விவாதமேடை

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

23rd Nov 2022 03:21 AM

ADVERTISEMENT

நியாயமல்ல
 ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கும் கருத்து சரியே. கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். மீண்டும் பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பும் அவருக்கு இருந்தது. கொலையில் தொடர்புடையது வேற்றுநாட்டு இயக்கம். ராஜீவ் காந்தி மட்டும் இறக்கவில்லை. அவருடன் பதினேழு பேர் இறந்துள்ளனர். அவர்களுடைய குடும்பத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் இவர்கள் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். இவர்கள் விடுவிக்கபடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. இது ஒரு தவறான முன்னுதாரணமே. இதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
 பி. பாலசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம்.
 நீதி கிடையாதா?
 ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதில் எந்தத் தவறும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. அது பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய சதிச்செயலால் வெடி விபத்து நிகழ்ந்து ராஜீவ் காந்தி, காவல்துறையினர், அப்பாவிப் பொதுமக்கள் என பலரும் பலியாகியுள்ளனர். பலியான குடும்பத்தினரின் நிலையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நீதி கிடையாதா? குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நிலை இருந்தால்தான் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டாகும். கொடுங்குற்றத்துக்கும் தண்டனை இல்லை என்கிற நிலை உருவாவது நாட்டுக்கு நல்லதல்ல.
 எம். ரகோத்தமன், திருவண்ணாமலை.
 ஏற்கத்தக்கதன்று
 ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது அவர்கள் நிரபராதிகள் என்பதற்காக இல்லை. மனிதம் மரிக்கவில்லை என்பதைக் காட்டவே. வள்ளுவர் குறிப்பிட்ட "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்' (குறள் 543) என்பதற்கேற்ப, சட்ட நூல், பொது ஒழுங்கு இவற்றையெல்லாம் சீராய்வு செய்த நிலையில்தான் அறுவரும் விடுதலை பெற்றனர். கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சமாய் சில ஆண்டுகளுக்கு முன்னரே மன்னிப்பை வழங்கிவிட்டது. எனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கும் கருத்து ஏற்கத்தக்கதன்று.
 தெ. முருகசாமி, புதுச்சேரி.
 தவறான நடவடிக்கை
 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் சட்ட நுணுக்கதின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி மட்டுமல்லாது, காவல்துறையினர், பொதுமக்கள் என்று பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இது திட்டமிட்ட சதிச்செயலே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் ராஜீவ் குடும்பத்தினர் மன்னித்து உள்ளனர் என்ற காரணத்திற்காக, ஏனைய அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதையும் கருத்தில் கொள்ளாமல் விடுவித்துள்ளது தவறான நடவடிக்கை. இனி அரசியல் காரணங்களினால் கொல்லப்பட்டால் இந்த வழக்கு ஒரு தவறான உதாரணமாக கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளது ஏற்கத்தக்கதே.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 அர்த்தமற்றது
 ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜீவ் கொலையில் தொடர்புடையவர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றம் விடுவிக்கவில்லை. நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டின் மீது மாநில ஆளுநர் முடிவெடுக்க கால தாமதம் செய்துவிட்டார். உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் எடுக்காததன் விளைவே இன்று ஆறு பேர் விடுதலை. உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் அணுகியிருந்தால் இவர்களுக்கு எப்போதோ உரிய தண்டனை கிடைத்திருக்கும். அப்படியிருக்க விடுதலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறுவது அர்த்தமற்றது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 வியப்பில்லை
 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவிட்டதால் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனை காங்கிரஸ்காரரான ஜெய்ராம் ரமேஷால் ஏற்றுக்கொள்ள முடியாததில் வியப்பில்லை. ராஜீவ் காந்தி குடும்பத்தினரான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைவருமே ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அவர்கள் சிறையில் கழித்துவிட்டனர். இந்த தண்டனையே போதுமானது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 நன்னடத்தை
 ஜெயராம் ரமேஷ் கூறியிருப்பது தவறு. சில மாதங்களுக்கு முன்னர், பேரறிவாளனை விடுதலை செய்ய பயன்படுத்திய அந்த நன்னடத்தை விதிகளை சிறையில் வாடும் மற்றவர்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து. அந்த அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இந்த ஆறு பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்துவிட்டார்கள் என்பதாலும், சிறையில் நல்ல முறையில் நடந்துகொண்டார்கள் என்பதாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 அளவுகோல்
 படுகொலை செய்யப்பட்டவர் இந்த தேசத்தின் முன்னாள் பிரதமர். அவரது படுகொலை இந்த பாரத தேசத்தின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால். ராஜீவ் காந்தி என்கிற தனிப்பட்ட மனிதரின் இறப்பல்ல. ராஜீவ் காந்தி மட்டுமா இறந்தார்? அவரோடு காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என்று பலரும் இறந்தனர். சிலர் இந்த விடுதலையை மனிதாபிமான அடிப்படையிலானது என்கிறார்கள். அந்த மனிதாபிமான அளவுகோல், அந்தப் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பொருந்தாதா? ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டதைவிட மோசமான விஷயம், அரசியல் கட்சிகள் அவர்கள் விடுதலையை வரவேற்றுக் கொண்டாடுவது.
 முகதி. சுபா, திருநெல்வேலி.
 வாக்குவங்கி
 உச்சநீதிமன்றம் ஆறு பேரை விடுதலை செய்திருக்கலாம். ஆனால், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியக் குடிமக்கள் ஒருபோதும் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமானவர்களை மன்னிக்க மாட்டார்கள். சிலஅரசியல் கட்சிகள், வாக்குவங்கி அரசியலுக்காக கொலைக்குற்றவாளிகளைக் கொண்டாடுவது ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்காது. ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இப்படிக் கூறுகிறார் என்று கூறுவது தவறு. காங்கிரஸ் கட்சியைச் சேராத, அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்கூட இந்த ஆறு பேர் விடுதலையை ஏற்க மாட்டார்கள் என்பது உறுதி.
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 இருவித நிலைப்பாடு
 இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்கள் நேரடியாக தங்களுக்குத் தெரிந்து எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. அவர்களுக்கு தெரியாமல் அவர்களை சிலர் பயன்படுத்தி உள்ளனர். மேலும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் சிறையில் இருந்துள்ளார்கள். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தால் கூட அன்றைக்கே பிரச்னை முடிந்து இருக்கும். ஆயுள் தண்டனை மரணத்தை விட கொடியது. உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆறு பேரை விடுதலை செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவித நிலைப்பாடு உள்ளது. எனவே ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது சரியல்ல.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 நூற்றுக்கு நூறு
 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதை சாதாரண குடிமகனால் கூட ஏற்றுக்கொள்ள இயலாது. தேசிய அளவில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இவர்களுக்கு முதலில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆயுள் முடியும் வரை சிறையில் இருக்க வேண்டியதுதான் நியாயம். தமிழகத்தில் இப்படி ஒரு கொடுஞ்செயல் நிகழக் காரணமானவர்களை மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் கூடாது. ஜெய்ராம் ரமேஷ் கூயியிருப்பது நூற்றுக்கு நூறு சரியான கருத்தே.
 நா. குழந்தைவேலு, மதுரை.
 மன்னிப்பு
 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவருமே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டனர். தங்கள் இளமையை சிறையிலேயே தொலைத்தவர்கள். ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரே அவர்களை மன்னித்து விட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவர்களின் சிறைவாசத்தில் இவர்களின் குடும்பங்கள் நிலைகுலைந்து போய்விட்டன. தமிழக மக்களைப் பொறுத்தவரை ஆறு பேர் விடுதலையை வரவேற்புக்குரியதாகவே பார்க்கின்றனர். எனவே, உச்சநீதிமன்றம் ஆறு பேரை விடுதலை செய்தது ஏற்கத்தக்கதே. ஜெய்ராம் ரமேஷ் கூறுவது ஏற்கவியலாதது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT