததோடு நிறுத்தி விடாமல் மாற்று வழிகளையும் கண்டறிந்து இதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் தற்கொலைகள் தொடரும்.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT