விவாதமேடை

நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதித்துவமும் இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில

14th Sep 2022 03:59 AM

ADVERTISEMENT

தேவையற்றது
 சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் வேண்டுமானால் இட ஒதுக்கீடும் அனைத்து பிரிவினரின் பிரதிநிதித்துவமும் தேவைப்படலாம். ஆனால் ஒரு நீதிபதிக்கு பிரதிநிதித்துவம் தேவையற்றது. மன்னராட்சியில் சமூகத்தில் எந்த பிரிவைச்சார்ந்தவர் என்று பார்த்து நீதி வழங்கப்படவில்லை. நியாயத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகளின் நியமனங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் என்றால் அரசு வழக்குரைஞர் நியமனத்திலும் பிரதிநிதித்துவம் கோருவார்கள். அதன்பின் நீதிமன்றங்களில் நீதி இருக்காது;சாதிதான் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களே.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 அடிப்படைக் கொள்கை
 இக்கருத்து சரியே. இந்திய அரசின் அடிப்படைக் கொள்கையான இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, அடிப்படை சமத்துவ உரிமைகள் ஷரத்து அதைத்தான் வலியுறுத்துகிறது. மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் எந்த ஒரு நிறுவனமும் சமத்துவம், சமதர்மம், சமூக நீதி ஆகியவற்றை வழங்க வேண்டும். அதை விடுத்து "அவருக்கு வயதாகி விட்டது ஆகையால் அவருக்கு உயர்பதவி அளித்து ஓய்வு பெற வையுங்கள்' என்ற கருத்து ஏற்புடையது அல்ல. முக்கியமான பதவிகளில் அதிக காலம் நீடித்தாலும் ஆபத்து; போதுமான அவகாசம் இல்லையென்றாலும் கேடு வரும் என்பதை உச்சநீதிமன்றம் உணர வேண்டும்.
 வி. வில்லவன், காட்டுமன்னார்கோயில்.
 சரியானதல்ல
 நீதிபதி நியமனங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதித்துவமும் இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்கிற கருத்து மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது சரியாக இருக்கலாம். ஆனால், தகுதியை விட சமூக நீதியே முக்கியம் என்பது சரியானதல்ல. சில துறைகளில் சமூகநீதியை விட தகுதிக்கும் திறமைக்குமே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சமூகநீதி வேண்டுவோர் அப்பிரிவினரை அத்தகைய பணிகளுக்கு தகுதியுள்ளவர்களாக்கி அத்தகைய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும். தகுதி குறைவானவர்களை, சமூக நீதியைக் காரணம் காட்டி, அப்பணிகளுக்கு தேர்வு செய்வது ஆபத்தில் முடியும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 புரியவில்லை
 நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பிரதிநிதித்துவமும் இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது எதற்காக என்று புரியவில்லை. நீதிபதிகள் சாட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குபவர்கள். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு அதன் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்று வந்தால் அது சிறப்பாக இருக்கும். அரசுப் பணியில் எவ்வாறு இட ஒதுக்கீடு அளவுகோல் பின்பற்றப்படுகிறதோ அதே அளவுகோலை நீதிபதிகள் நியமனங்களுக்கும் பொருந்தும். எதற்காக இது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன என்பது புரியவில்லை.
 மா. பழனி, தருமபுரி.
 ஓரளவு சரி
 நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது ஓரளவு சரியாக இருக்கலாம். நீதிபதிகள் நியமனத்திற்கு அனுபவம் இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் பிரச்னைகளில் சிக்காதவர்களாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் சிவில், குற்றவியல் வழக்குகளிலும் அரசியல் சாசனத்திலும் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். எக்காலத்திலும் அரசியல் சட்ட நெறிகளையும் தருமத்தையும் காப்பாற்றுபவராக இருக்கவேண்டும். இவ்வளவும் இருந்தால் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்பளிக்கலாம்.
 தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 தகுதி அடிப்படை
 தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் சமநிலை இல்லாத அதிக மக்கள் திரள் கொண்ட நாடு இந்தியா. இங்கு நீதிமன்றங்களை அனைவருக்குமானதாகவும் சாமானிய மக்கள் எளிதில் அணுகக்கூடியவையாகவும் மாற்றுவதில் மிகவும் பின்தங்கியே உள்ளோம். வழக்குத் தொடுப்பவர்கள் மிக மன அழுத்தத்தில் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் இணக்கமான சூழலை உருவாக்குவதில் நீதிபதிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நீதி வழங்கும் இறைவனாகக் கருதப்படும் நீதிபதிகளை பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்காமல் தகுதி அடிப்படையில் நியமிப்பதே சரியாகும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 நோக்கம்
 தன் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி மட்டுமே தனக்குச் சரியானபடி நீதி வழங்குவார் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தக் கோரிக்கை. நீதிமன்றங்களில் கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, கையில் நியாயத் தராசைப் பிடித்துக் கொண்டு நிற்கும் நீதிதேவதை உருவத்தை வைத்திருப்பதன் நோக்கம், "இந்த மன்றத்தின் நீதிபதி இனம், மதம், மொழி, சமூகம் தாண்டி நியாயத் தீர்ப்பு வழங்குவார்' என்பதை உணரவும், உணர்த்தவும்தான். நடைமுறையும் அதுதான். அப்படி இருக்க எதற்காக சமூக ரீதியான பிரதிநிதித்வம்? இது எதிர்காலத்தில் நீதித்துறையிலும், தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி விடும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 வளர்ச்சியின்மை
 நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் இட ஒதுக்கீடு, அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் என்ற கோஷங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இது நமது வளர்ச்சியைக் குறிக்கவில்லை. நமது வளர்ச்சியின்மையே காட்டுகிறது. முதலில் நமக்கு தேவை உண்மையான நீதியா?அனைத்து சமூகத்தினருக்கும் நீதிபதி பதவியா? நாம் அனைவரும் ஒன்று என்றால் நமக்கு தேவை நீதி. நாம் அனைவரும் ஒன்று இல்லை என்றால் நமக்குத் தேவை அனைத்து சமூகத்தினருக்கும் நீதிபதியாக பிரதிநிதித்துவம். முடிவு ஆளுவோர் கையில். ஆனால் பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பது நீதியை மட்டுமே.
 வனிதா ராம், இராமநாதபுரம்.
 பாதிப்பு
 ஒவ்வொரு பிரஜைக்கும் சம வாய்ப்பு, சம உரிமை இருத்தல் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், முற்றிலும் தகுதியுடைய ஒருவரை ஒதுக்கிவிட்டு தகுதி குறைவான ஒருவரை குறிப்பிட்ட துறைகளில் பணி அமர்த்துவது அந்த வாய்ப்பில் வருவோரின் தன்னம்பிக்கையைக் குறைக்கும். தவிர குறிப்பிட்ட பிரிவினர் என்ற தகுதியில்தான் தனக்கு வாய்ப்புக் கிடைத்தது என்று அவர்கள் எண்ணும்போது அவர் சார்ந்த பிரிவினருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எழும். நீதித்துறையில் இந்த நிலை உருவானால், அது சமூகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 நடுநிலைமை
 நீதிபதிகள் நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் அமைய வேண்டும்.பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒருவர் நீதிபதியானால் அவரது பார்வை நீதி சார்ந்ததாகவா இருக்கும்? நீதிபதி பதவிக்கு வரக் காரணமாக இருந்த பிரதிநிதித்துவத்திற்கு சாதகமாக தீர்ப்பு எழுத வாய்ப்பு உருவாகும். நீதி தேவதை கண்களைக் கட்டி தராசை கையில் வைத்திருக்கக் காரணமே நடுநிலையோடு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். நடுநிலைமைதான் நீதிபதியின் பலம். தகுதி அடிப்படையில்தான் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பிரிவினருக்குமான பிரதிநிதித்துவ அடிப்படையில் என்றால் நீதித்துறை தனது மகத்துவத்தை இழந்து விடும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 கேள்விக்குறி
 நீதிபதிகள் நியமனங்களில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது தேவையற்றதாகும். இப்படிப்பட்ட முறையில் நீதிபதிகள் நியமனத்தைக் கொண்டு வரும்போது பல்வேறு பிரச்னைகள் உண்டாகும். இதுவரையில்லாத பிரச்னைகள் புதிதாக ஏற்படும்போது, நீதித்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது, நீதி வழங்கும் போது தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாட்டை உருவாக்கிவிடும். மொத்தத்தில் நீதி கிடைப்பதில் நேர்மையற்ற நிலையை உருவாக்கி விடும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 பரிவு உணர்ச்சி
 இது தவறான கருத்து. நீதிபதி பதவிக்கு நீண்ட கால அனுபவமும், சட்ட நுணுக்கமும் அறிந்தவர்களே தேவை. வேறு எதையும் தகுதியாகக் கொள்ள முடியாது. அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் என்பது தனது சமூகம் சார்ந்தவர்களிடம் பரிவு உணர்ச்சி ஏற்பட வழிவகுக்கும். சமூக அடிப்படையில் நீதிபதி நியமனம் என்கிற நிலை வந்தால் அது நீதியைக் குலைத்துவிடும். தகுதியும் திறமையும் உடைய எவரும், எந்தப் பிரிவினரும் நீதிபதியாகப் பணியாற்ற முடியும் என்கிற நிலையே சரி. மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது நீதித்துறையில் மட்டும்தான். அதில் பிரதிநிதித்துவ நியமன முறை கூடவே கூடாது.
 கலைப்பித்தன், கடலூர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT