விவாதமேடை

"மத்திய அரசு, ஹிந்தியைக் கட்டாயமாக்கி இன்னொரு மொழிப்போரைத் திணிக்க முயல்கிறது என்கிற குற்றச்சாட்டு சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

19th Oct 2022 03:14 AM

ADVERTISEMENT

 இன்றியமையாதது
 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக ஹிந்தி உள்ளது. எனவே அம்மொழியைக் கற்றால் இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்று வேலைவாய்ப்பு பெறலாம்; வணிகம் செய்யலாம். வடமாநிலங்களிலிருந்து பலர் தமிழகம் வந்து தமிழ் கற்று வணிகம் செய்கிறார்கள். தாய்மொழி, ஆங்கிலம் அல்லாத மற்றொரு மொழியைக் கற்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு கூறுகிறது. அம்மொழி ஹிந்தி என்று கூறவில்லை. மொழியை அரசியலாக்கி சிலர் ஆதாயம் தேடுவது வருத்தமளிக்கிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஒருவர் பல மொழிகளைத் தெரிந்துகொள்வது இன்றியமையாதது.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 வாடிக்கை
 ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மத்தியில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுவது வழக்கம்தான். அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. சில நாட்களில் இக்குற்றச்சாட்டுகள் தானாகவே அடங்கி விடும். இது தமிழகத்தில் வாடிக்கைதான். கீரியும் பாம்பும் இறுதிவரை மோத விடப்படாது என்பதே உண்மை. வலிந்து திணிக்கப்படும் எந்தமொழியும் புறக்கணிக்கப்படும். அதே நேரம் தேவை, விருப்பத்தின் அடிப்படையில் ஒருவர் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதை எவராலும் தடுக்கவும் இயலாது.
 த. முருகவேள், விழுப்புரம்.
 வாய்ப்பு இல்லை
 மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்க முயல்கிறது என்கிற குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால் அவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நமக்கு இருக்கிறதா? இங்கு வெறும் வாக்குவங்கிக்காக மட்டுமே மொழியைப் பயன்படுத்துகிறார்கள். தமிழக கல்விக்கூடங்களில் தமிழ் மொழி பயிற்றுமொழி ஆகியுள்ளதா? அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? 1965-இல் தமிழகத்தில் ஹிந்தியை எதிர்த்து ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அப்போது இருந்த மொழியுணர்வு இப்போது இல்லை. எனவே இன்னொரு மொழிப்போர் உருவாவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை.
 கலைப்பித்தன், கடலூர்.
 ஆதாரமற்றது
 ஹிந்தித் திணிப்பு என்பது இல்லாததொன்று என்ற தன் நிலைப்பாட்டினை மத்திய அரசு ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளது. அதோடு மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியினில் கற்கும் வசதியினை புதிய கல்வித் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியைக் கட்டாயப்படுத்துவது, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஹிந்தியைப் பயிற்று மொழியாக்குவது போன்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்த வேண்டியது கட்டாயமில்லை. எனவே இன்னொரு மொழிப்போரைத் தூண்டுவதாகக் குற்றச்சாட்டுவது அர்த்தமற்றது; ஆதாரமற்றது.
 கே .ராமநாதன், மதுரை.
 கண்கூடு
 இக்குற்றச்சாட்டு சரியானதுதான். தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற காலம் அனைவரும் அறிந்ததுதான். தற்போது மீண்டும் படிப்படியாக ஹிந்தி மொழியைத் திணிக்கின்ற முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவது கண்கூடு. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. எந்த ஒரு மொழியும் திணிக்கப்படும்போது எதிர்ப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. ஒரு மொழியை விரும்பிக் கற்பது வேறு; கட்டாயப்படுத்தித் திணிப்பது வேறு. மொழி விஷயத்தில் நிதானமாக மத்திய அரசு செயல்பட வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 ஏற்கத்தக்கதல்ல
 பழைமையும் பெருமையும் மிகுந்த தமிழ்மொழியை எந்த மொழியாலும் அழித்துவிட முடியாது. அதே நேரத்தில், ஏற்கெனவே ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள நிலையில், நாட்டில் பெரும்பான்மையோர் பேசும் மொழி என்ற கோணத்தில் ஹிந்தியை இணைப்பு மொழியாக்க மத்திய அரசு முனைவது நிச்சயமாக ஏற்கத்தக்கதல்ல. நமது அரசியல் அமைப்பில் எல்லா இனமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மொழிக்கும் பொருந்தும். அதே நேரத்தில் தங்களது அரசியல் லாபங்களுக்காக மொழியின் பெயரால் பிரிவினை எண்ணத்தைத் தூண்டுவதும் மிகவும் தவறு.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 தவறென்ன?
 மக்கள் பல மாநிலங்களுக்கும் சென்று கல்வி கற்கவும், தொழில் செய்யவும் பல மொழிகள் தெரிந்திருப்பது நல்லதுதானே? இந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தி பேசப்படுவதால் அதனைக் கற்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. அதில் தவறென்ன? மக்கள் நலனுக்கு ஹிந்தி அவசியம்என்றால், அதை ஏன் மாநிலங்கள் எதிர்க்க வேண்டும்? ஹிந்தியை மாநில அரசு எதிர்க்கிறது என்பதற்காக தமிழக மக்கள் ஹிந்தி கற்காமலா இருக்கிறார்கள்? ஒவ்வொரு இந்தியனும் தன் விருப்பப்படி எந்த மதத்தையும் பின்பற்றலாம் எனும்போது, அந்த சுதந்திரம் மொழிக்கும் உண்டல்லவா? மக்களை வற்புறுத்த முடியாது.
 து. விஸ்வநாதன், கோபி.
 அவசியம்
 இக்குற்றச்சாட்டு தவறானது. மத்திய அரசு எந்தவொரு திட்டத்தை முன்னெடுத்தாலும், உடனே அதை எதிர்ப்பதையே வழக்கமாகக் கொண்டவர்கள்தான் ஹிந்தித் திணிப்பு என்று கூறுகிறார்கள். எனவே விருப்பமுள்ளோர் ஹிந்தி படிக்கலாம், அல்லது வேறு மொழியையும் படிக்கலாம். வடமாநில மக்கள் பெரும்பாலானோர் ஹிந்திதான் பேசுகிறார்கள். ஆகவே வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோரும், பிழைப்பை நாடிச் செல்வோரும் ஹிந்தி மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் பிற மாநிலங்களின் கலாசாரங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
 க. கருணாமூர்த்தி, செவிலிமேடு.
 எச்சரிக்கை
 எந்தவொரு மொழியையும் வலுக்கட்டாயமாக நடைமுறைப் படுத்தினால் அந்த முயற்சி நிச்சயம் தோல்வியிலேயே முடியும். எந்த மொழியையும் மக்கள் தாங்களாகவே விரும்பிக் கற்கவேண்டும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தமிழில் மட்டுமே கல்வி இருக்கவேண்டும். கல்லூரி கல்வியில் ஆங்கிலம் இருக்கலாம். ஹிந்தி மொழியைக் கற்க விருப்பப்படுவோர் தங்கள் சொந்த செலவில் கற்றுக் கொள்ளலாம். மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசும் ஹிந்தி மொழித் தொடர்பாக செயல்பாடுகளில் எச்சரிக்கையுடன் இருப்பது மாநிலத்தில் அமைதிக்கு நல்லது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 முற்றிலும் தவறு
 மத்திய அரசு ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரைச் சொல்லி ஹிந்தியை இங்கு நுழைக்க நினைப்பது முற்றிலும் தவறு. ஹிந்தியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொடுக்க எத்தனையோ பள்ளிகள் தமிழ்நாட்டில் உண்டு. மத்திய அரசு நடத்தும் பள்ளிகளும் உண்டு. அப்பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்திய அரசு, தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துவிட்டு, புறவழியாக ஹிந்தியை நுழைப்பது முற்றிலும் தவறானது. ஹிந்தி மொழி தேவைப்படுவோர், விரும்புவோர் அந்த மொழியைப் படித்துக் கொள்ளட்டும்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 அச்சுறுத்தல்
 மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்க முயல்கிறது என்கிற குற்றச்சாட்டு மிகவும் சரி. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச வேண்டிய தேவை என்ன? அவருடைய பேச்சு ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது என்பதே உண்மை. இந்தியாவின் முதலாவது பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு "ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை அவர்களை ஹிந்தி பயில கட்டாயப்படுத்த மாட்டோம்' என்று கூறியதை மத்திய அரசு வசதியாக மறந்துவிட்டது.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 ஆதரவு
 தேசியக் கல்விக் கொள்கையின் வழியாக மாநில மொழிகள் குறிப்பாக தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதும், அலுவல் மொழி என்ற பெயரில் ஹிந்தியும் ஆங்கிலமும் பயன்பாட்டிற்குரியவை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதும் ஹிந்தி மொழித் திணிப்பு அல்லாமல் வேறென்ன? தமிழகம் ஏற்கெனவே ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய மாநிலம் ஆனதால், அதனை நினைவில் கொண்டு துணிவுடன் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து குரல் கொடுத்துள்ளது. இதனைத் தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களும் ஹிந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT