விவாதமேடை

 "காங்கிரஸை வழிநடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

7th Sep 2022 04:02 AM

ADVERTISEMENT

அவல நிலை
காங்கிரஸை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளது அக்கட்சியின் அவல நிலையைக் காட்டுகின்றது. கட்சிக்குத் தலைமையேற்க நேரு குடும்பத்தினரைத் தவிர வேறு எவருக்கும் தகுதி இல்லையா? நரசிம்ம ராவ், மன்மோகன் சிங், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர், நேரு குடும்பத்தினர் அல்லவே. வாரிசு அரசியலை விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள் தலையாட்டி பொம்மை போல செயல்பட விரும்புகின்றனர். மக்களை வழி நடத்திச் செல்லும் தகுதியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் வாய்மூடி மெளனமாய் இருப்பது தவறு. நேரு குடும்பத்தை விட்டு காங்கிரஸ் வெளிவந்தால்தான் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
இயலாமை
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகக் கூடிய தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது என்று கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 2019 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தபோது, கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜிநாமா செய்திருக்கக் கூடாது. அவர் பதவி விலகாமல், கட்சியை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பதவி விலகல் அவருடைய இயலாமையின் வெளிப்பாடே. அப்போதே கட்சித் தலைவருக்கான தகுதியை அவர் இழந்து விட்டார்.
க. இளங்கோவன், நன்னிலம்.
கேள்விக்குறி
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியேறி வருவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இந்த நிலையைத் தடுக்க கட்சித் தலைமை முயன்றதாகவும் தெரியவில்லை. மூத்த தலைவர்களின் கருத்துகளைப் புறந்தள்ளியும், கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தத் தவறியும், தலைவர் பதவி ஏற்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டியும் வரும் ராகுல் காந்தியால் காங்கிரஸை சிறப்பாக வழிநடத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. கட்சியில் உள்ள பிரச்னைகளை சரி செய்து, தொலைநோக்குப் பார்வையுடன் கட்சியை வளர்த்தெடுக்கக் கூடிய ராஜதந்திரம் நிறைந்த ஒருவர் தலைவராக வருவதுதான் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
வெற்றிடம்
மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது சரியே. குலாம் நபி ஆசாதின் விலகலுக்கு பின்பு, காங்கிரஸ் கட்சியினை வழிநடத்த சரியான ஆள் இல்லை. மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தியின் பெயரைக் கூறியிருப்பது சரியே. குலாம் நபி ஆசாதின் விலகலால் ஏற்பட்ட வெற்றிடம் என்பது வேறு. சரியான தலைமை என்பது வேறு. ஏற்கனவே, ராகுல் காந்தி தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தி தேர்தலில் தோல்வியையே சந்திக்க நேரிட்டது. மீண்டும் அதே தலைமையைக் கட்சியினர் விரும்புவதற்கான காரணம் நேரு குடும்பத்தின் மீதுள்ள விசுவாசமே ஆகும். மற்றபடி கார்கேயின் இந்த யோசனை கட்சிக்கு சிறிதும் நன்மை அளிக்காது.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
புத்துயிர்
நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலேயே மிகக்குறைந்த காலம் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தியே. அனுபவமும் திறமையும் மிகுந்த தலைவர்கள் கட்சியில் இருந்தபோதும், கட்சித் தலைமை அவர்களை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை. ராகுல் காந்தியால் மூன்று ஆண்டுகள் கூட கட்சித் தலைவராக இருந்து செயலாற்ற முடியவில்லை. மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுதலே திறமையான தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு காரணமாகும். தேய்ந்து வரும் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற வேண்டுமானால், நேரு குடும்பம் அல்லாத திறமையான தலைமை தேவை.
எம். ஜோசப் லாரன்ஸ்,
சிக்கத்தம்பூர் பாளையம்.
சலசலப்பு
நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால் கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரை ஏற்றுக் கொள்வார்கள். வேறு யார் தலைமை ஏற்றாலும் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு பி.வி. நரசிம்ம ராவ், சீத்தாராம் கேசரி போன்றோர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்று செயல்பட்டபோது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை நாமறிவோம். சோனியா காந்தி காங்கிரஸýக்குத் தலைமையேற்ற பின்னர் பெற்ற அபார வெற்றிகளையும் அறிவோம். இந்த நிகழ்வுகளை உடனிருந்து பார்த்தவர் என்பதால் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தியின் பெயரை உறுதியாகக் கூறுகிறார். எனவே, கார்கே கூறுவது சரியே.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
பெருந்தவறு
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தபோதே, கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி கட்சியை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். அதனை விடுத்து பதவியிலிருந்து விலகியது அவர் செய்த பெருந்தவறு. அவர் அவ்வப்போது தனது முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகிறார். மேலும், கட்சியின் வளர்ச்சியில் அவருக்கு ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். எனவே, ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டுமெனக் கூறும் மல்லிகார்ஜுன கார்கேயின் கூற்று நகைப்புக்குரியது.
கே. ராமநாதன், மதுரை.
தேய்பிறை
முதலில் ராகுல் காந்தி பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக அவரது கடமையை செய்கிறாரா என்றால் இல்லை. வருடத்தில் பாதி நாட்களுக்கு மேலாக அவர் இந்தியாவிலேயே இருப்பதில்லை. நேரு குடும்பத்தின் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது காங்கிரஸ் என்பதே உண்மை. தலைமைக்குரிய தகுதி ராகுலிடம் இருந்திருந்தால் கட்சி இப்படி தேய்பிறையாகத் தேய்ந்து கொண்டு இருக்காது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள ஒரே வழி சோனியா குடும்பப் பிடியில் இருந்து விடுபட வேண்டும். வாரிசு அரசியலால் காங்கிரஸ் கட்சி, கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சியும் காணவில்லை.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
ஆர்வம் இல்லை
கார்கே கூறுவது தவறு. கட்சியில் உள்ள மூத்த தலைவர்களின் கருத்துகளையோ, கட்சித் தொண்டர்களின் மனநிலையையோ அறியாதவராகவே ராகுல் காந்தி இருக்கிறார். அவற்றையெல்லாம் அறிந்துகொள்வதில் அவருக்கு ஆர்வம் இருப்பதாகவும் தெரியவில்லை. நேரு குடும்ப விசுவாசிகள் சிலர்தான் ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சித் தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். பொதுமக்களின் விருப்பமும் அப்படித்தான் உள்ளது. எனவே, வேண்டாம் ராகுல் காந்தி தலைமை.
கலைப்பித்தன், கடலூர்.
வரலாறு
மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. காங்கிரஸ் கட்சி என்றாலே நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த கட்சி என்ற எண்ணம் மக்கள் மனதில் முன்பு இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியை சிறப்பாக வழிநடத்தக்கூடிய அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள். ராகுல் காந்திக்கு மட்டுமே காங்கிரஸை வழிநடத்தும் தகுதி இருப்பதாகக் கூறுவது தவறு. ராகுலின் அரசியல் செயல்பாடுகள் வெற்றியைத் தரவில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. ராகுல் காந்தி இல்லாமல் ஒருவரை கட்சியின் தலைவராகத் தேர்வு செய்வது நல்லது.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
விபரீத விளைவு
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது கட்சியை சரியாக வழிநடத்தவில்லை. மேலும், கட்சியிலுள்ள மூத்த தலைவர்களின் கருத்துகளை அவர் எந்த காலத்திலும் பொருட்படுத்தியதில்லை. அதனால்தான் தொடர்ந்து மூத்த தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர்; வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். கட்சியை வழிநடத்துவதில் அவருக்கு ஆர்வமோ, அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை. கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற அனுபவம் மிக்க தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியது கட்சிக்குப் பெரும் பின்னடைவே. இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையேற்பது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும்.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
அவமதிப்பு
மல்லிகார்ஜுன கார்கேயின் கருத்து சரியல்ல. மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கிய வரைவு அறிக்கையைப் பொதுவெளியில் கிழித்து எறியச் சொன்னவரும், கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே நான் தலைவர் தோல்வியடைந்தால் வேறு யாரோ தலைவர் என்ற மனோபாவம் கொண்டவருமான ராகுல் காந்திக்குத்தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் தகுதி உள்ளது என்று கூறுவது பொருளற்ற பேச்சு. இப்படிக் கூறியதன் மூலம், மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் மூத்த தலைவர்கள் பலரை அவமதித்து விட்டார். காங்கிரஸ் பேரியக்கத்தைக் கட்டிக் காக்கும் திறமையும், தகுதியும் கொண்ட மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸில் இருக்கின்றனர் என்பதே உண்மை.
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT