விவாதமேடை

"தமிழகத்திற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது என்கிற முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் கருத்து சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

30th Nov 2022 03:36 AM

ADVERTISEMENT

ஏற்கவியலாதது
 தமிழகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது என்கிற பொன். மாணிக்கவேலின் கருத்து ஏற்கவியலாதது. கோவில் நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்கள், கோவிலுக்கு வரும் வருமானம், ஒழுங்குமுறை இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க அந்தந்த கோயில் பக்தர்களால் இயலாது. பக்தர்கள் வசதியாக கோவிலுக்கு வந்து செல்லும் வழிமுறைகளை அறநிலையத்துறைதான் வகுக்க முடியும். ஒரு கோயில் வருமானம் மிகுந்த கோயிலாக இருக்கும். இன்னொரு கோயில் வருமானமே இல்லாத கோயிலாக இருக்கும். வருமானமற்ற கோயில் திருப்பணிக்கும் நிர்வாக செலவுக்கும் வருமானம் மிகுந்த கோயில் நிதியைப் பயன்படுத்த அறநிலையத்துறையால்தான் முடியும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 தலையீடுகள்
 தமிழகத்தில் ஏனைய மதங்களின் வழிபாட்டு தலங்களின் சொத்துக்களை அவரவர்களே நிர்வகிக்கும் போது இந்து சமயத்தினர் ஏன் நிர்வகிக்க முடியாது? ஆங்கிலேய அரசால் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு இது. பின்பு வந்த அரசுகள் இதற்கென ஒரு துறையை ஏற்படுத்தி விட்டன. கோயில் நிலங்களை முறையாகப் பராமரிக்காமை, வருவாய் இழப்பு, சிலைகள் கொள்ளையடிக்கப்படல் என்று கோயில் சார்ந்து ஏராளமான பிரச்னைகள். அரசியல் கட்சிகள் கோயில்களின் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்கின்றன. வழக்கமான கோயில் நடைமுறைகளில் அநாவசிய தலையீடுகள். எனவே, கோயில்கள் விஷயத்தில் அரசு ஒதுங்கிக் கொள்வதே நல்லது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 முக்கியம்
 அறநிலையத்துறை இருப்பதால்தான் நிறைய ஆலயங்களுக்கு குட முழுக்கு விழாக்களும் இதர விழாக்களும் முறைப்படி நடக்கின்றன. இல்லாவிடில் சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஆலய சொத்துகள் பறிபோகும். ஒருநாட்டிற்கு காவல்துறை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறையும் முக்கியம். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நம் முன்னோர் ஆலயங்களுக்கு எழுதி வைத்துள்ளனர். அறநிலையத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் இருக்கலாம். அவற்றை சரிசெய்ய முனைய வேண்டுமே தவிர, அறநிலையத்துறையே வேண்டாமென்று கூறுவது சரியல்ல.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 நோக்கம்
 தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், வீடுகள் குறைந்த வாடகைக்கு அரசியல்வாதிகளுக்கோ, அவர்களுக்குத் தெரிந்துவர்களுக்கோ கொடுக்கப்படுகிறது. அவற்றால் கிடைக்கும் வருமானம், கோயில் நிர்வாகத்துக்குச் செல்லாமல் அரசுக்குச் செல்கிறது. இது நியாயமற்றது. கோயில்களுக்கு தங்கள் சொத்துகளை எழுதி வைப்பவர்களின் நோக்கமே இதனால் சிதைவடைகிறது. பூஜை செய்பவர்களுக்குக் குறைந்த சம்பளம் தரப்படுகிறது; பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருவாய், கோயில் பராமரிப்புக்குச் செலவிடப்படுவதில்லை. கோயில்களில் அரசு ஆதிக்கம் செலுத்தாமல் விலகியிருப்பதே சரியானது.
 கே. ராமநாதன், மதுரை.
 மிகவும் தவறு
 இந்து சமய அறநிலையத்துறை 40,000 }க்கும் மேற்பட்ட தமிழகக் கோயில்களை பராமரித்து வருகிறது. தமிழக அரசு, ஹிந்து சமயக் கோயில்களைப் பராமரிப்பதிலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை மீட்டெடுப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கோயில் நடைமுறைகளில் முறைகேடுகள் காணப்பட்டால் பக்தர்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் உள்ளது. மின்னஞ்சல் முகவரி உள்ளது. இப்படி, ஹிந்து கோயில்களைப் பராமரிப்பதில் தமிழக இந்து அறநி லையத்துறை சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிலையில், இந்துசமய அறநிலையத்துறையே தேவையில்லை எனும் பொன். மாணிக்கவேலின் கருத்து மிகவும் தவறானது.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 சரியானதே
 முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் கருத்து சரியானது. கோயில் நிலங்களை குத்தகை எடுத்தவர்கள் தலைமுறை தலையாக அவற்றை அனுபவித்து வருகின்றனர். கோயில்களுக்கு சொந்தமான ஏராளமான ஏக்கர் நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டன. இந்து அறநிலையத்துறை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கப்படுகிறது. அறநிலையத்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை வேறு துறைகளுக்கு பயன்படுத்துவது தவறு. பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்காமல் சுதந்திரமாக செயல்படுகின்றன. அவற்றின் வருமானம் அரசுக்கு வருவதில்லை. எனவே, இக்கருத்து சரியானதே.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 புதிய அத்தியாயம்
 தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் பல ஆலங்களில் அபகரிக்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன; நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கட்டட வாடகைகள் வசூலிக்கப்பட்டுள்ளன; பழுதுபட்ட ஆலயங்கள் பழுதுநீக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன; ஒரு வேளை பூஜைகூட நடைபெற வசதியில்லா ஆலயங்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் காரணமான தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஒரு புதிய அத்தியாயத்தைப்படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருவது கண்கூடு. ஒரு துறையில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டி சரிசெய்வதை விடுத்து அத்துறையே வேண்டாமென்பது சரியன்று.
 த. முருகவேள், விழுப்புரம்.
 குழப்பம்
 நீண்ட காலமாகவே தமிழகத்தில் ஹிந்து சமயக் கோயில்களை அரசின் இந்து சமய அறநிலையத்துறையால்தான் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருசிலருக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கோயிலுக்கும் நிலம், பொருள், தங்கம், வெள்ளி, பணம் என பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அறநிலையத்துறையில் இருந்து கோயில்கள் விடுவிக்கப்பட்டுவிடாடல் இவற்றை எவரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பம் ஏற்படும். தனிநபர் வசம் கோவில்களை ஒப்படைக்கும்போது அக்கோயில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பாதுகாப்பாக இருக்குமா? ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே நல்லது; பாதுகாப்பானது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 அமைப்பு தேவை
 ஆலயங்களில் சிலைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்துகள் உள்ளது. கோயில் அறங்காவலர்கள் அரசியல் கட்சிகள் சாராத நேர்மையானவர்களாக இருக்கவேண்டும். ஆனால், இங்குஅரசியல் ஆலயங்களில் நுழைந்து காலங்காலமாக இருந்துவரும் நடைமுறைகளை மாற்றுகிறது. கோயில் சொத்துகளைப் பாதுகாக்கவும், கோயில்களில் பாரம்பரிய நடைமுறைகள் தடையின்றித் தொடரவும் ஓர் அமைப்பு தேவை. இறை நம்பிக்கையும் தொண்டுள்ளமும் உடையவர்களும் மடாதிபதிகளும் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு கோயில்களை அதன்வசம் ஒப்படைக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 கட்டாயம் தேவை
 முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் கூற்றை ஏற்க இயலாது. ஒரு சில கோயில்களில் வைரம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன. பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் பணமும் கோடிக்கணக்கில் சேர்கிறது. ஆனால், ஒருசில கோயில்கள் போதிய வருமானம் இல்லாததால் ஒரு வேளை பூஜைகூட செய்ய இயலாத நிலையில் உள்ளன. புகழ் பெற்ற கோயில்களுக்கு வரும் வருமானத்தை சரியாக நிர்வகிக்கவும், நிதியுதவி வேண்டும் கோயில்களுக்கு அந்த நிதியைப் பகிர்ந்தளிக்கவும் ஒரு துறை கண்டிப்பாகத் தேவை. அந்தத் துறையாகத் தற்போது செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை கட்டாயம் தேவை.
 நா. குழந்தைவேலு, மதுரை.
 கலைக்கூடங்கள்
 தமிழகத்தில் கோயில்களை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை மிகவும் அவசியம். நமது பாரம்பரியத்தின் விழுமியங்களாக இருப்பவை திருக்கோயில்களும் அறம் வளர்த்த மடங்களுமே ஆகும். இதனால்தான் மன்னர்கள் தாங்கள் வாழ்ந்த கோட்டைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் திருக்கோயில்களை நிறுவினார்கள். அவை கலைக்கூடங்களாவே மிளிர்ந்தன. அறநிலையத்துறையில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை கோயில் உண்டியல் வசூலை எடுத்து வங்கிகளில் போட்டுவைக்கும் அமைப்பாக செயல்படாமல் அறத்தை காக்கும் துறையாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 இன்றியமையாதது
 இக்கருத்து சரியானதல்ல. திருட்டு போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சிலைகளை மீட்டதற்காக அவருக்கு ஆன்மிகவாதிகள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். அதே சமயம் தமிழ்நாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை மிகவும் இன்றியமையாதது. கோயில்ள சொத்துகளைப் பாதுகாக்கவும, கோயில் சொத்துகளை அபகரித்தவர்களிடமிருந்து மீட்கவும், கோயில் நகைகளைப் பாதுகாக்கவும், சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் இந்து அறநிலையத்துறை அவசியம். அத்துறை, கோயில்களைச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். அது அக்கோயில்களை என்றோ கட்டிய எளிய மனிதர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றியாகும்.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT